மனிதரில் எத்தனை நிறங்கள்! (59)

The effect of one good-hearted person is incalculable.
– Oscar Arias Sanchez

கார் வேகம் சற்று குறைய சிவகாமி வியாபார சிந்தனைகளில் இருந்து மீண்டாள். தெருவின் ஓரத்தில் நடந்து கொண்டு இருந்த ஒரு இளம் பெண்ணைத் தவிர தெருவில் யாரும் இல்லை. வாகனங்களும் இல்லை. இதற்கு முன் கார் வேகம் குறைந்த போது கூட அதே இளம் பெண் தான் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தாள். தற்செயல் என்பது இரண்டாவது முறையாக நடந்தால் அது தற்செயலாக இருக்க முடியாது.

சிவகாமிக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. நேரடியாக அர்ஜுனிடம் கேட்டாள். "யாரந்தப் பொண்ணு?"

அர்ஜுன் தூக்கிவாரிப் போட்டது போல் விழித்தான். "மேடம்?"

"யாரந்தப் பொண்ணுன்னு கேட்டேன்"

அர்ஜுன் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. எப்போதும் சலனமில்லாமல் இருக்கக்கூடியவன் இப்போது அவமான உணர்வால் நெளிந்தான். "சாரி மேடம்"

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை"

"ஒரு ஸ்கூல்ல டீச்சராய் இருக்கிறாள். பேர் வனிதா"

"சரி. சாரி எதுக்கு சொன்னாய்?"

அர்ஜுனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. மௌனமாக இருந்தான். கார் வழக்கமான வேகத்தில் ஓட நல்ல வேளையாக சிவகாமி உடனடியாக அவனை மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

சிவகாமிக்கு மனதில் ஒருவித குற்ற உணர்வு உறுத்த ஆரம்பித்தது. பத்து வயதில் அவனை அழைத்து வந்திருக்கிறாள். அழைத்து வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆரம்பித்து விட்டன. இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.

"அந்தப் பொண்ணை எவ்வளவு நாளாய் தெரியும்?" சிவகாமி விடுவதாக இல்லை.

அர்ஜுன் தர்மசங்கடத்துடன் சொன்னான். "ஆறு மாசமா தெரியும். ஆனா அந்தப் பொண்ணுக்கு என்னைத் தெரியாது மேடம். அவ என்னைப் பார்த்தது கூட இல்லை. நான் பேசினதும் இல்லை".

சிவகாமி கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தாள்.

அவன் அந்தக் கேள்விக்குறிக்கு தாழ்ந்த குரலில் பதிலளித்தான். "என் முகத்தைப் பார்த்து உங்களைத் தவிர யாரும் பேசறதில்லை மேடம்"

சிவகாமிக்கு மனதை என்னவோ செய்தது. சிறிது நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள்.

"உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா?"

"எனக்குப் பிடிச்சிருந்து என்ன பிரயோஜனம் மேடம். என்னை யாருக்காவது பிடிக்குமா?"

"அவள் குடும்பத்தப் பத்தி சொல்லு"

அர்ஜுன் தர்மசங்கடத்துடன் சிவகாமியைப் பார்த்தான். அவனுக்கு அவள் இந்த விஷயத்தை இத்துடன் விட்டு விட்டால் தேவலை என்று தோன்றியது. மெள்ள தயக்கத்துடன் சொன்னான். "ஏழைக் குடும்பம். அம்மா இல்லை. அப்பா ஒரு சேட்டு கிட்ட வேலை பார்க்கறார். தம்பி ப்ளஸ் டூ படிக்கறான்…"

சிவகாமி சிந்திக்க ஆரம்பித்தாள். அர்ஜுன் தர்மசங்கடம் குறையாமல் மௌனமாகக் காரை ஓட்டினான்.

சிவகாமியின் கார் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது சங்கரன் தோட்டத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தேவனின் "மிஸ்டர் வேதாந்தம்" படித்துக் கொண்டிருந்தார். அதை அவர் எத்தனையாவது முறையாகப் படிக்கின்றார் என்பது அவருக்கே தெரியாது. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்தார். மனைவி காரில் இருந்து இறங்கி நேரடியாக அவரை நோக்கி வரவே புத்தகத்தை மூடினார்.

‘ஏதோ ஒரு பிரச்சினை அவளை பாதித்திருக்கிறது’ என்பதை அவள் வந்த விதத்தில் இருந்தே அவர் கண்டு பிடித்தார். அதிகாலை, சாப்பிட்ட பிறகான இரவு வேளை தவிர மற்ற நேரங்களில் வந்து கதைக்க அவளுக்கு நேரம் இருப்பதில்லை. பிசினஸ், வீட்டு காரியங்கள் என்று அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள். ஆபிஸ் சம்பந்தமான வேலைகள் பற்றி அவள் என்றுமே அவரிடம் பேசியதில்லை. வீட்டு சம்பந்தமான விஷயங்களில் கூட அவருக்குத் தெரியத் தேவை இல்லாதவை என்று அவள் சில விஷயங்களைச் சொல்வதில்லை. அவரும் துருவிக் கேட்பதில்லை. ஆனால் பெரிதாக ஒரு விஷயம் அவளைப் பாதிக்குமானால் அவள் அவரிடம் சொல்லாமல் இருந்ததில்லை. அவளை எதுவும் பெரிதாகப் பாதிப்பதில்லை என்பது வேறு விஷயம். அபூர்வமாய் சில விஷயங்கள் அவளையும் மீறி பாதிப்பதுண்டு.

அவள் வந்து எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தவுடன் கேட்டார். "என்ன சிவகாமி?"

சிவகாமி அர்ஜுன் விஷயத்தைச் சொன்னாள். "….. நான் பெரிய தப்பு செஞ்சுட்ட மாதிரி தோணுதுங்க. பத்து வயசுல கூட்டிகிட்டு வந்தேன். நான் மனசுல நினைச்சு முடிக்கறதுக்குள்ள அவன் எதையும் எனக்காக செஞ்சுட்டு வந்தான். ஆனா அவனுக்கும் இயல்பான உணர்வுகள் இருக்கும்னு இவ்வளவு நாள் நான் நினைச்சுப் பார்க்காம இருந்துட்டேன்னு மனசு உறுத்துதுங்க. இப்ப அவனுக்கு 35 வயசாச்சு. இன்னும் தனிமரமாவே இருக்கான். அவனுக்குன்னு ஒரு துணை, ஒரு குடும்பம்னு செஞ்சு கொடுக்காம நான் அலட்சியமா இருந்துட்டேன்னு தோணுது…"

சங்கரன் மனைவியைக் கனிவுடன் பார்த்தார். "சிவகாமி, அவனுக்கு அந்த விகாரமான முகம் இல்லாட்டி நாம எதாவது செஞ்சுருக்கலாம். நம்மால முடியாத காரியத்தை நாம் எப்படி செய்ய முடியும், சொல்லு"

"என்னால முடியாத காரியம்னு நான் எதையும் நினைச்சதில்லை"

அவள் குரலில் தொனித்த அந்த அசாதாரண உறுதி அவரை பயப்பட வைத்தது. அந்தப் பெண் வனிதாவை எப்படியாவது அர்ஜுனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவாள் என்பதில் அவருக்கு சந்தேகமேயில்லை. அவசரமாக அவளிடம் சொன்னார். "சிவகாமி, இதெல்லாம் பலவந்தப்படுத்தி செய்யற காரியம் இல்லைங்கறது உனக்குத் தெரியாததல்ல. அந்தப் பொண்ணு அல்ல எந்தப் பொண்ணும் அவன் முகத்தைப் பார்க்கக் கூட விரும்ப மாட்டா."

"மாத்த முடியாததுன்னு எதுவும் இல்லைங்க. இந்த இருபத்தியொராவது நூற்றாண்டுல இருந்துகிட்டு அப்படிச் சொல்றதுல அர்த்தமேயில்லை. ப்ளாஸ்டிக் சர்ஜரிங்கறது இந்த காலத்தில் பெரிய விஷயமேயில்லை. நான் அர்ஜுன் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு மாத்தப் போறேன். அதுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. அப்புறமா அவன் கல்யாணத்தைப் பத்தி பேசலாம்….."

அவள் முடிவு செய்து விட்டாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனால் அவள் முகத்தில் இன்னும் அந்தக் குற்ற உணர்ச்சி தங்கி இருந்ததைப் பார்த்து சங்கரன் கேட்டார். "நல்ல விஷயம். அது தான் தீர்மானிச்சுட்டியே. இன்னும் ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"

"அவனோட இந்த 35 வயசுல தோணியது அவனோட 25 வயசுலயே எனக்குத் தோணியிருந்தா இந்தப் பத்து வருஷமும் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு தோணுதுங்க"

சங்கரன் நெகிழ்ந்து போனார். பெற்ற மகனை அனாதரவாக விட்டுப் போன ஒரு தாயிற்கு இருக்காத அந்தக் குற்ற உணர்ச்சி, அவனுக்கு இத்தனை செய்த பின்னும் இவளுக்குத் தோன்றுவது அவருக்கு பிரமிப்பாக இருந்தது. எப்போதும் போல தனக்குள் சொல்லிக் கொண்டார். "இவள் மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் நிறைய கொடுத்து வச்சிருந்துருக்கணும்"

(தொடரும்)

About The Author