மனிதரில் எத்தனை நிறங்கள்!(41)

It is not so important to know everything as to appreciate what we learn.
– Hannah More

மேரியின் முகம் வெளிறியதை இருவருமே கவனிக்கத் தவறவில்லை. டேவிட் மனைவியிடம் கேட்டார். "என்ன மேரி…."

"ஒண்ணுமில்லை. திடீர்னு ஏதோ தலை சுத்தற மாதிரி இருந்தது"

ஆர்த்திக்கு மேரியைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘இந்த ஆண்ட்டிக்கும் என்னை மாதிரி பொய் சொல்ல சரியா வர்றதில்லை. பாவம்’

டேவிடிற்கும் அது பொய் என்று தெரிந்தாலும் ஆர்த்தி இருக்கும் போது கேட்க வேண்டாம் என்று எண்ணினார். ஆர்த்தியிடம் தொடர்ந்து சொன்னார். "இன்னொரு விஷயம் என்னன்னா அந்த நாள் எங்களுக்குத் தெரிஞ்ச எத்தனையோ பேர் விபத்துல மாட்டியிருக்காங்க. சில பேரோட பிணம் கூட கிடைக்கலை. உங்க சித்தியோட அண்ணா, அண்ணி, அப்புறம் உங்க பங்களாவில் அப்ப வேலைக்கு இருந்த விஜயா எல்லாம் போன சுவடே தெரியலை"

ஆர்த்தி இதற்கு மேலும் சந்தேகப்படுவது போல காண்பித்தால் விஷயம் தன் வீட்டார் காதில் எட்டி விடும் என்ற பயத்தில் சொன்னாள். "சேச்சே.. நான் அப்படி சந்தேகப்படலை. அம்மா அங்கே ஏன் போனாங்கங்கற கேள்வி தான் என்னைக் குழப்பிச்சு அங்கிள்….. அந்த வேலைக்காரி விஜயா தான் அந்த சமயத்துல அம்மா கூட இருந்தவளா?"

டேவிட் சொன்னார். "ஆமா…"

மேரி முகம் இயல்பு நிலைக்கு இன்னும் மாறவில்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"என்ன மேரி அந்த விஜயா தானே ஆனந்தி கூட அந்த சமயத்துல இருந்தது…. ஒரு வேளை அவளும் ஆனந்தியும் அந்த விபத்து பகுதிக்கு சேர்ந்து தான் போனாங்களோ என்னவோ"

கணவன் தன்னிடம் பேசியதைக் கேட்டு ஏதோ உலுக்கியதைப் போல பதறி இயல்பு நிலைக்குத் திரும்பிய மேரி "என்ன கேட்டீங்க" என்றாள்.

மனைவியை ஒரு வித எரிச்சலுடன் பார்த்த டேவிட் தான் சொன்னதை மறுபடியும் சொன்னார்.

மேரி சொன்னாள். "ஆமா அந்த விஜயா தான் அப்ப கூட இருந்தவள். ஆனா அவளை மாத்தணும்னு சில நாளாவே ஆனந்தி சொல்லிகிட்டு இருந்தாள்…."

ஆர்த்திக்கு அந்த வேலைக்காரி விஷயமும் புதிராக இருந்து வந்ததால் ஆவலோடு கேட்டாள். "ஏன் ஆண்ட்டி"

"அவள் சரியில்லைன்னு சொல்லிகிட்டு இருந்தாள். ஏன்னு சொல்லலை. சரி வாம்மா சாப்பிட்டுகிட்டே பேசலாம்"

மேரியின் சமையல் பிரமாதமாக இருந்தது. அவள் பரிமாறிய விதமும் ஒரு தாயினுடையதாக இருந்தது. பேச்சு வேறு விஷயங்களுக்கு மாறியது. ஆர்த்திக்கு மேரியிடம் கேட்க இன்னும் நிறைவே இருந்தாலும் ஒரே நாளில் அத்தனையும் கேட்டு சந்தேகத்தைக் கிளப்பிவிட வேண்டாம் என்று தோன்றியது.

சாப்பிட்டு முடித்த போது சந்திரசேகரிடமிருந்து போன் வந்தது. டேவிட் தான் போனை எடுத்தார். பேசி முடித்த பின் ஆர்த்தியிடம் சொன்னார். "உங்கப்பா உன்னை ரெடியா இருக்கச் சொன்னான். ஷாப்பிங்குக்கு கோயமுத்தூர் போகணுமாம். அரை மணி நேரத்துல நேபாளத்தைக் காரோடு அனுப்பறானாம்…."

ஆர்த்தி முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த மேரி சொன்னாள். "அர்ஜுனைத் தான் இவர் நேபாளம்னு சொல்றார். அவனை உங்க பெரியத்தை நேபாளம் டூர் போனப்ப பார்த்து கூட்டிகிட்டு வந்தாங்க. உன் சின்னத்தை ஆரம்பத்துல அவனை நேபாளம்னு சொல்ல அந்தப் பேரே நின்னு போச்சு. ஆனா உங்க பெரியத்தை கேட்டா மட்டும் சத்தம் போடுவாங்க. அவங்க முன்னால் மட்டும் எல்லாரும் அர்ஜுன்னு சொல்வாங்க….."

டேவிட் சிரித்துக் கொண்டே விளக்கினார். "ஸ்கூல்ல வாத்தியார்களுக்குப் பட்டப் பெயர் வைப்பாங்க தெரியுமா? பசங்களுக்கு அந்த வாத்தியாரோட ஒரிஜினல் பெயர் சொன்னா சட்டுன்னு விளங்காது. பட்டப் பெயர் தான் அவங்களுக்குள்ள பயன்படுத்துவாங்க. அந்த மாதிரி தான் இது ஆயிடுச்சு. அவன் வித்தியாசமாவும் இருந்ததாலயோ என்னவோ இப்படி நேபாளம்கிற பெயரே பழக்கத்துக்கு வந்துருச்சு. உங்கப்பன் பெரியக்கா முன்னால் கூப்பிட்டு அடிக்கடி திட்டு வாங்குவான்….."

மேரி சொன்னாள். "முதல்ல எல்லாம் எனக்கு அவனைப் பார்த்தாலே பயமா இருக்கும். போகப் போக பழகிடுச்சு. ஆனா இப்ப கூட சிவகாமியக்கா கூட அவன் நிக்கறப்ப துர்க்கை பக்கத்துல ராட்சஸன் நிக்கற மாதிரி தோணும். அவங்களானதுனால அவனைக் கூடவே வச்சிருக்காங்க. வேற யாரானாலும் பக்கத்துலயே சேர்க்க மாட்டாங்க.."

டேவிட் சொன்னார். "அந்த விஷயத்துலயும் பெரியக்கா க்ரேட்டுன்னு தான் சொல்லணும். அவங்க இவ்வளவு அழகா இருந்தாலும் என்னைக்குமே சொல்வாங்க. "சொல்லி பெருமைப்பட வேறெதுவுமே இல்லாதவன் தான் அழகாயிருக்கோம்னு பெருமைப்பட்டுக்குவான். அதுக்குப் பெரிய முக்கியத்துவம் குடுக்கறவன் முட்டாள்"னு. அவங்க கிட்ட வார்த்தை வேற நடவடிக்கை வேறன்னு இருந்ததேயில்லை. அவங்களத் தவிர யாருமே நேபாளத்து கிட்ட முகத்தைப் பார்த்து பேசறதில்லை. அவங்க ஒருத்தர் தான் அவன் கிட்ட பேசறப்ப அந்த அசிங்கமான முகத்தை நேரா பார்த்துப் பேசறவங்க……"

ஆர்த்திக்கும் அவர் சொல்வது உண்மை என்று பட்டது. அந்த அசிங்கமான முகத்தைப் பார்த்து நேராக முகம் சுளிக்காமல் அருவருப்பு அடையாமல் பேசுவது சுலபமல்ல என்பதில் சந்தேகம் இல்லை. சிவகாமி ஒரு விதத்தில் இமயமாகத் தெரிந்தாள். இன்னொரு விதத்தில் பார்த்தால் உயரத்தின் அளவுக்கு சந்தேகத்தைக் கிளப்பினாள். திடகாத்திரமான அசுர பலம் கொண்டவனாய்த் தெரிந்த அவனைக் கூட்டிக் கொண்டு வந்து தன்னுடன் வைத்திருப்பதற்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா என்று சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை.

"அந்த நேபாளத்துக்கு இங்க என்ன வேலை?"

"எதுவும் செய்வான். பொதுவா உங்க பெரியத்தைக்குக் கார் ஓட்டுவான். அவங்க நிழல் மாதிரி பின்னாடியே இருப்பான்….."

டேவிட் சொன்னதில் முதல் வாசகம் மட்டும் ஆர்த்தியின் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. "எதுவும் செய்வான். எதுவும் செய்வான். எதுவும் செய்வான்……."

"என்ன ஆர்த்தி எங்கேயே போயிட்ட மாதிரி இருக்கு…."

ஆர்த்தி மழுப்பினாள். "இல்லை. இந்த மாதிரி முகத்துல சதை நிறைய மேடு பள்ளமாய் வளர்ந்திருக்கறது எதனாலன்னு யோசிச்சேன்…"

"அது கோடியில் ஒருத்தருக்கு ஏற்படக்கூடிய ஒருவித அபரிமிதமான வளர்ச்சி. அதற்கு வாயில நுழையாத ஒரு மெடிக்கல் டெர்ம் இருக்கு……" டேவிட் சொல்லிக் கொண்டே போனார்.

அர்ஜுன் கார் ஹாரனை அழுத்திய போது தான் டேவிட் நிறுத்தினார். "வந்துட்டான். சரி நீ கிளம்பும்மா. இன்னொரு நாள் வா. நாங்களும் அடிக்கடி வர்றோம்……"

மேரி கண்கள் பனிக்கச் சொன்னாள். "எனக்கென்னவோ உன்னைப் பார்க்கிறப்ப ஆனந்தியே வந்துட்ட மாதிரி தோணுது. நான் என் தோழியை இழந்துடலைன்னு படுது…."

அந்தப் பாசத்தில் ஆர்த்தியும் மனம் நெகிழ்ந்து போனாள். தலையாட்டி விட்டுக் கிளம்பினாள்.

வெளியே அர்ஜுன் கார்க் கதவைத் திறந்து நின்றிருந்தான். அவள் அமர்ந்தவுடன் கார்க் கதவை சாத்தி விட்டு டேவிட் தம்பதியரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் காரைக் கிளப்பிக் கொண்டு போனான்.

கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு டேவிடும் மேரியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். உள்ளே வந்தவுடன் டேவிட் கேட்டார். "நான் ஆனந்தி செத்ததைப் பத்தி சொல்லச் சொல்ல உன் முகம் பயத்துல வெளுத்துடுச்சு. என்ன விஷயம் மேரி?"

மேரி தயக்கத்துடன் சொன்னாள். "ஒரு வேளை அது விபத்தாய் இல்லாம கொலையா கூட இருக்க சான்ஸ் இருக்குங்க…."

"என்ன மேரி இத்தனை வருஷம் இல்லாம இப்ப நீ புது குண்டைத் தூக்கிப் போடறே…."

"இத்தனை வருஷம் அது விபத்துங்கற கோணத்துலயே நினைச்சுகிட்டு இருந்தோம். இப்ப ஆர்த்தி யதார்த்தமாய் இல்லைன்னு சொன்னப்ப வேற பல விஷயங்களும் ஞாபகத்துக்கு வருது….."

மேரி விவரிக்க விவரிக்க டேவிட் முகமும் வெளிறி பின் கருத்தது. "சரி சரி…மேரி நீ இதையெல்லாம் ஆர்த்தி கிட்ட சொல்லிகிட்டு இருக்காதே. சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. என்ன சொல்றே.."

மேரி தலையசைத்தாள். பின் ஒரு கனத்த மௌனம் அவர்களை அழுத்தியது.

(தொடரும்)

About The Author