மனிதரில் எத்தனை நிறங்கள்! (55)

"Success is not measured by what you accomplish, but by the opposition you
have encountered, and the courage with which you have maintained the
struggle against overwhelming odds." — Orison Swett Marden

இரண்டு டைரிகள் கிடைக்காததும், தற்போது ஒரு டைரியில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதும் ஆர்த்திக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. கிழிக்கப்பட்டிருந்த பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் பக்கங்கள் ஆனந்தியின் கல்யாணம் முடிந்தவுடன் எழுதப்பட்டிருந்த பக்கங்கள். அந்தப் பக்கங்களை யார் கிழித்திருப்பார்கள்? ஆனந்தியே எழுதிக் கிழித்திருப்பாளோ? இல்லை இது சிவகாமியின் கைங்கர்யமா?

அடுத்த பக்கங்களைப் புரட்டினாள் ஆர்த்தி. அமிர்தத்தைப் பற்றி ஆனந்தி ஓரிடத்தில் அதிருப்தியைத் தெரிவித்திருந்தாள். "இவரது சின்னக்காவைப் பார்க்கும் போது தான் நான் ஏழை என்கிற நினைவே எனக்கு ஏற்படுகிறது. அதை ஞாபகப்படுத்துகிற மாதிரி ஏதாவது ஒரு கேள்வி அல்லது பேச்சு. இந்த விஷயத்தில் பெரியக்கா பெருந்தன்மையானவர்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு அவர்கள் ஆளாக்கவில்லை……" இதை பார்வதியும் முன்பு சொல்லி இருந்தது ஆர்த்திக்கு நினைவுக்கு வந்தது.

இன்னொரு இடத்தில் ஆகாஷைப் பற்றியும் பார்த்திபனைப் பற்றியும் ஆனந்தி அழகான குழந்தைகள் என்று குறிப்பிட்டு இருந்தாள். அடுத்ததாக ஓரிடத்தில் அர்ஜுனைப் பற்றி விரிவாக ஆனந்தி எழுதியிருந்ததை ஆர்வத்துடன் ஆர்த்தி படித்தாள்.

"பெரியக்காவின் எடுபிடியாக இருக்கும் நேபாளம் என்கிற அந்தப் பையன் பார்க்கிற போதெல்லாம் ஒருவித அருவருப்பை ஏற்படுத்தினான். அதுவும் அவரருகில் அவனைப் பார்க்கையில் ஏதோ துர்க்கையும், அசுரனும் சேர்ந்து இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அவனை அவர்களைத் தவிர வேறு யாருமே ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஒருநாள் இவரிடம் அவனைப் பற்றிக் கேட்டேன். இவர் அவனைப் பற்றிச் சொன்ன தகவல்கள் சுவாரசியமாக இருந்தன.."

"சிவகாமியக்காவும் அத்தானும் நேபாள யாத்திரைக்குப் போன போது தான் அவனைப் பார்த்திருக்கிறார்கள். பசுபதிநாதர் கோயிலுக்குப் போய் விட்டு வரும் வழியில் ஒரு பையன் மேல் பல சிறுவர்கள் கல் எறிந்து கொண்டு இருப்பதைப் பார்த்த சிவகாமியக்கா டாக்சியை நிறுத்தச் சொல்லி ஓடிப் போய் அவனைக் காப்பாற்றி இருக்கிறார். அந்தப் பையன் மிகவும் அசிங்கமாய் இருப்பதாலும், அவனுக்கு தாய் தந்தை யாரும் இல்லாததாலும் இது போல் பல முறை நடப்பதாக அந்த டிரைவர் தெரிவித்திருக்கிறான். இந்தியா வரும் போது அவனையும் அக்கா அழைத்து வந்து விட்டார்கள் என்று இவர் சொன்னார்."

"மறுநாள் அக்காவிடம் பேசும் போது அவனைப் பற்றிப் பேசினேன். அக்கா அதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அக்கா இல்லாத போது அத்தானிடம் மெள்ள அவன் பேச்சை எடுத்தேன். அவர் நேரில் பார்த்தவர் ஆகையால் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அந்தப் பையனிடம் அவர்கள் பிறகு பேச்சுக் கொடுத்த போது அவனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார் என்றும் தாய் மட்டும் இருக்கிறாள் என்றும் சொல்லியிருக்கிறான். அவனை அவனுடைய தாயிற்குக் கூடப் பிடிக்கவில்லையாம். அவனை ஒரு அவமானச் சின்னமாக அவன் தாய் நினைத்திருக்கிறாள். அவனை விட்டு விட்டு யாரோ ஒருவனுடன் அவள் ஓடிப் போய் மூன்று மாதமாகிறது என்பதையும் அவன் சொல்லி இருக்கிறான்."

‘அத்தான் சொன்னார். "எனக்கும் அவனைப் பார்க்கப் பரிதாபமாய் தான் இருந்தது. உடம்பெல்லாம் கல்லடிபட்ட காயங்கள் இருந்தாலும் அவன் சொல்லும் போது அவன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. இவளுக்கு அவன் அம்மா மேல் வந்த கோபத்திற்கு அளவேயில்லை. ‘ஒரு தாய் இப்படி நடந்து கொள்வாளா?" என்று ஆறாமல் நாலைந்து தடவை என்னைக் கேட்டாள். கடைசியில் அவனைக் கூட்டிக் கொண்டு போவது என்று முடிவெடுத்தாள். எனக்கென்னவோ அதில் உடன்பாடு இருக்கவில்லை. இங்கேயே அவன் பாதுகாப்பாய் இருக்க ஏற்பாடு செய்து அதற்குப் பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று சொன்னதை சிவகாமி ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முடிவு எடுத்து விட்டால் மாற்றிக் கொள்கிற வழக்கம் சிவகாமிக்கு இல்லை. அவனை அவள் எங்களுடன் அழைத்து வந்து விட்டாள்"’

ஆனந்தி தொடர்ந்து எழுதி இருந்தாள். "இவருக்கும் கூட அக்கா இப்படியொரு அருவருப்பான பையனை அழைத்து வந்தது பிடிக்கவில்லை. ஆனால் இவரிடம் ‘பிடிக்கலைன்னா நீ பார்க்காதேடா’ என்று அக்கா கறாராக சொன்னதாகச் சொன்னார். இதெல்லாம் கேட்ட போது எனக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது. எப்படிப்பட்ட மனம் இந்தப் பெரியக்காவிற்கு என்று வியந்தேன். வெளிப்படையாக நேபாளத்திடம் கனிவாகப் பேசியோ, இரக்கத்தைக் காட்டியோ நான் பார்க்கவில்லை. ஆனால் ஒரு மனிதனாக அவர்கள் மட்டுமே இந்த வீட்டில் அவனை நடத்துகிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்த்தேன். எல்லோரும் அவனிடம் பேச நேர்கையில் அவன் தோளைப் பார்த்துத் தான் பேசினார்கள். அவர்கள் மட்டுமே அவன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள். பெற்ற தாய் கூட வெறுத்து நிர்க்கதியாக விட்டுச் சென்ற ஒருவனை அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்து அவனை மனிதனாக நடத்தும் பெரியக்கா என் மனதில் இமயமாக உயர்ந்து போனார்……"

ஆர்த்திக்கு மேலே படிக்க முடியவில்லை. மனம் கனத்தது. அர்ஜுனுடைய அந்த நிர்க்கதியான நிலையை ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தாள். மற்றவர்களுடைய உபத்திரவம் இல்லாமல் வாழ்வதே பெரிய விஷயம் என்று கல்லடிபட்டும், வெறுப்பான பார்வைகள் பட்டும் அவன் எவ்வளவு பெரிய நரகத்தை அனுபவித்திருப்பான் என்று நினைக்கையில் மனம் பதைத்தது. அவனை அப்படி விட்டுப் போன அந்தத் தாயை நினைத்துப் பார்த்தாள். இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என்று அவளும் ஆச்சரியப்பட்டாள். ஒருவேளை சிவகாமி அவனைக் காப்பாற்றி அழைத்து வந்திராவிட்டால் அவன் என்னவாகி இருப்பான் என்று கற்பனையால் கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

டேவிட் தான் எப்படி டாக்டரானேன் என்று அன்று சொன்ன கதையும், அர்ஜுனைப் பற்றி அம்மா எழுதி இருந்த கதையும் படிக்கையில் ஆகாஷ் தன் மேல் கொண்ட ஆத்திரத்தில் தவறில்லை என்று ஆர்த்திக்குத் தோன்ற வைத்தது.

‘இப்படிப்பட்ட ஒருத்தி கொலை செய்ததாக நான் சந்தேகப்பட்டால் அவர்கள் பெற்ற பிள்ளைக்கு என் மேல் கோபம் வராமல் என்ன செய்யும்?’

அந்த நேரத்தில் மூர்த்தி கதவின் சாவித் துளை வழியாக உள்ளே பார்த்ததை ஆர்த்தி கவனிக்கவில்லை. ஆர்த்தியின் அறைக்கதவு மட்டுமல்லாமல் ஜன்னலும் சாத்தப்பட்டு இருந்ததால் மூர்த்தி சந்தேகமடைந்து சாவித்துளை வழியாக பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த இரண்டு பீரோக்களும் திறந்திருந்ததையும் ஆர்த்தி டைரிகளைப் படித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.

(தொடரும்)

About The Author