மனிதரில் எத்தனை நிறங்கள்! (21)

<<<<சென்ற வாரம்

Acceptance of what has happened is the first step to overcoming the
consequences of any misfortune.                 –  William James

     மகள் ஏதோ அழ்ந்த சிந்தனையோடு தன்னைப் பார்த்தது ஏன் என்று சந்திரசேகருக்கு விளங்கவில்லை.  ஆனால் அதைப் பற்றி அவர் அதிகம் சிந்தித்து குழப்பிக் கொள்ளவில்லை. மகளிடம் சொன்னார். "இந்த ரூம்ல வசதியெல்லாம் எப்படியிருக்குன்னு பார்.  என்ன வேணும்னாலும் சொல்லு…உன்னோட டிரஸ்ஸெல்லாம் எங்கே?"

    ஆர்த்தி தனது சிறிய சூட்கேஸைக் காண்பித்தாள். சந்திரசேகர் அந்த சூட்கேஸைப் பார்த்து மனம் கொதித்துப் போனார்.  அவர் கம்பெனி பியூன் மகளிடத்தில் கூட இதை விட அதிகமாகவும் தரமாகவும் துணிமணிகள் இருக்கும் என்று தோன்றியது.  மகள் உடுத்தி இருந்த சுடிதார் கூட மிக மலிவு விலைப் பொருளாகவே தெரிந்தது.  தந்தையின் முகத்தில் தெரிந்த உக்கிரத்திற்குக் காரணம் தெரியாமல் ஆர்த்தி குழம்பினாள்.

      "உன் தாத்தாவால வாங்கிக் கொடுக்க முடிஞ்சதெல்லாம் இவ்வளவு தானா?"

      "அவர் இந்த வயசுல உழைச்சு சம்பாதிச்சதுல இதுக்கும் அதிகமாய் எப்படி வாங்கிக் கொடுக்க முடியும்ப்பா. எனக்கு மூணு டிரஸ் வாங்கறப்ப அவங்க ரெண்டு பேரும் ஒரு டிரஸ் தான் வாங்குவாங்க."

     நாக்கின் நுனி வரை வந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு சந்திரசேகர் விழுங்கிக் கொண்டார். ‘அப்படி இருக்கறப்ப உன்னைத் தூக்கிட்டு ஏன் அந்த ஆள் ஓடணும்?’

     வார்த்தைகள் வெளிவராவிட்டாலும் அவர் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்த ஆர்த்தி தந்தையிடம் கெஞ்சும் குரலில் சொன்னாள்.  "அப்பா அவங்களைக் கோவிச்சுக்காதீங்கப்பா. தாத்தாவும் பாட்டியும் ரொம்ப நல்லவங்கப்பா. எனக்காக எத்தனையோ தியாகம் செஞ்சிருக்காங்கப்பா"

     சந்திரசேகர் முகத்தில் தெரிந்த கோபம் வடிந்து போனது. பெருமூச்சு விட்டபடி மகளிடம் சொன்னார். "ஆர்த்தி கோபம்கிறது மத்தவங்க வரச் சொல்லி வர்றதுமில்லை. போகச் சொல்றப்ப போறதுமில்லை.  அக்கா எப்பவுமே சொல்லுவாள், ‘ரெண்டு புள்ளிகளுக்கு இடையே இருக்கிற மிகக்குறைந்த தூரம் நேர்க்கோடுதான்னு’. அதனால நான் நேராவே சொல்லிடறேன்.  நான் கோபத்தை அவங்க கிட்ட காண்பிச்சுக்கலை. போதுமா? ஆனா அவங்க கிட்ட எதுவுமே நடக்காதது மாதிரி பேசவோ, பழகவோ என்னால முடியாதும்மா.  நீ அதை மட்டும் என் கிட்ட எதிர்பார்க்காதே.  அப்புறம் உனக்காக தியாகம் செஞ்சதா சொன்னாய்.  நான் ஒண்ணும் உன்னை எடுத்துகிட்டுப் போய் வளர்த்தச் சொல்லலை. அவங்க கிட்ட தியாகம் செய்யச் சொல்லலை……"

    சொல்லிக் கொண்டே வந்தவர் திடீர் என்று கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தார்.  கண்கள் திறந்த போது அவர் முகத்தில் விரக்தி தெரிந்தது. என்ன பேசி என்ன பயன் என்று சிந்தித்த மாதிரி ஆர்த்திக்குத் தோன்றியது. பிறகு பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  மகளிடம் அன்பாகப் பேசினார் என்றாலும் அந்த அறையும் அதன் நினைவுகளும் அவரை அடித்தளத்தில் அமைதியிழக்கச் செய்தது என்பது அவர் நிலை கொள்ளாமல் தவித்த விதத்தில் தெரிந்தது.  அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. அவரால் தாக்குப் பிடிக்க முடியாமல் போன போது எழுந்து விட்டார்.  "சரி ஆர்த்தி, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. அப்புறம் பார்க்கலாம்"

    சந்திரசேகர் போய் நிறைய நேரம் ஆர்த்தி அவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.  அவருக்கு அந்த அறையில் அதிகம் இருக்கப் பிடிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.  காரணம் அம்மா பற்றிய நினைவுகளா இல்லை வேறு ஏதாவதா என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை…..

     அவர் பற்றிய எண்ணங்களில் இருந்து மீண்டு எழுந்த ஆர்த்தி அந்த வீணையை வருடிப் பார்த்தாள். அம்மா உபயோகித்தது என்ற நினைவு வர மனம் லேசாகியது.  அம்மா வீணை வாசிப்பாள் என்று பாட்டி இது வரை தன்னிடம் சொன்னதேயில்லை என்று சிறு கோபம் வந்தது. அப்போது தான் அம்மாவைப் பற்றிய எத்தனையோ விஷயங்கள் தனக்குத் தெரியாது என்பது உறைத்தது.  இனி முக்கியமான ஒரே வேலை அம்மாவைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரிப்பது தான் என்ற முடிவுக்கு ஆர்த்தி வந்தாள். இந்த அறையில் தன் வாழ்க்கையின் முதல் மூன்று வருடங்களைக் கழித்திருக்கிறோம் என்பதை அவளால் நம்பக் கஷ்டமாக இருந்தது.  இந்த அறை எந்த நினைவையும் அவள் மனதில் வரவழைக்கவில்லை……

     ஆர்த்தி பழைய நினைவுகளை வரவழைக்க முயன்று கொண்டு இருக்கையில் பவானி அந்த அறை வாசலில் தயக்கத்துடன் வந்து நின்றாள்.  திருமணமாகி இத்தனை வருட காலங்களில் இந்த அறையினுள் அவள் ஒரு முறை கூட நுழைந்ததில்லை.  கணவனும், அவரது முதல் மனைவியும் உபயோகித்த அறை ஏன் இத்தனை வருடங்களாகப் பூட்டப்பட்டிருக்கிறது என்று பல முறை அவள் தனக்குள் கேட்டுக் கொண்டதுண்டு. கணவனிடம் ஒரு முறை கேட்டதுமுண்டு.  அவர் பார்வையாலேயே உனக்கு இது தேவையில்லாதது என்று உணர்த்தி பதில் சொல்லவில்லை. அமிர்தத்திடம் கேட்டிருக்கிறாள்.  அமிர்தம் ‘தெரியலை’ என்று ஒரே சொல்லில் விலகிக் கொண்டாள். அறையின் சாவி சிவகாமியிடம் தான் இருக்க வேண்டும் என்று மட்டும் பவானி ஊகித்தாள். சிவகாமியிடம் கேட்கும் அளவு தைரியம் இல்லாததால் கேள்வி கேள்வியாகவே அவள் மனதில் தங்கி விட்டது.

     ஆர்த்தி வருகிறாள் என்ற செய்தி வந்தவுடன் அறை திறக்கப்பட்டு அதை சுத்தம் செய்வதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பும் அமிர்தத்திற்குக் கொடுக்கப்பட்டது. அமிர்தமும் பெரும் பரபரப்புடன் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பது அவளைப் பார்க்கையில் தெரிந்தது.  இரண்டு நாட்கள் சுத்தம் செய்யும் வேலை நடந்தது. அப்போது ஓரிரு முறை உள்ளே போய்ப் பார்க்க பவானிக்கும் தோன்றினாலும் ஏனோ அந்த அறை அவள் மனதில் கிலியைக் கிளப்பி அவளை வர விடாமல் தடுத்தது. இன்னும் கணவரின் முதல் மனைவியின் ஆவி அந்த அறையில் உலாவுவது போன்ற பிரமை அவளுக்கு இருந்தது.

    சுத்தம் செய்யும் போது அந்த அறையில் இருந்த  பீரோக்களின் சாவிகளைத் தேடி அமிர்தம் சலித்துப் போனாள். கடைசியில் தம்பியிடம் வந்து அமிர்தம் கேட்ட போது அங்கு பவானியும் இருந்தாள். "ஏண்டா சந்துரு, அந்த ரூம்ல இருக்கிற ரெண்டு பீரோ சாவியும் கிடைக்கலையே. உன் கிட்ட இருக்கா?"

     "என் கிட்ட இல்லை"

     "அப்படின்னா அக்கா கிட்ட இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்ன அமிர்தம் தம்பியின் பதிலுக்காகக் காத்து நின்றாள்.

    அதற்கு சந்திரசேகர் பதிலே சொல்லவில்லை.  குழப்பத்துடன் தம்பியைப் பார்த்து சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அமிர்தம் சிவகாமியிடம் போய்க் கேட்பாள் என்று பவானி நினைத்தாள்.  ஆனால் அமிர்தம் அது பற்றி தன் அக்காவிடம் கேட்கத் துணியவில்லை.

        ஆக எல்லாமாக சேர்ந்து இந்த அறையில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற உணர்வை பவானியிடம் ஏற்படுத்தி இருந்தது.  இப்போதும் அந்த அறையில் ஆர்த்தியைப் பார்க்கையில் ஆனந்தி போலவே பவானிக்குத் தோன்றியது. திடீர் என்று காலம் பதினெட்டு வருடங்களுக்குப் பின்னே போய் விட்டதாக ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. ஆனந்தி மகள் வடிவில் எல்லா கணக்கையும் தீர்க்க வந்திருப்பது போல் தோன்றியது. இதயத்துடிப்பு இடிகளாக மாற பவானி சத்தமில்லாமல் வந்த வழியே திரும்பினாள்.

(தொடரும்)

About The Author