மனிதரில் எத்தனை நிறங்கள்! (80)

Know how sublime a thing it is
To suffer and be strong.
– HENRY W. LONGFELLOW "The Light of Stars"

பாட்டுக்கச்சேரி முடிந்து கரகோஷம் எழுந்தது. ஆர்த்தி பார்த்திபனையும், ஆகாஷையும் மனமாரப் பாராட்டினாள். கேட்டு பார்த்திபன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. ஆகாஷ் வெறுமனே தலையசைத்தான். அவளிடம் கை குலுக்கிய போது பார்த்த ஆகாஷின் சுவடு இப்போது இல்லை. ஆர்த்தி பெருமூச்சு விட்டாள்.

எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. தோட்டத்தில் இருவர், மூவர் என கும்பல்களாகப் பிரிந்து பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். ஆர்த்தியும் லிஸாவும் இந்தக் குறுகிய காலத்திலேயே நெருங்கி விட்டிருந்ததால் சேர்ந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். மூர்த்தி வழக்கம் போல் எல்லோரிடமிருந்தும் தள்ளி ஒதுக்குப் புறமாக அமர்ந்தான்.

யாரும் தன்னைப் பார்த்துக் கொண்டு இல்லை என்ற தைரியத்தில் மூர்த்தியின் கண்கள் ஆர்த்தி மீது நாகரிகம் இல்லாமல் மேய்ந்தன. ஆர்த்தியைப் பார்த்து நேரில் பேசும் போதெல்லாம் கண்ணியத்தின் சிகரமாக இருந்து மறைவில் இப்படி மாறியது அசோக்கிற்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அவன் கணக்குப்படி மூர்த்திக்கு இது வரை எட்டு பெண்களுடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அதில் மூன்று பேர் திருமணம் ஆனவர்கள். இப்போதும் கூட லவ்டேலில் ஒரு கல்லூரி மாணவியும், வண்டிச்சோலையில் ஒரு விதவையும் அவனுடைய காதலிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவன் மற்றவர்கள் கவனிக்காத நேரத்தில் ஆர்த்தியைப் போன்ற அழகான பெண்ணைக் காமத்தோடு பார்ப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

இனி இங்கு கவனிக்க ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்த அசோக் சத்தமில்லாமல் அங்கிருந்து மறைந்தான்.

மூர்த்தியைப் பார்த்தபடியே லிஸா ஆர்த்தியிடம் மெல்ல சொன்னாள். "இந்தப் பல்லி நாலு பேரோட சேரவும் சேராது. ஒரேயடியா விட்டும் போயிடாது."

"எந்தப் பல்லி?" ஆர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

மூர்த்தியைக் கண் ஜாடையால் சுட்டிக் காட்டி லிஸா சொன்னாள். "மூர்த்தி தான். எப்பவுமே பல்லி மாதிரி சுவத்தில ஒட்டிகிட்டு நாம ரூமுக்குள்ள பேசறதை ஒட்டுக் கேட்பான். அதனால தான் அமிர்தம் ஆண்ட்டி அந்தப் பெயர் அவனுக்கு வச்சிருக்காங்க"

ஆர்த்திக்கு மூர்த்தி ஒட்டுக் கேட்பான் என்பதை நம்பக் கஷ்டமாய் இருந்தாலும் வக்கீலிடம் அவள் சொன்னதை அவன் தற்செயலாகக் கேட்டது போல் சொன்னது திடீரென்று நினைவுக்கு வந்தது. அது அவன் சொன்னபடி தற்செயலாகவே இருக்குமோ?

லிஸா தாழ்ந்த குரலில் ஆர்த்தியிடம் சொன்னாள். "ஆர்த்தி. அவன் கிட்ட நீ ஜாக்கிரதையா இருக்கணும். பொம்பளைங்க விஷயத்தில் ரொம்ப மோசமானவன்."

அதை ஆர்த்தியால் சுத்தமாக நம்ப முடியவில்லை. இத்தனை நாட்கள் பழகிய விதத்தில் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அவனிடம் அவள் பார்க்க முடிந்ததில்லை. அப்படி இருக்க லிஸா இப்படி அவனைப் பற்றி சொல்கிறாள் என்றால் மூர்த்தி லிஸா மீதும் ஆகாஷ் மீதும் சுமத்திய குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ? நினைக்கவே என்னமோ மாதிரி இருந்தது. ஆனால் லிஸாவும் அப்படிப்பட்ட பெண்ணாகத் தெரியவில்லை. உண்மையில் மனிதர்களை எடை போடும் விஷயத்தில் தனக்கு அனுபவம் மிகக்குறைவு என்று ஆர்த்திக்குத் தோன்றியது.

மூர்த்தி விஷயத்தில் இருந்து பேச்சை மாற்ற நினைத்த ஆர்த்தி லிஸாவிடம் சொன்னாள். "எனக்கு நீ வந்தது ரொம்பவே சந்தோஷமாய் இருக்கு லிஸா. உன்னைப் பார்க்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்."

"எனக்கும் எங்கம்மா அவங்க தோழியை அப்படியே நீ உரிச்சு வைத்திருக்காய்னு சொன்னதுல இருந்து உன்னைப் பார்க்கணும்னு தோணிட்டே இருந்தது"

"ஆனா நீ உங்கம்மாவும் அப்பாவும் இங்கே வரச் சொல்லி எத்தனையோ கட்டாயப்படுத்தினாலும் வரப் பிரியப்படலைங்கற மாதிரி நான் கேள்விப்பட்டேன். ஏன் லிஸா?"

லிஸாவின் கண்கள் அவளையும் அறியாமல் தூரத்தில் தந்தையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஆகாஷ் மீது தங்கின. உடனடியாக முகத்தில் லேசாக சோகம் படர்ந்தது. தாழ்ந்த குரலில் சொன்னாள். "நான் இன்னொரு நாளில் அதைப் பற்றி விவரமாய் சொல்றேனே. ப்ளீஸ்…"

அதற்கு மேல் ஆர்த்தி அவளிடம் அது பற்றிக் கேட்கப்போகவில்லை என்றாலும் அவள் இங்கு வரத் தயங்குவதற்கும் ஆகாஷுக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பின் பேச்சு திசை மாறியது.

சிறிது நேரத்தில் டேவிட், மேரி, லிஸா விடை பெற்றார்கள்.

அவர்கள் சென்ற பிறகு சிவகாமி ஒரு வேலைக்காரனை அழைத்து அர்ஜுனுக்கு உணவு அனுப்புமாறு உத்தரவிட்டாள். அப்போது தான் இந்த நிகழ்ச்சியில் அவன் கலந்து கொள்ளவே இல்லை என்கிற உண்மை ஆர்த்திக்கு உறைத்தது. "அவர் ஏன் இங்கே வரலை அத்தை?" என்று சிவகாமியிடம் கேட்டாள்.

"நான் அவனை வரச் சொன்னேன். ஆனா உன்னோட பிறந்த நாளும் அதுவுமா தன் முகத்தை உனக்குக் காமிச்சு சங்கடப்படுத்த அவன் விரும்பலை. வரலைன்னுட்டான்"

ஆர்த்திக்கு என்னவோ போலாகி விட்டது. தாயின் டைரியில் அவனைப் பற்றிப் படித்ததில் இருந்து வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருந்த அவன் மீது இரக்கமே அவளுக்கு மனதில் ஏற்பட்டிருந்தது. இயல்பிலேயே மென்மையான மனதுடைய அவளுக்கு அவன் அப்படி நினைத்து தன் முன் வராததில் வருத்தம் ஏற்பட்டது.

எழுந்து நின்று சொன்னாள். "நானே கொண்டு போய் அவருக்குத் தர்றேன்"

சிவகாமி முகத்தில் ஒரு கணம் ஆச்சரியம் தோன்றி மறைந்தது. சரியென்று தலையசைத்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷிற்கும் ஆர்த்தியின் மனதைப் படிக்க முடிந்தது. "எல்லாம் சரி தான், ஆனால் இவளால் என் அம்மாவை எப்படி சந்தேகிக்க முடிந்தது?" என்ற கேள்வியில் மனம் வந்து தங்கியது.

அவுட் ஹவுசில் ஆர்த்தி நுழைந்த போது அர்ஜுன் பிரயாணத்திற்காக சூட்கேஸில் துணிகளை அடுக்கிக் கொண்டு இருந்தான். காலடி ஓசை கேட்டுத் திரும்பியவன் ஆர்த்தியைப் பார்த்துத் திகைத்து நின்றான். அவளை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

திறந்திருந்த சூட்கேஸின் மேல் பாகத்தில் சிவகாமியின் புகைப்படம் ஒட்ட வைக்கப்பட்டிருந்ததை ஆர்த்தி பார்த்தாள். அங்கிருந்த மேசையிலும் சிவகாமியின் ஒரு புகைப்படம் இருந்தது. அறையில் வேறு சாமி படங்கள் உட்பட வேறெந்த படமும் இல்லை. சந்திரசேகர் இரண்டு நாட்களுக்கு முன் பேச்சு வாக்கில் அர்ஜுனைப் பற்றிச் சொல்லியிருந்தார். "அவனைப் பொருத்த வரை அக்கா தான் எல்லாம்". அதை அந்த அறையும் உரத்துச் சொன்னதாக ஆர்த்திக்குத் தோன்றியது.

ஆர்த்தி திகைத்து நின்ற அர்ஜுனிடம் சொன்னாள். "நீங்க என் பர்த்டே பார்ட்டிக்கு வராததால் நானே வந்துட்டேன்." தான் கொண்டு வந்த ட்ரேயை அங்கிருந்த மேசையில் வைத்தாள்.

அர்ஜுன் சுதாரித்துக் கொண்டு சொன்னான். "சாரி… ஹேப்பி பர்த்டே"

"தேங்க் யூ" என்று கூறி ஆர்த்தி புன்னகைத்தாள். அவன் வாழ்த்து மனமார்ந்ததாக இருந்ததாலோ என்னவோ அவனுடைய அசிங்கமான முகமும் இப்போது அவளுக்கு அருவறுப்பைத் தரவில்லை.

"நீங்க வெளியூருக்குக் கிளம்பிகிட்டிருக்கிற மாதிரி தெரியுது. நான் வந்து தொந்தரவு செஞ்சுட்டேனோ"

"அப்படியெல்லாம் இல்லை. உட்காருங்க….எனக்கு புதன் கிழமை சர்ஜரி செய்யறாங்க. நாளைக்கே சென்னை ஆஸ்பத்திரியில் வந்து அட்மிட் ஆகச் சொல்லியிருக்காங்க. நாளைக்குக் காலைல கிளம்பணும் அதான்…."

"உட்காரலை. நீங்க சாப்பிட்டுட்டு பிறகு பேக் பண்ணுங்க. நான் கிளம்பறேன். சர்ஜரி நல்லபடியா முடியணும்னு நானும் கடவுளை வேண்டிக்கறேன். வரட்டுமா?"

அவன் தலையசைக்க அவள் போய் விட்டாள். அந்தப் பெண் அங்கு பந்தா எதுவும் இல்லாமல் வந்ததும், பேசிய விதமும் அவனுக்கு அவள் தாயை நினைவுபடுத்தியது. அவளிடமும் என்றுமே கர்வம் இருந்ததில்லை. முக்கியமாக ஆர்த்தியின் அந்தப் புன்னகை ஆனந்தியின் புன்னகையின் மறு அச்சாக இருந்தது…

ஆனந்தியின் நினைவுகள் சில வந்து போய், கடைசியில் பார்த்த அந்த முகம் நினைவில் தங்கியது. பதினெட்டு வருடங்கள் கடந்திருந்த போதிலும் அந்த முகமும், அதில் பார்த்த ஆக்ரோஷமும் இன்னும் பசுமையாக அவனுக்கு நினைவில் இருக்கிறது. எரிமலை என்ற சொல்லுக்குப் பொருளாக அன்றைய தினம் ஆனந்தி இருந்தாள்…..

(தொடரும்)

About The Author

1 Comment

  1. srinivasan

    திரு.கணேசன்,
    கதை 80 வரங்களாக தொடர்கிறது.அதிலும் சம்பவங்கள் நகராமல் இழுக்கிறபடியால் தொய்கிறது.தயை செய்து கருத்தில் கொள்ளவும்.
    அன்புடன்
    சீனிவாசன்

Comments are closed.