மனம் திறந்தது

"இன்று எப்படியாவது அவளிடம் ஐ லவ் யு சொல்லி விட வேண்டும்…!"

முடிவோடு தொலைபேசியை எடுத்தேன்… ஒவ்வொரு நம்பரையும் டயல் செய்ய ஆரம்பிக்க…

விரல்கள் நாட்டியம் ஆடத் துவங்கி இருந்தன..!

எப்படியோ இணைப்பு கிடைக்க… என்னவள் "விழிப்புடன்" ஹலோ என்றாள் எந்தப் பதட்டமும் இல்லாமல்….

என்னக்குள்ளோ கூச்சம், நடுக்கம், தயக்கம்…. என அத்தனையும் சேர்ந்து கொண்டு சொல்ல விடாமல் தடை போட்டது. மனமோ அடித்துக் கொண்டது. இதற்கு மேலும் தயங்கினால் காலம் கடந்து போய் விடும்…என்று…!

சுதாத்துக் கொண்டு…மென்று முழுங்கி… ஐ லவ் யு ..என்றேன்.

அவ்வளவு தான்…! நான் எதிர்பார்த்தது போலவே பதறிப் போனவள்… "என்னங்க இது…பேரன்,பேத்தி எடுத்தாச்சு…இப்போ போய்…..போங்க…! போய்…நம்ம மகனையும், மருமகளையும் நல்லா பாத்துகோங்க…நா.. இங்க மக பிரசவம் முடிஞ்சோன்ன சீக்கிரம் அங்க வந்துடறேன். இப்போ போனை வச்சிடறேன்… உடம்ப நல்லாப் பாத்துகோங்க.. சாயா?…."

அவள் பேசி விட்டு தொலைபேசியை வைத்து விட்டிருந்தாலும்…அவள் மனம் இப்போது என்னையே நினைத்து கொண்டிருக்கும். பின்னே, 30 வருட தாம்பத்தியத்தில் திறக்காத மனம் இப்போது தானே திறந்து இருக்கிறது!….

இத்தனை காலம் இல்லாது.. இப்போது மட்டும் எப்படி வாய் திறந்து… ஈகோ இல்லாமல்?

நேற்று காதலர் தினமாம்.. என் மகன் தன் மனைவியிடம் மனதார ஐ லவ் யு…சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தான்.. இந்தக் கிழ மர மண்டைக்கு உரைத்தது..! பாழாய்ப் போன ஈகோவினால் இத்தனை காலம் என் மனைவிக்கு இந்த சின்னச் சந்தோஷத்தைக் கூட தராமல் இருந்து விட்டேனே என்று…!

நான் வளர்த்த பிள்ளை எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது என்பதை உங்களிடம் மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் யாடமும் சொல்லி விடாதீர்கள்…ப்ளீஸ்… முக்கியமாய் என் மனைவியிடம்..

About The Author