மனிதரில் எத்தனை நிறங்கள்! (17)

<<<<சென்ற வாரம்

How should I greet thee,
With silence and tears.
  – Lord Byron.

 
     ஆர்த்தி சினிமாவில் தான் அப்படிப்பட்ட பங்களாவைப் பார்த்திருக்கிறாள். மெயின் கேட்டில் இருந்து போர்ட்டிகோ போகும் வரை  பாதையின் இருபக்கங்களிலும் பல வண்ணப் பூச்செடிகள் கண்களைக் கவர்ந்தன. போர்ட்டிகோவில் இரண்டு விலையுயர்ந்த கார்கள் நின்றிருந்தன.  ஆகாஷ் காரை நிறுத்தி விட்டுச் சொன்னான். "இது தான் நம்ம ஊட்டி வீடு".
 
     அரண்மனை போன்ற அந்தப் பங்களாவைக் கண்களை விரித்து பிரமிப்புடன் பார்த்தபடி ஆர்த்தி இறங்கினாள். அவளைப் பல இடங்களிலிருந்து பல ஜோடிக் கண்கள் கூர்மையாக கவனித்தன.
 
    பஞ்சவர்ணம் மாடியில் இருந்த தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாகத் தன் துருப்புச் சீட்டைக் கூர்ந்து பார்த்தாள்.  பார்த்தவுடனேயே அந்தப் பெண் ஒரு வெகுளி என்று கண்டுபிடித்த அவள் திருப்தியடைந்தாள். தன் பேரன் மூர்த்தி இந்த நேரமாகப் பார்த்து வெளியே போயிருந்தது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.  "முக்கியமான நேரத்தில் இருக்க மாட்டேன்கிறான்."
 
    அமிர்தம் வாசலிலேயே  நின்று கொண்டு இருந்தாள்.  ஆர்த்தியின் அழகைப் பார்த்து நிம்மதியடைந்தவள் அருகில் நின்று கொண்டு இருந்த தன் மகனைப் பார்த்தாள்.  ஆர்த்தியின் அழகில் தன்னை மறந்த நிலையில் பார்த்திபன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அமிர்தம் முகத்தில் புன்னகை அரும்பியது.
 
   அவளுக்கு அருகில் நின்ற பவானி ஆர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.  தோற்றத்தில் ஆர்த்தி தன் தாயைக் கொண்டிருந்தாலும் முகத்தில் தெரிந்த வெகுளித்தனம் பவானியை வெகுவாகக் கவர்ந்தது.
 
   மாடியில் தனதறையின் ஜன்னல் வழியாக சந்திரசேகர் ஆர்த்தியைப் பார்த்தபடி சிலையாக நின்றிருந்தார். மூத்த மனைவி ஆனந்தியே நேரில் வந்தது போல் அவருக்கு இருந்தது.  அவள் பிரமிப்புடன் அந்த பங்களாவைப் பார்த்த விதம் அவர் இதயத்தில் இரத்தம் கசிய வைத்தது.  ‘இத்தனைக்கும் சொந்தக்காரி இப்படிப் பிரமிப்புடன் தன் வீட்டையே பார்க்கும்படியாக ஆகி விட்டதே!’ மூன்று வயதில் தோளில் தூக்கிக் கொஞ்சி விளையாடிய அவர் குழந்தை இன்று அழகான இளம்பெண்ணாக வந்திருக்கிறது. இடையில் எத்தனை வருடங்களை, எத்தனை அழகான தருணங்களை இழந்து விட்டோம் என்று எண்ணிய போது மனம் வலித்தது. 
 
   ஆகாஷின் போன் வந்தவுடனேயே வாசலில் நின்று தன் மகளை வரவேற்கத் தான் அவர் ஆரம்பத்தில் எண்ணியிருந்தார்.  ஆனால் அவருக்கு அத்தனை பேர் முன்னிலையில் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உடனடியாக வரவில்லை. பெரியக்கா ஒரு முக்கிய வேலையாக ஆபிஸ் போயிருந்தாள். இந்த நேரத்தில் அவள் கூட இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
 
   முதலில் அமிர்தம் தான் புன்னகையுடன் மருமகளை வரவேற்றாள்.  "வாம்மா ஆர்த்தி, நான் தான் உன் சின்னத்தை" சின்னத்தையிடமும் சிவகாமியின் சாயல் இருந்தது.  ஆனால் அந்த கம்பீரமும், உயரமும் இருக்கவில்லை. அவள் கண்களில் புத்திசாலித்தனம் பளிச்சிட்டதை ஆர்த்தி கவனித்தாள்.  காதுகளில் வைரங்கள் மின்னின. அமிர்தம் தன் அருகில் இருந்த ஒரு அழகான வாலிபனை அறிமுகப்படுத்தினாள். "இது என் மகன், பார்த்திபன்"
 
   பார்த்திபன் "ஹாய்" என்றான்.  ஆர்த்திக்கு ஏனோ அவனைப் பார்த்த உடனே பிடித்து விட்டது. ஆனால் அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. புன்னகை பூத்தாள்.
 
   பவானிக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தயக்கமாக இருந்தது. நல்ல வேளையாக ஆகாஷ் உதவிக்கு வந்தான்.  "இது உன் சித்தி". சித்தி மிகவும் அழகாக இருந்தாள். ஆனால் அவள் கண்களில் தெரிந்த ஒருவித சோகத்தை ஆர்த்தியால் உடனடியாக உணர முடிந்தது.  பவானி ஏனோ அந்தப் பெண் தன்னிடம் ஒருவித விரோதப் போக்கை கடைபிடிப்பாள் என்று பயந்து கொண்டு இருந்தாள்.  ஆனால் நினைத்ததற்கு மாறாக அவள் மனம் நிறையப் புன்னகை பூத்தது பவானிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. "வா ஆர்த்தி" என்று அதே மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
 
   மிகவும் தயக்கத்துடன் காரருகேயே நின்று கொண்டு இருந்த நீலகண்டனையும் பார்வதியையும் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.  பஞ்சவர்ணம் மட்டும் தான் அவர்களை எடை போட்டபடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
 
   ஆகாஷ் மாமா எங்கே என்று கேட்க வாய் திறந்த போது தான் சந்திரசேகர் படியிறங்கி வருவதைப் பார்த்தான்.
 
   "ஆர்த்தி" சந்திரசேகரின் குரல் கரகரத்தது. ஒரு கணம் கண்கலங்கத் தந்தையைப் பார்த்த ஆர்த்தி அடுத்த கணம் ஓடி சென்று அவர் விரித்த கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவள் மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும் போதும் இப்படித்தான் அவர் அழைத்தவுடன் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொள்வாள்.  இப்போதும் அனிச்சைச் செயலாக அவளையும் அறியாமல் அவரிடம் வந்து விட்டாள் என்பதை எண்ணிய போது அவர் கண்களோடு மனமும் நிறைந்து போயிற்று. ஆர்த்தி "அப்பா, அப்பா" என்று முணுமுணுத்தபடி அவளையும் அறியாமல் கண்ணீரோடு தந்தையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இருந்தாள். அந்தக் காட்சி அருகே நின்றிருந்த அனைவரையும் உருக்கியது.
 
    ஆனால் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த நீலகண்டனுக்கு என்னவோ போல் இருந்தது. மூன்று வயதில் இருந்து அவர் வளர்த்த பேத்தி இந்த அளவு அவரை ஒரு நாளும் தன்னை மறந்து கட்டிக்கொண்டதாய் அவருக்கு நினைவில்லை.  அவர் முகத்தில் தெரிந்த லேசான பொறாமையைப் படிக்க முடிந்த பார்வதி சொன்னாள்.  "உங்க மகளும் உங்க கிட்ட இப்படித்தானே ஒட்டிகிட்டு இருந்தாள்.  ஒரே ரத்தம்னா அப்படித்தான்.  அதுக்கென்ன அப்படியொரு பார்வை"
 
    இவளை அருகில் வைத்துக் கொண்டு சுதந்திரமாக மனதில் கூட எதையும் நினைக்க முடியவில்லையே என்று நினைக்கையில் அவருக்கு மனைவி மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் தான் நினைத்ததை மறுக்கவும் முடியாத அவஸ்தையில் அப்போதைக்கு அவளை முறைக்க மட்டும் தான் அவரால் முடிந்தது. யாரும் உள்ளே அழைக்காத போது எப்படி உள்ளே போவது என்று இருவரும் தர்மசங்கடத்துடன் சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தார்கள். 
  
     அவர்கள் இருவரும் வெளியே காரருகிலேயே நிற்பதைக் கவனித்தது முதலில் ஆகாஷ் தான்.
 
     "தாத்தா, பாட்டி வாங்க ஏன் அங்கேயே நிற்கிறீங்க?" என்று சத்தமாகச் சொன்னவன் மாமாவைப் பார்த்தான். அவன் குரல் ஆர்த்தியையும் சகஜ நிலைக்கு வரவழைத்தது.  தாத்தா, பாட்டியின் இக்கட்டான நிலைமை அவளுக்கும் உறைக்க தந்தையை சற்று பயத்துடன் பார்த்தாள்.  சந்திரசேகர் முகம் இறுகியது.
 
    நீலகண்டனையும், பார்வதியையும் சந்திரசேகர் வரவேற்பார் என்று ஆர்த்தி எதிர்பார்த்தாள்.  ஆகாஷும், தான் சத்தமாய் சொன்னதைப் புரிந்து கொண்டு மாமா உள்ளே அழைப்பார் என்று தான் எதிர்பார்த்தான்.  ஆனால் இறுகிய முகத்துடன் நின்ற சந்திரசேகர் அவர்களைக் கூப்பிடுகிற மாதிரி தெரியவில்லை.  ஒருவித தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகியது.  நீலகண்டனும், பார்வதியும் முகம் சிறுத்துப் போய் வெளியே நின்றனர்.
 
(தொடரும்)

மேலும் பல…..

About The Author