மனிதரில் எத்தனை நிறங்கள்! (101)

What fond and wayward thoughts will slide
Into a Lover’s head!
– William Wordsworth ‘Strange Fits of Passion’

நீலகண்டன் முகம் வாடியிருந்ததைக் கண்ட பார்வதி அவர் உடல்நிலை சரியில்லையோ என்று பயப்பட்டாள். "என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?"

"உடம்பெல்லாம் நல்லாத் தான் இருக்கு. மனசு தான் சரியில்லை"

"மனசுக்கென்ன?"

"ஆர்த்தி ஆகாஷைக் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி யோசிச்சேன். நம்ம கிட்ட அனுமதி கேட்கணும்னு அவளுக்குத் தோணலை பார்த்தாயா?"

"அவள் அவங்கப்பா கிட்ட கேட்டிருப்பாள். நம்ம கிட்ட எதுக்குக் கேட்கணும்?"

"நாம வளர்த்த பொண்ணு…."

"வளர்த்தது அவள் சொல்லியோ, அவளுக்கு போக்கிடம் இல்லாமயோ இல்லையே. நாமளா தானே தூக்கிகிட்டு போனோம். அதுக்கு அவள் கோபப்படாம இருக்கறதே அவளோட நல்ல மனசைக் காட்டுது."

பார்வதியை நீலகண்டன் முறைத்தார். என்ன நாக்கு இவளுக்கு. "ஆனாலும் அந்த சிவகாமி மகனை…?"

சந்திரசேகர் சிவகாமியால் தான் தனக்கு சொத்து கிடைத்தது என்று சொன்னதை ஆர்த்தி அவர்களிடம் தெரிவித்த போதும் நீலகண்டனுக்கு சிவகாமி மேல் இருந்த சந்தேகம் முழுவதுமாகப் போய் விடவில்லை. அவள் கொல்ல சொத்து அல்லாமல் வேறெதாவது காரணம் இருக்கும் என்று சொல்லி காலையில் தான் பார்வதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு மனைவியிடம் எதையும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

பார்வதி சொன்னாள். "ஆர்த்தியைக் காண்பிக்கற டாக்டர் கிட்டயே உங்களையும் காண்பிக்கிறது நல்லதுன்னு தோணுது. எப்பப் பார்த்தாலும் சிவகாமி மேல் ஒரு துவேஷம்…..ஆர்த்தி முகத்தில இருக்கிற சந்தோஷத்தைப் பார்த்தீங்கல்ல. இதுக்கு மேல நமக்கு என்ன வேணும்… இன்னும் அவள் கிட்ட இதுக்கு எதிரா எதாவது பேசி வருத்தப்பட வைக்காதீங்க. புரிஞ்சுதா?"

நீலகண்டன் வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தார்.

+++++++++++++

கோயமுத்தூர் நோக்கி ஆகாஷுடன் காரில் போய்க் கொண்டிருந்தது ஒரு இன்பப் பயணமாக ஆர்த்திக்கு இருந்தது. ஆனால் அத்தனை சந்தோஷத்தின் நடுவில் ஒரு உறுத்தல் அவளுக்கு இருந்தது. அதை அவனிடம் வாய் விட்டு கேட்டே விட்டாள்.

"டைட்டானிக் எப்படி இருந்தது?"

ஆகாஷ் குறும்பாகச் சொன்னான். "சூப்பரா இருந்தது. அந்த நளினி ஒரு நல்ல கம்பெனி"

ஆர்த்திக்கு அவன் தமாஷ் செய்கிறான் என்று தெரிந்த போதிலும் லேசாகக் கோபம் வந்தது. "நல்ல கம்பெனின்னா…?"

"தியேட்டர்ல நுழைஞ்சதுல இருந்து, வர்ற வரைக்கும் ரொம்பவே நெருக்கமாய் இருந்தாள். உன்னை மாதிரி ஒரு மைல் தூரத்துல உட்கார்ந்திருக்கலை"

நளினி அப்படி நெருக்கமாகவே இருக்கக்கூடியவள் தான் என்பதில் ஆர்த்திக்கு சந்தேகமில்லை. ஆர்த்தி சொன்னாள். "கல்யாணம் வரைக்கும் இந்த தூரம் நல்லது தான்… அப்புறம் நேத்து மாதிரி…" என்றவள் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.

நேற்றைய முத்தத்தைச் சொல்கிறாள் என்பது புரிந்த ஆகாஷ் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். "நேத்து நான் உன் கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன் ஆர்த்தி"

"என்ன?"

"நேத்து சாரின்னு சொன்னேனே அது தான். உண்மையில் நான் வருத்தப்படவே இல்லை"

வெட்கத்தில் ஆர்த்தி முகம் குங்குமமாகச் சிவந்தது. பொய்யான கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்ட ஆர்த்தி மனதில் நினைத்துக் கொண்டாள். ‘நானும் வருத்தப்படலை’.

அவள் வெட்கம் அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த நேரமாய் செல் அடிக்க செல்லை ஆகாஷ் எடுத்தான்.

"ஹலோ"

"கங்கிராட்ஸ்." லிஸாவின் குரல் சந்தோஷமாகக் கேட்டது.

"ஆர்த்தி கிட்ட காலைல பேசினப்ப சொன்னா. ஆனா பேசறப்ப ரொம்பவே வெட்கப்பட்டா. நீ என்ன செஞ்சே?"

ஒரு நிமிஷம் ஆகாஷுக்கு மூச்சு நின்றது. விட்டால் பிபிசியில் செய்தி வந்து விடும் போல தெரிகிறதே.

"ஒண்ணும் செய்யலையே"

"ஏய் ஃப்ரண்ட் கிட்ட சொல்றதுக்கு என்ன?"

"லிஸா. தமிழ்ல இங்கிதம்னு ஒரு வார்த்தை இருக்கு தெரியுமா?"

"சங்கீதம் தெரியும். இங்கிதமெல்லாம் தெரியாது. அப்படின்னா என்ன ஆகாஷ். ஏதாவது ஊர் பேரா?"

"நான் இப்ப ஆர்த்தி கூட கோயமுத்தூர் போய்கிட்டிருக்கிறேன். டிரைவ் பண்றப்ப அதிகம் பேச முடியாது. நீ போனை கட் பண்ணு"

"ஓ ஆர்த்தி கூட இருக்காயா. சாரி. அப்புறம் பேசறேன். ஆனா அப்புறம் பண்றப்பவாவது நீ என்ன செஞ்சாய்னு சொல்லணும் என்ன" சிரித்துக் கொண்டே போனை லிஸா வைத்து விட்டாள்.

"லிஸாவா. என்ன சொல்றாள்?"

"காலைல போன் செய்து கல்யாணம் நிச்சயமானதை சொன்னாய் சரி. ஏன் அவள் கிட்ட சொல்றப்ப வெட்கப்பட்டாய்?"

"அவள் தான் எப்படி ஆகாஷ் மனசு மாறினான். எப்படி சொன்னான். என்ன செஞ்சான்னு எல்லாம் கேட்டாள்…அதான்" ஆர்த்தி இப்போதும் வெட்கப்பட்டாள்.

"சே. எல்லாரும் என்னை மறக்கவே விட மாட்டேன்கிறாங்க. இப்படி சும்மா சும்மா ஞாபகப்படுத்தினால் நான் இன்னொண்ணு குடுத்துடுவேன். அப்புறம் என் மேல் யாரும் பழி சொல்லக் கூடாது"

"இந்த சாக்கு எல்லாம் வேண்டாம். எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் தான்"

காரை டாக்டர் ப்ரசன்னா க்ளினிக் முன் நிறுத்தும் போது அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களைக் கவனமாக நோட்டமிட்டான். ஆர்த்தி அவனைப் பார்த்து தலையசைத்தாள். "யாரும் இல்லை". சரியென்று தலையாட்டி விட்டு அவனும் அவளுடன் க்ளினிக்கினுள் நுழைந்தாலும் அவன் மனதில் அதே எண்ணம் திரும்பவும் வந்தது. ‘அம்மாவிடம் அன்று தெரிவித்த பின் தான் அவளை யாரும் பின் தொடர்வதோ, கவனிப்பதோ இல்லை’

"ஆர்த்தி இன்னைக்கு நீங்கள் நிறையவே சந்தோஷமாயிருக்கிற மாதிரி தெரியுது." ஆர்த்தியைப் பார்த்தவுடன் ப்ரசன்னா சொன்னான்.

ஆர்த்தி புன்னகைத்தாள்.

"ஆகாஷ் கூட சமாதானம் ஆயிடுச்சு மாதிரி தெரியுது" ப்ரசன்னா புன்னகையுடன் சொன்னான்.

ஆர்த்திக்கு ஆச்சரியமாயிருந்தது. வெட்கத்துடன் சொன்னாள். "நாங்க கல்யாணம் செஞ்சுக்கப் போறோம்"

"ராஸ்கல் என் கிட்ட சொல்லவே இல்லை, பாருங்க. எப்ப முடிவாச்சு"

ஆர்த்தியின் வெட்கம் ஆழமாகியது. குங்குமமாய் சிவந்த முகத்துடன் சொன்னாள். "நேத்து….இல்லை இன்னைக்கு"

"அவன் கிட்ட இந்த செஷன் முடிஞ்ச பிறகு பேசிக்கறேன். ஆர்த்தி ஆரம்பிக்கலாமா?"

அன்று ஆர்த்தியை ஹிப்னாடிஸ ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்த மிகக் குறைந்த நேரமே தேவைப்பட்டது.

"ஆர்த்தி. அன்னைக்கு யாரோ கதவ பலமா தட்டறாங்க. உங்கம்மா வேலைக்காரி விஜயா கிட்ட கதவத் திறக்க வேண்டாம்னு சொல்றாங்க… ஆனாலும் அவ கேட்காமப் போய் கதவைத் திறந்துடறா….யார் கதவத் தட்டுனது?…"

ஆர்த்தியின் முகம் பயத்தில் வெளுத்தது. மூச்சு சீராக இல்லாமல் போக ஆரம்பித்தது. ஆர்த்தியை தைரியப்படுத்தும் தொனியில் அமைதியாக சிறிது நேரம் ப்ரசன்னா பேசினான்.

"…..அதனால் தைரியமா சொல்லு. யார் வந்தது?….."

சிறிது நேரம் பேசாமல் இருந்த ஆர்த்தி பின் பலவீனமான மெலிந்த குரலில் சொன்னாள். "அவ தான்…"

"யாரு?"

"…. ஒரு மாதிரி சிரிப்பாளே அந்த பேட் கர்ல். அவ கைல….."

"அவ கைல?…."

"கைல…கைல….."

"சொல்லு ஆர்த்தி அவ கைல என்ன இருக்கு. பயப்படாமல் சொல்லு"

"கத்தி…கத்தி…கூரான கத்தி…."

இவள் கனவில் நடக்கும் சம்பவங்களில் பல குழப்பங்கள் இருப்பதாக ப்ரசன்னாவுக்குத் தோன்றியது. அவள் கனவில் துப்பாக்கிச் சூடு சத்தம் தான் கேட்டதாகச் சொல்லி இருந்தாள். இப்போது என்ன கத்தி? கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியா, கத்தியா?

"வந்தவள் என்ன செய்யறாள்?"

"அவ ஒரு மாதிரியா சிரிச்சுகிட்டே… சிரிச்சுகிட்டே அம்மா கிட்ட வர்றா…."

"அப்புறம்"

"அம்மா கேட்கறாங்க. ஏன் வந்தாய்னு….அவ சொல்றா…சொல்றா… உயிர் வாங்க வந்தேன்னு….. அவளுக்கு அம்மாவப் புடிக்கல…..சொல்றா….அந்த வீடு அவளோடதாம்…. சொத்து அவளோடதாம்….அம்மா வீட்டை விட்டுப் போகணுமாம்…..இப்பவே போகணும்னு சொல்றாள்….மழையிலயே அம்மாவும் நானும் போகணுமாம்…… இல்லாட்டி அவ அம்மாவயும் என்னையும் கொன்னுடுவாளாம்….."

"அம்மா என்ன சொல்றாங்க?"

"அம்மா சொல்றாங்க. நீ போயிடு. உன்னைக் கூப்பிடறார் பாருன்னு சொல்றாங்க"

"யாரு கூப்பிடறாங்க"

"அதான்…. வெளியில் இருந்து ஒரு ஆளு….."

"சரி பேட் கர்ல் என்ன பண்றா"

"அவ ஜன்னல் வழியா பார்த்துட்டு சிரிக்கிறா…. ஜாஸ்தியா சிரிக்கிறா…. முட்டாளுன்னு சொல்றா. சொல்லிட்டு சிரிச்சுகிட்டே இருக்கா…அம்மா அவளை பைத்தியம்னு சொல்றாங்க… பைத்தியம்னு சொன்னவுடனே அவளுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு….. முறைக்கிறா…..ஆனாலும் சிரிக்கிறா….பைத்தியம் என்ன செய்யும் தெரியுமான்னு கேட்டுகிட்டே அம்மா கிட்ட வர்றா…."

"அப்புறம்…?"

"பக்கத்துல வந்து கேட்கறா….பிடிக்கலைன்னா விட்டுட்டு போக வேண்டியது தானே….ஏன் கூட இருக்கே. புடிச்சவங்க கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே… போடி….. போயிடு….என் கையில சாகாதேன்னு சொல்றா….. அம்மா சொல்றாங்க… போய் ஒரு நல்ல டாக்டரப் பாரு லூசு…"

"அப்புறம்?"

"அவளுக்கு கோவம் வந்துடுச்சு……அம்மாவ கத்தியால குத்த வர்றா….அம்மா பயந்துட்டு ரூமுக்குள்ள ஓடறாங்க….அவளும் பின்னாலயே போயிட்டா…..போய் கதவ சாத்திகிட்டா…..நான் அழறேன்"

ஆர்த்தி உண்மையாகவே அழ ஆரம்பித்தாள்…"நான் கதவ தட்டறேன்….கதவ திறக்க மாட்டேங்கிறாங்க…. உள்ளே அம்மா கத்தறாங்க……..கத்தறாங்க…….அவ அம்மாவ என்னவோ செய்யறா…..அம்மா கத்தறாங்க…"

"அப்புறம்"

"அம்மா கதவத் திறந்துட்டு வர்றாங்க…."என்ற ஆர்த்தி பயங்கரமாக அலறினாள்.

"பயப்படாதே ஆர்த்தி. சொல்லு நீ என்ன பார்த்தாய்?"

"அம்மா மூஞ்சியெல்லாம் ரத்தம்….காயம்…..அம்மா என் கிட்ட வர்றாங்க…."ஆர்த்தி"ன்னு சொல்றாங்க….."

ஆர்த்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"அப்புறம்?"

"அம்மா விழுந்துட்டாங்க…. செத்துட்டாங்க……எனக்கு ஒண்ணுமே தெரியல….எல்லாம் இருட்டாயிடுச்சு…. இருட்டாயிடுச்சு…..யாரோ ஓடி வர்றாங்க….."

ஆர்த்தி மூச்சு சீரில்லாமல் போக ஆரம்பித்தது.

அவசரமாக ப்ரசன்னா கேட்டான். "அந்த துப்பாக்கி வெடிக்கிற சத்தம் எப்ப கேட்டது?"

"அப்புறமா… இருட்டானப்..ப…ற….ம்"

 ++++++++++++++

ஆர்த்தி வரும் வரை ஆகாஷிற்கு இருப்பு கொள்ளவில்லை. இன்றும் அவள் அலறியது அவனை என்னவோ செய்தது. அவள் மனதில் எத்தனை ரணங்களை சுமந்திருக்கிறாள் பாவம். அவள் வெளியே வந்த போது கரிசனத்துடன் ஓடி வந்து கேட்டான். "எப்படியிருக்கிறாய்?"

ஆர்த்திக்கு அவன் ஏன் கேட்கிறான் என்று புரியவில்லை. அவளுக்கு அவள் இங்கும் அலறியது நினைவில் இல்லை. அந்த செஷனை முடிக்கும் முன் வழக்கம் போல் ப்ரசன்னா அவளை அமைதிப்படுத்தியிருந்ததால் அவள் புன்னகையுடன் சொன்னாள். "நல்லாயிருக்கேன். ஏன் கேட்கறீங்க.?"

"சும்மா தான்"

"அவர் உங்களைக் கூப்பிடறார்."

ஆகாஷ் உள்ளே நுழைந்தவுடன் ப்ரசன்னா திட்டினான். "ராஸ்கல். கல்யாணம் ஃபிக்ஸ் ஆனா சொல்றதில்லையா?"

"நான் எப்படியும் நேர்ல வர்றதால நேராவே சொல்லலாம்னு விட்டுட்டேன். ஆர்த்தி சொன்னாளா?"

"ஆமா. அதென்ன அவள் எப்ப முடிவாச்சுன்னு கேட்டா நேத்துங்கறா, இன்னைக்குங்கறா, ஒரேயடியா வெட்கப்படறா, என்ன விஷயம்"

ஆகாஷ் முகம் போன போக்கைப் பார்த்து ப்ரசன்னா சீரியஸாகக் கேட்டான். "டேய்… டேய். என்ன விஷயம்?"

"ஒண்ணுமில்லை. உன்னோட ட்ரீட்மெண்டுல வெக்கத்துக்கு ஏதாவது வழியிருக்கா?"

"விஷயத்தை சொல்லுடா…."

ஆகாஷ் நண்பனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். "நீ அப்புறம் கிண்டல் அடிக்கக்கூடாது. ப்ராமிஸ்"

"ப்ராமிஸ். சொல்லு"

"நேத்து தெரியாத்தனமா அவளை ஒரு கிஸ் பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணிக்கப் போகிற பொண்ணை கிஸ் பண்றது ஒரு தப்பாடா?. அப்புறமா ஓவரா வெக்கப்படறா. இப்ப கூட வர்றப்ப லிஸாவோட போன். அவ வெக்கப்படறாளே என்ன செஞ்சேன்னு. இப்ப நீ கேட்கறே. டேய் இதுக்கே இப்படின்னா இனி கல்யாணம் ஆனதுக்கப்புறம்……"

ப்ரசன்னா சிரிக்க ஆரம்பித்தவன் நிறுத்தவில்லை. கண்களில் நீர் நிரம்பும் வரை சிரித்தவனை ஆகாஷ் முறைத்தான்

ப்ரசன்னா சிரிப்பை நிறுத்தி சொன்னான். "நீ என்னவோ ஒரு கிஸ்னு சொல்றே. அவ வெக்கப்படறதைப் பார்த்தா அது ஒரு சிம்பிள் கிஸ் மாதிரி தெரியலையே. கொஞ்சம் அதிகமா இருக்கும் போலல்லவா தெரியுது"

ஆகாஷ் கோபத்தின் நடுவிலும் லேசாக சிரித்தான். "உன் கிட்ட போய் சொன்னேன் பார் என்னை சொல்லணும்"

சிரிப்பில் இருந்து புன்னகைக்கு மாறிய ப்ரசன்னா சொன்னான். "நீ நிஜமாவே அதிர்ஷ்டக்காரண்டா. ஆர்த்தி மாதிரி ஒரு பொண்ணை இந்தக் காலத்துல பார்க்கிறது கஷ்டம். நீ அவளோட அழகால் ஈர்க்கப்பட்டதை விட அதிகமா அவளோட…என்ன சொல்றது?… ஆ… ‘இன்னொசன்ஸ்"ஆல ஈர்க்கப்பட்டது அதிகம்னு நான் நினைக்கிறேன். சரியா?"

ஆகாஷ் தலையசைத்தான். ‘இவன் எவ்வளவு சரியாகக் கண்டுபிடிக்கிறான்?’

"கங்கிராட்ஸ். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன் ஆகாஷ். … அவளோட கனவுகளைப் பொறுத்த வரைக்கும் எல்லாமே தெரிஞ்சாச்சு. இன்னும் அந்த ‘ஹீலிங்’ ப்ராசஸுக்கு இன்னொரு சிட்டிங் தேவைப்படும். அப்புறமா இந்த பயங்கரக் கனவுகள் வர்றது சுத்தமா நின்னுடும். அப்புறமா வேற விதமான கனவுகள் வர்ற மாதிரி நீ பார்த்துக்குவாய்னு நினைக்கிறேன். எப்படியும் நேத்து அதுக்கான பிள்ளையார் சுழி போட்டுட்டாய்…. டேய்…. டேய்… சும்மா அடிக்காதேடா. இது என்னோட க்ளினிக்டா….."

ஆகாஷ் வெளியே வந்த போது அவனைப் பார்த்து ஆர்த்தி சந்தோஷமாகப் புன்னகைத்தாள். பார்க்கிற போதெல்லாம் சந்தோஷப்படும் அவள் காதல் அவனுக்குப் பெருமையாக இருந்தது.

நளினியிடம் சொன்னான். "நளினி, நானும் ஆர்த்தியும் சீக்கிரமாகவே கல்யாணம் செய்துக்கப் போகிறோம். நிச்சயமானவுடன் உனக்கு சொல்கிறேன். கண்டிப்பாய் வரணும் என்ன"

நளினியின் முகத்தில் ஈயாடவில்லை. மெள்ள தலையசைத்தாள்.

காரில் திரும்பப் போகும் போது ஆகாஷ் ஆர்த்தியைக் கோபித்துக் கொண்டான். "அவன் கல்யாணம் எப்ப முடிவாச்சுன்னு கேட்டா உனக்கு வெட்கப்பட என்ன இருக்கு. நேத்து, இன்னைக்குன்னு என்ன குழப்பம்?"

"இல்லை…நீங்க சொன்னது இன்னைக்குக் காலைலன்னாலும், முடிவு செஞ்சது நேத்து என்னை… நேத்தே தான்னு தோணிச்சு. அதான்… ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீங்க? ரோட்டைப் பார்த்து காரை ஓட்டுங்க."

 ++++++++++

சிவகாமி போனில் சொல்லிக் கொண்டிருந்தாள். "இன்னைக்கோட ஆர்த்தியோட ஹிப்னாடிச செஷன் முடியுது. அடுத்தது ஒரு ஹீலிங் செஷன் இருக்காம். அதுக்கப்பறம் அந்த செஷன்ல நடந்ததெல்லாம் ரிப்போர்ட் கைக்கு கிடைச்சுடும். ஆர்த்தியை எதாவது சொல்லி நம்ப வைக்கிறது சுலபம். ஆனா ஆகாஷை அப்படி நம்ப வைக்க முடியாது. அவனோட மனைவியா அவள் ஆனபிறகு அவன் எதையும் ஆழமா தெரிஞ்சுக்கற வரைக்கும் விடமாட்டான். அதனால எதையும் இனி நிறைய நாளுக்கு மறைக்க முடியும்னு எனக்குத் தோணலை. அவங்களை ஃபேஸ் செய்ய எந்த நேரத்துலயும் தயாரா இருக்கிறது நல்லது."

(தொடரும்)”

About The Author

3 Comments

  1. suja

    மிக மிக அருமையாக செல்கிறது கதை ஓட்டம். ஆர்த்தி ஆகாஷ் பாத்திர அமைப்பு மிக அழகு. இன்னும் நிறைய அத்தியாயம், வரும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். மிக அருமையான நடை 🙂

Comments are closed.