மனிதரில் எத்தனை நிறங்கள்! (24)

<<<<சென்ற வாரம்

I have never been hurt by anything I didn’t say. – Calvin Coolidge

சிவகாமி புன்னகையுடன் ஆர்த்திக்கு அந்த மனிதனை அறிமுகப்படுத்தினாள். "ஆர்த்தி. இவன் அர்ஜுன்"

வெறும் பெயர் மட்டும் சிவகாமி சொன்னாளே ஒழிய வேறு எதையும் சொல்லி மருமகளைத் தெளிவுபடுத்த முனையவில்லை. புன்னகையுடன் அர்ஜுன் பக்கம் திரும்பி சொன்னாள். "அசப்பில் ஆனந்தி மாதிரியே இருக்கிற இவளை அறிமுகப்படுத்தத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இவள் தான் ஆர்த்தி".

ஆர்த்திக்கு ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட புன்னகை பூக்கத் தோன்றவில்லை. அர்ஜுனைப் பார்த்தபடி சிலையாக நின்றாள். அர்ஜுனும் அப்படியே நின்றிருந்தான். இருவரில் முதலில் சுதாரித்துக் கொண்டது அவன் தான். அவசரமாக சிவகாமியின் ப்ரீஃப்கேஸை அவள் அறையில் வைக்க அங்கிருந்து கிளம்பினான். போகும் போது ஏதோ நினைவுகளால் அவன் பாதிக்கப்பட்டது போல ஆர்த்திக்குத் தோன்றியது.

சிவகாமி தன் மகனையும் தம்பியையும் பார்த்துப் புன்னகைத்தாள். எனக்கு இவளைப் பிடித்திருக்கிறது என்பது போல் இருந்தது அவள் புன்னகை. இருவர் முகமும் மலர்ந்தது. மேலே பார்த்துக் கொண்டு இருந்த பஞ்சவர்ணத்திற்கு வயிறு எரிந்தது. "இந்தக் கொலைகாரிக்கு என்ன அதிர்ஷ்டம். சொந்த மகளைக் கூட அக்காவுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒரு பைத்தியம் உலகத்தில் இந்த மாதிரி இன்னொன்னு இருக்க முடியாது"

சிவகாமி மருமகளிடம் கேட்டாள். "இங்கே சௌகரியம் எல்லாம் சரியாயிருக்கா ஆர்த்தி"

இருக்கிறது என்று ஆர்த்தி தலையசைத்தாள். அமிர்தம் தான் சாவியை ஞாபகப்படுத்தினாள். "அக்கா அந்த ரூம்
பீரோக்களோட சாவி தான் கிடைக்கலை"

சில வினாடிகள் கனத்த மௌனம் அங்கே நிலவியது. சிவகாமி என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள பஞ்சவர்ணம் ஆவலாக இருந்தாள். ஆர்த்தி வருவதற்கு முந்திய நாள் இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு சிவகாமி ஆனந்தியின் அறைக்குச் செல்வதை பஞ்சவர்ணம் பார்த்திருக்கிறாள். உள்ளே சுமார் அரைமணி நேரமாவது சிவகாமி இருந்திருப்பாள். திரும்பி வரும் போது சிவகாமி கையில் ஒரு பை இருந்தது. உள்ளே நுழையும் போது அவள் கையில் அந்தப் பை இருக்கவில்லை என்பதில் பஞ்சவர்ணத்துக்கு சந்தேகம் இல்லை. சிவகாமி வந்த போதும் சரி அறையை விட்டுப் போகும் போதும் சரி அவளிடம் பதட்டமோ பரபரப்போ இல்லை. எதையோ அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறாள் என்பதை பஞ்சவர்ணம் ஊகித்தாள். எடுத்தது எதுவானாலும் அந்த பூட்டப்பட்ட பீரோவில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் ஆகவில்லை.

இன்றும் சிவகாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புன்னகையுடன் சொன்னாள். "அந்த சாவி என் கிட்ட தான் இருக்கணும். நான் அப்புறமா தேடித் தர்றேன் ஆர்த்தி. அதில் உன் அம்மா பொருள்கள் எல்லாம் தான் இருக்கணும். அதை வேணும்னா நீ வேற எங்கேயாவது மாத்திட்டு உன் பொருள்களை வச்சுக்கோ….சரி சாப்பிடறப்ப பார்க்கலாம்…."

சிவகாமி போய் விட்டாள். கூட்டம் கலைந்தது. பஞ்சவர்ணம் வேகமாகத் தன் அறைக்குப் போய் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். சிவகாமி அந்த அறையிலிருந்து அந்த நள்ளிரவில் எதையெல்லாம் அப்புறப்படுத்தி இருப்பாள் என்று பஞ்சவர்ணம் ஊகிக்க முயன்றாள். ஆனந்தி எழுதிய டைரி இருக்கலாம். ஆனந்தி எழுதிய கடிதங்கள் இருக்கலாம். ஆனந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது ஆர்த்தி கண்களில் பட வேண்டாம் என்று சிவகாமி நினைத்திருக்க வேண்டும்……

"தீவிரமா என்ன யோசிக்கிறீங்க பாட்டி?" பேரன் குரல் கேட்டுத் திரும்பினாள் பஞ்சவர்ணம்.

"சிவகாமி என்னை யோசிக்க வைக்கிறாள் மூர்த்தி. எதையோ அந்த பீரோல இருந்து எடுத்துட்டுப் போனதை நான் என் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்திருப்பாள்னு யோசிக்கிறேன். சில விஷயங்கள் எல்லாம் பல்லிடுக்குல மாட்டிகிட்ட பதார்த்தங்கள் மாதிரி. அதை எடுக்காத வரைக்கும் நாக்குக்கு நிம்மதியில்லை. எனக்கு இந்த சஸ்பென்ஸ்னாலே அலர்ஜி. தெரிஞ்சுக்காட்டி மண்டை வெடிச்சுடும்."

மூர்த்தி தன் பாட்டியைக் கூர்ந்து பார்த்தான். அவனைப் பாட்டி தான் வளர்த்தாள் என்பதால் அவளிடம் நிறையவே பாசம் உண்டு. பாட்டியும் அவன் மேல் நிறையவே பாசமாய் இருந்தாலும் அவனிடம் எதையோ மறைக்கிறாள் என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் உண்டு. இந்த புத்திசாலித்தனம், மற்றவர்களிடம் இருந்து பலவற்றையும் மறைக்கும் குணம் போன்றவற்றில் பாட்டியும் சிவகாமியும் ஒன்று என்று நினைத்தான்.

"என்னடா அப்படிப் பார்க்கறாய்"

"பாட்டி நீங்க என் கிட்ட சொல்லாம மறைக்கிற அந்த விஷயம் என்ன பாட்டி?"

பஞ்சவர்ணம் பேரனைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள். மற்றவர்களுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் அவள் மனதில் புதைந்து கிடக்கின்றன. அதில் இவன் எதைச் சொல்கிறான்?

"புதிர் போடாம எதைக் கேட்கிறாய்னு சொல்லித் தொலையேண்டா"

"உங்களுக்கும் சிவகாமிக்கும் ஆகிறதில்லைங்கிறது தெரிஞ்ச விஷயம் தான். ஆனா நீங்க ஆர்த்தியோட அம்மாவோட கொலை விஷயமா காட்டற இண்ட்ரஸ்ட்டுக்கு அது மட்டுமே காரணம் இல்லைன்னு தோணுது. வேற ஏதோ காரணமும் இருக்கு. அது என்ன பாட்டி?"

ஒரே நேரத்தில் இரு எதிர்மறையான உணர்ச்சிகள் பஞ்சவர்ணத்தைத் தாக்கின. ஒன்று பேரன் புத்திசாலி, அதனால் தான் இதை ஊகித்திருக்கிறான் என்ற பெருமிதம். இன்னொன்று பயம். அவளையும் அறியாமல் அவள் கண்கள் அந்த அறையில் தொங்கிக்கொண்டு இருக்கும் மகன் மருமகள் புகைப்படத்திற்குப் போய் தங்கின. ஒரு கணம் புகைப்படத்தில் இருந்து அவள் மகன் அர்த்தமுள்ள புன்னகை பூக்கிறதாக அவளுக்குப் பட்டது. கடைசியாக அவன் அவளிடம் வாக்குவாதம் செய்து விட்டுப் போனது நினைவுக்கு வந்தது. அவள் வற்புறுத்தித் தான் அவன் போனான். போனவன் திரும்பி வரவேயில்லை…

தேவையில்லாமல் கேள்விகள் கேட்கும் போது இவனும் அவனை ஞாபகப்படுத்துகிறான்.

"என்ன பாட்டி. எங்கப்பா, அம்மா ஃபோட்டோ பார்க்கிறீங்க?"

"ஒண்ணுமில்லைடா மூர்த்தி. ஏதோ பழைய ஞாபகங்கள்….நீ என்ன கேட்டாய்?"

இத்தனை வருடங்கள் பாட்டியுடன் இருந்த மூர்த்திக்கு இந்தக் கேள்வி ஆச்சரியப்படுத்தியது. எதையும் இரண்டாவது தடவையாகக் கேட்கிற பழக்கம் பாட்டிக்குக் கிடையாது. அவள் ஞாபக சக்தி பிரசித்தமானது. அப்படிக் கேட்கிறாள் என்றால் பதிலை யோசிக்க காலத்தை நீட்டிக்கிறாள் என்று அர்த்தம்.

தன் கேள்வியை மூர்த்தி மறுபடி கேட்டான். பஞ்சவர்ணம் உட்கார்ந்து கொண்டாள். கண்களை மூடிக் கொண்டபடி சொன்னாள். "எல்லாத்தையும் நேரம் வர்றப்ப சொல்றேன் மூர்த்தி"

பாட்டி எதை ஏன் மறைக்கிறாள் என்பதை ஊகிக்க முடியாத மூர்த்திக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆர்த்தியின் தாய் மரணத்தோடு வேறு சில முடிச்சுகளும் இருக்கின்றன.

(தொடரும்)

About The Author