மரியான் – இசை விமர்சனம்

‘வந்தே மாதரம்’ ஆல்பம் இயக்கிய பரத்பாலா எழுதி இயக்கும் திரைப்படம். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான். இசைப் புயலிடமிருந்து 2013ஆம் ஆண்டுக்கான விருந்து மரியானில் தொடங்குகிறது.

நெஞ்சே எழு

குட்டி ரேவதி எழுத, ரகுமானே பாடியிருக்கும் பாடல். அன்பு அழியாது என்பதுதான் பாடுபொருள். ஏனோ, இதைக் கேட்கும்போது ஒரு பழைய ஆல்பத்தின் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

உன் நெஞ்சில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையின் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே! – அழியாப் பொருள் பற்றிய அழகு வரிகள்!

இன்னும் கொஞ்ச நேரம்

மெலிதான கிராமத்து இசைச் சாயலுடன் தொடங்குகிறது பாட்டு. இதைக் காதலின் தவிப்பு, ஏக்கம் நிரம்பி வழிய எழுதியிருக்கிறார் கபிலன். விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன் பாடியிருக்கிறார்கள். பாடல் நெடுகிலும் வரும் கடத்தின் இசை நல்ல ரசனை! அது போக, இடையிசையில் மேற்கத்திய இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்னும் பேசக்கூடத் தொடங்கல…
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே!
இப்ப என்ன விட்டுப் போகாத!…
என்ன விட்டுப் போகாத!… – காதல் வரிகள்.

நேற்று அவள் இருந்தாள்

மீண்டும் விஜய் பிரகாஷ் இதில் சின்மயியுடன் இணைய, வரிகளை வழங்கியிருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி. “ஆகாயத்தில் நூறு நிலாக்கள்” என்று அவர் பாடும்போதே நம்மைத் தன் பக்கம் இழுத்து விடுகிறார். அதிக இசை இல்லை, மெலிதான ஒலிகள் மட்டும்தான் பாடல் நெடுகிலும். இருவரது குரல்கள்தான் பாடலுக்குப் பெரும்பலம்.

நேற்று எந்தன் வீட்டில் சோகம் என்னும்
சொல் இல்லையே;
நேற்று எந்தன் கைவளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே! – காதலின் கடந்த காலம் சொல்லும் பாடல்.

எங்க போன ராசா

குட்டி ரேவதி எழுதி சக்தி ஸ்ரீகோபாலன் பாடியுள்ள பாடல். கிதாரின் மிக மெல்லிய ஒலியுடன் “எங்க போன ராசா” என்று பாடல் தொடங்கும்போது நம்மையும் ராசாவைத் தேட வைக்கிறது. மொத்தப் பாடலையும் தாங்கி நிற்கிறது அந்தக் கிதார் இசை! இனி பண்பலைகளில் இந்தப் பாடலை அதிகம் கேட்கலாம்.

காலம் எனக்குள் உறையுது
கண்ணீரு கடலோடு கலக்குது
உன் முகம் உன் உடல் தேடுது
ஏனோ எனக்கென்ன கேடிது! – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

கடல் ராசா நான்

புயலின் இசைக்கு யுவனின் குரல்! ஆஹா, அருமையான காம்பினேஷன்! துள்ளலான ஆட்டம் போட வைக்கும் இசைக்குப் பாடல் எழுதியிருக்கிறார் தனுஷ். வழக்கம்போல் மெஸ்மரிசம் செய்யும் குரல் செவிஈர்ப்புத் தீர்மானம் நடத்துகிறது. பிறகென்ன, ஒரு நான்கு நிமிடம் நாமும் விழி மூடி கடல் ராசாவுடன் வாழ்ந்து விட்டு வருகிறோம். யுவனின் குரலில் இவ்வளவு குதூகலமா! தன்னுடைய இசையில் கூட அவர் இப்படிப் பாடியிருப்பதாக நினைவில்லை. கடல் ராசாவைக் கண்முன் கொண்டு வருகிறார்.

ஏக்கம் கொண்டு, ஆவி அழுதிட
கோபம் கொண்டு வித்தைகள் காட்டும்
கோமாளி நான். – மெஸ்மரிச வரிகள்.

மரியான் – காதல் போராட்டம்!

About The Author