மனிதரில் எத்தனை நிறங்கள்! (86)

As we know, there are known knowns. There are things we know we know. We also know there are known unknowns. That is to say we know there are some things we do not know. But there are also unknown unknowns, the ones we don’t know we don’t know.
– Donald Rumsfeld

ஆகாஷ் பெரும் குழப்பத்தில் இருந்தான். ப்ரசன்னா சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவன் மனதில் அலை மோதின. "பதினெட்டு வருஷங்களுக்கு முன்னால் ஒரு கொலை நடந்திருக்கிற மாதிரி தெரியுது. அது உண்மையாய் இருந்து, அந்தக் கொலையாளி இப்பவும் உங்க வீட்டுல இருந்தால்…." "ஆர்த்தியைப் பாதுகாக்க இனி எல்லா ஏற்பாடும் செய்யுங்க. தனியா எங்கேயும் விடாதீங்க….."

ஊட்டிக்குத் திரும்பும் போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளை அலட்சியம் செய்தாலும் அன்று இரவு அவனால் சரியாக உறங்க முடியவில்லை. ஆர்த்தியின் அறையில் சின்ன சத்தம் கேட்டாலும் போய் அவள் பத்திரமாக இருக்கிறாளா என்று அவளுக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்தான். அப்படி மூன்றாவது முறை எட்டிப்பார்க்கையில் மூர்த்தி பின்னால் இருந்து பார்ப்பதைக் கவனித்தான். மணியைப் பார்த்தான். மணி இரவு பன்னிரண்டரை. இந்த நேரத்தில் கூட வேவு பார்ப்பவன் எப்போது தான் உறங்குவானோ என்று ஆகாஷ் ஆச்சரியப்பட்டான்.

அன்றைய இரவெல்லாம் ஒரு கேள்வியே அவன் மனதில் பெரிதாகத் தங்கி நின்றது. "நிஜமாகவே 18 வருடங்களுக்கு முன் கொலை நடந்திருக்குமா? ஆர்த்தி அதை அப்போது நேரில் பார்த்திருப்பாளா?" ஆர்த்தியிடம் அந்த பஞ்சவர்ணக் கிழவி சொல்லியது போல் தன் தாய் கொலை செய்திருப்பாள் என்ற சந்தேகமே அவனுக்கு அபத்தமாகப் பட்டது. அப்படி வேறு யாராவது கொலை செய்திருந்தால் கூடத் தன் தாய் அந்தக் கொலை செய்தவர்களை சும்மா விட்டிருக்க மாட்டாள் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

ஆனாலும் ப்ரசன்னா சொன்னதை அவனால் ஒதுக்கி விட முடியவில்லை. ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் தன்னைத் தானே மன்னிக்க முடியாது என்று தோன்ற கடைசியில் தாயிடமும், மாமாவிடமும் ப்ரசன்னா சொன்னதைச் சொல்வது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான். எத்தனையோ சிக்கலான, ஆபத்தான சூழ்நிலைகளிலும் தாயின் அறிவுகூர்மை வேலை செய்து சமாளித்ததை அவன் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். அவளுக்கு இதை எப்படி சமாளிப்பது என்று தெரியும் என்று அவனுக்குத் தோன்றியது. அதே சமயத்தில் ஆர்த்தியின் தந்தை என்ற நிலையில் மாமா காதிலும் இந்தத் தகவலைப் போடுவது சரியென்று அவனுக்குப் பட்டது.

மறுநாள் காலை அவன் தாயின் அறைக்குள் நுழைந்த போது சந்திரசேகரும் அங்கிருந்தார். நேற்றும் ஆர்த்தி வரும் வரை காத்திருந்து அவள் தெளிவாக இருந்ததைப் பார்த்து சமாதானமான பின் தான் உறங்கப் போனார். இன்று காலையில் ஆகாஷிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேள் என்று அவர் தமக்கையிடம் சொல்லிக் கொண்டிருந்த போது தான் ஆகாஷ் அங்கு வந்தான்.

தம்பி கேட்டுக் கொண்டதற்காகவோ, இல்லை தானே அறிந்து கொள்ளும் ஆவலிலோ சிவகாமி ஆகாஷிடம் கேட்டாள். "வா ஆகாஷ். நேத்து ப்ரசன்னா என்ன சொன்னான்?"

"பதினெட்டு வருஷங்களுக்கு முன்னால் இந்த வீட்டில் கொலை ஒன்னு நடந்திருக்கலாம்னும், அதுக்கு ஆர்த்தி விட்னஸாய் இருந்திருக்கலாம்னும் அவன் நினைக்கிறான். அப்படி ஒரு வேலை கொலை செய்தவங்க இப்பவும் இருந்து அவங்களுக்கு ஆர்த்திக்கு ஹிப்னாடைஸ் செய்யற தகவலும் தெரிஞ்சுதுன்னா அது ஆர்த்தி உயிருக்கு ஆபத்தாய் முடியலாம்னும் சொன்னான்……"

அங்கு அடுத்த நிமிடம் ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது. சந்திரசேகர் முகம் வெளிறியது. ஆனால் சிவகாமி முகத்திலோ சலனமே இல்லை. மகனையே கூர்ந்து பார்த்த அவள் பிறகு நிதானமாகச் சொன்னாள். "சுத்த முட்டாள்தனம். ஆர்த்தி எதைப் பார்த்தாள்னு எனக்குத் தெரியாது. ஆனா இங்கே கொலை எதுவும் நடக்கலை. இப்ப ஆர்த்தி உயிருக்கு ஆபத்துன்னு சொல்றது அபத்தமாயிருக்கு…"

"அம்மா நீ ப்ரசன்னா முட்டாள்னு நினைக்கிறியா?"

"இல்லை. ஆனா அவனோட இந்த அப்சர்வேஷன் முட்டாள்தனம்னு நினைக்கிறேன்"

ஆணித்தரமாக வந்தது பதில். இனியும் முழுதாக மறைப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த ஆகாஷ் மெள்ள சொன்னான். "ஆர்த்தியோட அம்மா கொலை செய்யப்பட்டு இருக்கலாம்னு ஆர்த்தியோட தாத்தா கூட நினைக்கிற மாதிரி தெரியுதும்மா"

சிவகாமி அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ காட்டவில்லை. கேட்டு கண்களைக் கூட இமைக்காமல் தெளிவாகச் சொன்னாள். "மகள் மேல் வச்சிருக்கிற பாசம் அவரை அப்படி நினைக்க வச்சிருக்கு ஆகாஷ். ஆனந்தியோட முகத்தில் பாதி டேமேஜ் ஆயிருந்ததால நான் அவர் கேட்டுகிட்டும் முகத்தைத் திறந்து காமிக்கல. அதனால் அவர் அப்படி நினைச்சதையும் தப்பு சொல்ல முடியாது. அதனால் தான் பேத்தி உயிருக்கும் ஆபத்துன்னு நினைச்சு அவளைத் தூக்கிட்டு ஓடுனார்னு நினைக்கறேன். ஆனால் அப்படி இங்கே ஆனந்தியை யாரும் கொலை செய்யலங்கறது தான் உண்மை…."

ஆகாஷ் தாயையே பார்த்தான். கொலையே நீங்கள் தான் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது என்று அவனால் சொல்ல முடியவில்லை. மாமாவைப் பார்த்தான். சந்திரசேகர் மருமகனுக்கு முகத்தைக் காண்பிக்காமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு ஆகாஷுக்கு முதுகைக் காண்பித்து நின்றார்.

ஆகாஷ் மறுபடி தயக்கத்துடன் தாயைக் கேட்டான். "அப்படின்னா ஆர்த்தி உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லைன்னு சொல்றீங்களாம்மா?"

சிவகாமி உறுதியாகச் சொன்னாள். "ஆபத்து இப்பவும் அவளுக்கு இல்லை. நான் இருக்கிற வரைக்கும் ஆர்த்திக்கு இனிமேலும் எந்த ஆபத்தும் வராது."

ஆகாஷ் மனதிலிருந்த மலை இறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தான். அவள் சொன்னால் அது கடவுள் சொன்ன மாதிரி. இனி ஆர்த்திக்கு ஆபத்தில்லை.

சிவகாமி கேட்டாள். "நேற்றோட செஷன்லயே எல்லாம் முடிஞ்சுதா? இல்லை இனியும் இருக்கா?"

"இன்னும் மூணு அல்லது நாலு செஷனாவது தேவைப்படும்னு ப்ரசன்னா சொல்றான். அடுத்ததாய் திங்கள் வரச் சொல்லியிருக்கான்"

*****************

பவானிக்குப் படித்துக் கொண்டிருந்த ஆங்கில நாவல் போரடித்தது. அதைக் கீழே வைத்து சோம்பல் முறித்தவள் ஆர்த்தியைச் சென்று பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அவள் லிஸாவுடன் பேசியபடியே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தது அறை ஜன்னல் வழியே தெரிந்தது. வெளியே வராந்தாவிற்குப் போனால் பஞ்சவர்ணம் கண்ணில் படும் அபாயம் இருக்கிறது. அப்படி பட்டால் அவள் அழைத்து, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது.

டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள். சன் டிவியில் ஒரு இளைஞன் சொல்லிக் கொண்டிருந்தான். "…..இப்போது நாம் மகாபலிபுரத்தில் இருக்கிறோம். பல்லவ சிற்பிகளின் கைவண்ணம் நம்மை மயக்குகிற இந்த இடத்தில் வந்திருக்கிற இந்த சுற்றுலாப் பயணிகளை சந்திப்போமா?" அவன் அருகிலிருந்த ஒரு குடும்பத்தினரைப் பார்த்து கேட்டான். "நீங்க மகாபலிபுரத்துக்கு வருவது இது தான் முதல் தடவையா?" காமிரா அந்தக் குடும்பத்தை ஃபோகஸ் செய்தது. கணவன், மனைவி, ஒரு டீன் ஏஜ் மகள் மூவரும் காமிராவுக்காகப் புன்னகைக்க பவானி அதிர்ச்சியில் சிலையானாள். அவளுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடி பார்த்தாள். கண்கள் ஏமாற்றவில்லை. மூச்சு விட மறந்து அவர்களை வெறித்துப் பார்த்தாள். சிறிது நேரம் அவர்கள் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை…..

அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு கவனித்த போது நிகழ்ச்சியில் அறிவிப்பாளன் அவர்களைப் பார்த்து கேட்டான். "உங்க சொந்த ஊர் எது". அந்த டீன் ஏஜ் மகள் மைக்கை வாங்கிக் கொண்டு சொன்னாள். "நாங்க சென்னைக் காரங்க…"

தீராத அதிர்ச்சியில் அந்த நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்த பவானி கடைசியில் அவர்கள் விரும்பிய பாடலை சன் டிவி ஒலிபரப்ப ஆரம்பித்த போது டிவியை ஆஃப் செய்தாள்.

உயிரற்ற சிலை போல் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கண்டதை உண்மை என்று நம்ப அவளால் இப்போதும் முடியவில்லை….

பேயறைந்தது போல் பவானி உட்கார்ந்திருந்ததை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த மூர்த்திக்கு ஏதோ ஒரு விபரீதம் நடந்துள்ளது என்பதை மட்டும் உணர முடிந்தது.

(தொடரும்)”

About The Author

1 Comment

Comments are closed.