மனிதரில் எத்தனை நிறங்கள்! (54)

"Curiouser and curiouser!"  – Lewis Carroll, Alice in Wonderland

முதல் பீரோவில் ஆனந்தியின் விலையுயர்ந்த ஆடைகள், அழகு சாதனங்கள் எல்லாம் இருந்தன. உள்ளே லாக்கரில் அவள் நகைகள் நிறைய இருந்தன. மேலோட்டமாகப் பார்த்து விட்டு ஆர்த்தி அந்த பீரோவைப் பூட்டி விட்டு அடுத்த பீரோவைத் திறந்தாள். அதில் ஸ்வெட்டர்கள், ஃபோட்டோ ஆல்பங்கள், சில வெள்ளி சாமான்கள் இரண்டு ஷெல்ஃப்களில் இருந்தன. மீதமிருந்த இரண்டு ஷெல்ஃப்களில் டைரிகள் அடுக்கப்பட்டு இருந்தன.

ஆர்த்தி ஆர்வத்துடன் டைரிகளைப் பார்த்தாள். வருடவாரியாக இருந்த டைரிகள் ஆனந்தியின் பத்தாவது வயதில் இருந்து ஆரம்பித்தன. ஒருவித படபடப்புடன் கடைசி டைரியைப் பார்த்தாள். அங்கு இருந்த கடைசி டைரி ஆர்த்தி பிறந்த ஆண்டின் டைரி. ஆனந்தியின் கடைசி இரண்டு டைரிகள் அங்கு இருக்கவில்லை. அன்று பஞ்சவர்ணம் சொன்ன வார்த்தைகள் ஆர்த்தி காதில் மீண்டும் ஒலித்தன. "நீங்க வர்றதுக்கு முந்தின நடுராத்திரியில் ஆர்த்தியோட அம்மா ரூமுக்குப் போய் சிவகாமி ஏதோ எடுத்துகிட்டு போனதை நான் கண்ணால் பார்த்தேன். எதை எடுத்துட்டு போனாளோ அந்த மகராசி எனக்குத் தெரியலை…..".

கடைசி வருடங்களில் தான் ஆனந்தி சந்தோஷமாக இருக்கவில்லை, ஆனால் அதைப் பற்றி தன் பெற்றோரிடம் எதுவும் சொல்லவில்லை என்பது ஆர்த்தி நினைவுக்கு வந்தது. முக்கியமான அந்த இரண்டு டைரிகள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்தாலும் தாயைப் பற்றி அவள் எழுத்துகளில் இருந்தே தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்த சந்தோஷம் ஆர்த்தியின் மனதில் எழுந்தது. முதலில் தன் அறையின் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு, வராந்தா பக்கமிருந்த ஜன்னலை சாத்தி விட்டு வந்து தாயின் டைரிகளைப் புரட்ட ஆரம்பித்தாள்.

ஆனந்தியின் எழுத்துக்கள் முத்து முத்தாக அழகாக இருந்தன. இந்த நாள் இந்த நிகழ்ச்சிகள் என்று எழுதாமல் தன் சிந்தனைகளை, தன்னைப் பாதித்தவைகளை எழுதி இருந்தாள். ஒருசில நாள் நிகழ்ச்சிகள் மூன்று பக்கங்கள் கூட இருந்தன. சில நாட்கள் ஒன்றையும் எழுதவில்லை. ஆகவே சில வருட டைரிகள் எல்லாப் பக்கங்களும் நிரம்பி இருக்க சில வருடங்களில் சில காலிப் பக்கங்களும் இருந்தன. தன் மனதிற்குப் பட்டதை எல்லாம் எழுதியிருந்த அந்த எழுத்துக்களில் நேர்மை இருந்தது. துடிப்பு இருந்தது. தனித்தன்மை இருந்தது. நியாயத்திற்காகப் போராடும் தைரியம் இருந்தது… சிறிது சிறிதாக ஆனந்தி அவள் மனதில் வடிவம் பெற ஆரம்பித்தாள்.

ஆரம்ப டைரிகளில் ஆனந்தி தன் தந்தை தாயின் இடையே இருந்த ஆழமான அன்பையும், அவர்களுக்கிடையே சதா வரும் வாக்குவாதங்களையும் சுவாரசியமாக எழுதி இருந்தாள். "இந்த சண்டைகள் தான் அவர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விதம் போல் எனக்குத் தெரிகிறது. வாக்குவாதத்தில் அப்பா என்றுமே அம்மாவை ஜெயித்ததாய் எனக்கு நினைவில்லை. மேற்கொண்டு எதுவும் பேச முடியாதபடி அம்மா சாமர்த்தியமாக நிறுத்துகையில் அப்பாவுக்குக் கோபம் அதிகமாக வந்து கத்த ஆரம்பிக்கிறது வழக்கம். அவர்களுக்கு ஜாதகம் பார்த்த எட்டிமடை ஜோசியன், அம்மாவோட அம்மா செய்து கொடுத்த தண்ணி காபின்னு ஒரு பெரிய புகார் லிஸ்ட்டை அப்பா சொல்ல ஆரம்பிப்பார்…. அம்மா அமைதியாகி விடுவாள். ஆனால் அப்பா எப்போதாவது அமைதியாக இருந்தாலும் அம்மாவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏதாவது வம்புக்கு அவரை மெள்ள இழுப்பாள்…."

தன் தந்தை தாயைப் பற்றியும் ஆனந்தி பாரபட்சமில்லாமல் கணித்திருந்தாள். தந்தையின் மீது உயிரையே வைத்திருந்தாலும் தந்தையை விடத் தாய் புத்திசாலி என்பதையும், நியாயமானவள் என்பதையும் எழுதியிருந்தாள். தந்தை தன் குறைகளைக் கண்டு கொள்ளாத போது தாய் அவற்றை சுட்டிக் காட்டத் தவறியதில்லை என்பதை ஆனந்தி எழுதி இருந்தாள். மேலும் தன் தாய் எப்போதும் தன்னை விமரிசித்தபடியே இருந்ததைப் பல இடங்களில் எழுதி இருந்தாள். கூடவே எழுதியிருந்த ஒரு அபிப்பிராயம் ஆர்த்தியின் கவனத்தை ஈர்த்தது.

"அம்மாவின் விமரிசனங்கள் எல்லாம் பெரும்பாலும் என்னை ஒரு வீட்டின் மருமகளாகப் போகிறவள் என்ற கோணத்திலேயே இருந்தன. பெண் என்பவள் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் என்று அம்மா ஆனவரை என் மனதில் புகுத்தப் பார்க்கிறாள். அதென்னவோ எனக்கு அது சரியாகப் படவில்லை. பெண்ணாய்ப் பிறந்ததாலேயே பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியவள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பொறுத்துக் கொள்ள முடிந்ததைத் தான் ஒருத்தி பொறுத்துக் கொள்ள முடியும்…. ஆனால் அம்மாவைத் தப்பு சொல்ல முடியவில்லை. எல்லா அம்மாக்களும் இதையே தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தோழிகள் பேச்சில் இருந்து தெரிகிறது…."

ஆர்த்தி படிப்பதை நிறுத்தி ஒருகணம் கண்களை மூடிக் கொண்டு யோசித்தாள். அம்மாவால் பொறுமையைக் கடைபிடிக்க முடியாதது தான் அவளை அகால மரணமடைய வைத்ததோ? பொறுமை என்றால் எந்த விஷயத்தில்? அம்மாவைப் பொறுமை இழக்க வைத்த விஷயம் எதுவாக இருக்கும்? பொறுமை இழந்த அம்மா என்ன செய்தாள்?…..கேள்விகள் சரமாரியாக வந்தன என்றாலும் பதில்கள் எதற்கும் கிடைக்கவிலை.

மீண்டும் அந்த டைரிகளின் பக்கங்களை ஆர்த்தி புரட்டினாள். ஆனந்தி சந்திரசேகரை சந்தித்ததையும், காதல் மலர்ந்ததையும் எழுதி இருந்த இடங்களில் நிறைய இடங்களில் வசன நடைக்குப் பதிலாக கவிதை நடை இருந்தது. காதல் வரும் போது கவிதையும் வந்து விடுமோ? சந்திரசேகரின் புன்னகையில் இருந்து அவரது நடை, உடை, பேச்சு பற்றி எல்லாம் ஆனந்தி எழுதி இருந்த விதம் அவளுடைய காதலின் ஆழத்தைக் காட்டின.

சிவகாமியைப் பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தை ஆர்வத்துடன் ஆர்த்தி படித்தாள். "நம் காதலை அவர் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்று நான் கேட்ட போது ‘என் பெரியக்கா எஸ் சொன்னா போதும்’ என்றார். ‘பெரியக்கா எஸ் சொல்லலைன்னா?….’ என்று கேட்டேன். அப்படியொரு நிலையை அவரால் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்பது அவர் முகத்தைப் பார்த்த போது எனக்குப் புரிந்தது. பிறந்த போதே தாயை இழந்து, பெரியக்கா வளர்த்ததால் அவர் அவர்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்…."

"ஆனாலும் என்னால் என் மனதில் எழுந்த கேள்விக்கு விடை காணாமல் இருக்க முடியவில்லை. மறுபடி மறுபடி கேட்டேன். ‘பெரியக்கா எஸ் சொல்லலைன்னா?…." அவர் சொன்னார். "சொல்ல வைப்பேன்"

"அவங்க பிடிவாதமா இருந்தாங்கன்னா?" என்று கேட்ட போது "நானும் பிடிவாதமா இருந்து சம்மதம் வாங்குவேன்" என்றார்.

ஆனால் ஒரு தடவை கூட அவர்கள் எதிர்த்தாலும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அவர் சொல்லவேயில்லை. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது…."

அதற்குப் பின் சிவகாமியைச் சந்தித்ததையும், சிவகாமி சம்மதித்ததையும், அவள் வீட்டுக்கு வந்து பெண் கேட்டதையும், சிவகாமியால் எல்லோரும் கவரப்பட்டதையும் விவரமாக ஆனந்தி எழுதி இருந்தாள். சிவகாமியின் கம்பீரத்தையும், தெளிவாக முடிவெடுக்கும் தன்மையையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டி எழுதியிருந்தாள்…..

பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்த ஆர்த்தி அந்த டைரியில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து திகைத்தாள்.

(தொடரும்)

About The Author