மலைப்பூட்டும் மலைப்பாம்புகள்…

தினந்தோறும் நம்மைச் சுற்றி ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. செய்தித்தாள்களைப் புரட்டும்போதோ, இணையப் பக்கங்களை மேயும்போதோ, ‘அட! இப்படியும் நடக்கின்றதா!’ என்ற வியப்பு நம்மைத் தொற்றிக் கொள்வதுண்டு.
ஒரு மலைப்பாம்பு முதலை ஒன்றை முழுமையாக விழுங்கியுள்ளது என்று நம்மை அதிர வைத்துள்ளது ஓர் அண்மைச் செய்தி. அரிதான உயிரினங்களுக்கு என்றுமே பஞ்சம் இல்லாத அவுஸ்திரேலியாவில், குயீன்ஸ்லாண்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஏரியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலைப்பாம்புகள் பொதுவாகச் சிறிய விலங்குகளையே உண்பது வழமை. எலிகள்தான் இவற்றிற்கு அல்வா. விதிவிலக்காகச் சில சமயம், இவை பெரிய அளவிலான உயிரினங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன.

இந்தத் தடவை ஒலிவ் நிறத்திலான ஒரு மலைப்பாம்பு ஒரு மீற்றர் (3.2 அடி) நீளமான ஒரு முதலையை முழுதாக விழுங்கியிருக்கின்றது. இதைப் பலர் நேரில் பார்த்துள்ளதோடு, தங்கள் கேமராக்களில் படங்களையும் எடுத்துள்ளார்கள்.
இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மலைப்பாம்பிற்கு எந்த உணவுமே தேவைப்படாது என்கிறார் மலைப்பாம்புகள் பற்றி நன்கறிந்த ஒரு பேராசிரியர். இவற்றால் ஒரு முதலையை விழுங்க முடியும். ஆனால், முதலை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும். அப்பொழுது மலைப்பாம்பு காயப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்கிறார் இவர்.

வேறு ஆபத்துக்களையும் இது சந்திக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. இந்த முதலையை முழுதாக விழுங்க இதற்கு 15 நிமிட நேரம் தேவைப்பட்டது என்கிறார்கள் நேரில் இந்த நிகழ்வைப் பார்த்தவர்கள். முதலில் முதலையின் தலைதான் பாம்பின் வாய்க்குள் சென்றிருக்கின்றது. இப்படி விழுங்கும் நேரத்தில் டிங்கோக்கள் இவற்றைத் தாக்கும் அபாயம் உண்டு என்கிறார்கள். அவுஸ்திரேலியா நாட்டுக்குரிய ஓர் இனக் காட்டு நாய் டிங்கோ. முயல், கங்காரு போன்றவற்றைத் தாக்கி உண்ணும் இந்தக் காட்டு விலங்குகள் இன்று அழிவின் விளிம்பில் இருப்பது இன்னொரு தகவல்.

மலைப்பாம்பு முதலில் இரையின் உடலைச் சுற்றிக் கொண்டு, இரை மூச்சை வெளியேற்றும் வரை காத்திருக்கின்றது. பின்னர், படிப்படியாகத் தன் இறுக்கத்தை அதிகரிக்கின்றது. அதாவது, இரையை மூச்சுத் திணற வைப்பதுதான் இதன் யுக்தி! தன் அளவை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஓர் இரையை விழுங்குமளவிற்கு இதன் வாய் விரிந்து கொடுக்கும் என்கிறார்கள்.

கௌவும் இரையின் இதயத்துடிப்பை மலைப்பாம்பினால் கச்சிதமாக உணர்ந்து கொள்ள முடியும் என்பது ஓர் ஆச்சரியமான தகவல். இதயத் துடிப்பு நின்றதை அறிந்து கொண்டதும் தன் முழு சக்தியையும் திரட்டி இரையை விழுங்க ஆரம்பிக்கின்றது.
அதே நேரம், கௌவிய இரையை விழுங்கும்பொழுது நேரும் தப்புக் கணக்கு பாம்பையே உயிராபத்தில் கொண்டு போய் விடும்! 2005ஆம் ஆண்டு, புளோரிடாவில் ‘பர்மா மலைப்பாம்பு’ என அழைக்கப்படும் ஓர் இன மலைப்பாம்பு ஒரு முதலையை விழுங்க முயற்சித்தபோது அதன் உடல் வெடித்துச் சிதறியிருக்கின்றது! ஒருவேளை இரையின் உடல் பெரிதாக இருந்து, பாம்பின் உடலில் ஏதோவொரு நாளம் வெட்டுப்பட்டு இருக்கலாம்.

இரை முழுமையாக அதன் வயிற்றுக்குள் சென்றதும், அதுவரை முற்றாக நின்று போயிருந்த அதன் சமிபாட்டுத் (செரிமான) தொழிற்பாடு திடீரென வேகமாக இயங்கத் தொடங்குகின்றது. இதனுடைய சமிபாட்டு உறுப்புக்கள் வழமையான அளவை விட மூன்று அல்லது நான்கு தடவைகள் பெரிதாகின்றன. வயிற்றுள் உள்ள உணவைத் துண்டாக்கச் சமிபாட்டுத் தொழிற்பாடு மிக வேகமான நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

சிறிய தாராக்கள், வாலபீஸ் போன்றவைதான் இங்குள்ள மலைப்பாம்புகளின் சாதாரண உணவு. சில சமயங்களில் பசுங் கன்றுகள், மான்கள் போன்றவற்றையும் இவை பிடித்து விழுங்குவதுண்டு. ஆனால், மனிதன் மட்டும் விதிவிலக்கு. காரணம், அவனது அகன்ற தோள் கொண்ட உடல் அமைப்பு இதற்கு விழுங்குவதற்குத் தடையாக இருப்பதுதான். (“அப்பாடா! நாம் தப்பித்தோம்” என்று பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.)

உலகின் மிகப் பெரிய மலைப்பாம்பின் அளவு என்னவாக இருக்கலாம்? பதிவாகிய தகவலின்படி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருந்த ஒரு வனவிலங்குக் காப்பகத்தில் சுமார் 7.3 மீற்றர் (24 அடி) நீளமான ஒரு மலைப்பாம்பு இருந்திருக்கின்றது.

ஆசிய மலைப்பாம்புகள் மிக நீண்டவையாக இருந்த போதிலும் (மிகக் கூடுதல் நீளமாக 9.5 மீற்றர் வரை) அவுஸ்திரேலியாவில் ஒரு மீற்றருக்கு மேல் வளராத மலைப்பாம்பு இனங்களும் இருக்கின்றன.

இரையைக் கண்டறிய மலைப்பாம்புக்கு உதவுவது அதன் இரு கண்களுக்கிடையேயுள்ள வாய்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரு பள்ளமான பகுதிதான். இது வெப்ப இரத்த இரை பக்கத்தில் இருப்பதைப் பாம்பிற்கு உணர்த்துகிறது.

வேறு எந்த மிருகமாவது கைவிட்டுச் சென்ற இருப்பிடத்தை நாடி, அங்கே முட்டைகளை இடுவது இதன் வழமை. ஒரு தடவையில் 100 முட்டைகள் வரை இது இடுவதுண்டு. பிறந்த பாம்புக் குட்டி அசலாகத் தன் தாயை உரித்து வைத்தது போல இருக்கும் என்கிறார்கள். ஏறத்தாழ 30க்கு மேற்பட்ட இன மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. சிலவற்றால் மரங்களில் ஏற முடிவதுண்டு. ஏனையவை, தரையில்தான் எங்காவது பதுங்கிடத்தில் மறைவாக வாழ்கின்றன. மலைப்பாம்புகள் நல்ல நீச்சல்காரர்கள் என்பது இன்னொரு தகவல். இதன் வால் முனைகளில் உள்ள எலும்புகளைக் கொண்டு, இவை பல்லிகளின் வழித்தோன்றல் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

பொதுவாக, ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்களில் இவை வாழும். நஞ்சு என்பது அறவே கிடையாது. மழைக்காடுகளிலும், வனாந்தரங்களிலும் காணப்படும் இவற்றைப் பலர் செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்த்து வருகின்றார்கள். யாராவது சீண்டினால் ஒழிய இது ஆபத்து விளைவிக்காத ஓர் உயிரினம் என்கிறார்கள்.

இதற்கு நேர்மாறாக, உலகின் மிக ஆபத்தான பாம்பினங்களில் மலைப்பாம்பும் ஒன்று என்கிற கருத்தும் உண்டு. ஆப்பிரிக்காவில் காணப்படும் ‘பாறை மலைப்பாம்பு’ (Rock Python) எனப்படும் இனம் சட்டெனக் கோபப்படக் கூடியதாம். (சில மனிதர்களைப் போல). எனவே, இது மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றார்கள்.

விழுங்கும் உயிரினத்தின் உரோமம், இறகுகள் தவிர மற்றைய உடல் பகுதிகள் அனைத்தையும் இது ஜீரணித்து விடும் என்பது மலைப்பாம்பு பற்றிய மலைப்பைத் தரும் இன்னொரு தகவல்.

பொதுவாக, இது ஒரு முறை சாப்பிடும் இரை, இதன் பல வார காலப் -சில சமயங்களில் மாதக்கணக்கான- பசியைப் போக்கி விடுகின்றது. எனவே, இது ஓர் ஆண்டில் நான்கு அல்லது ஐந்து தடவைகள்தான் சாப்பிடுகின்றது என்ற தகவல் நமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை? இப்படி மனித உடல் அமைப்பும் இருந்தால் எவ்வளவு சௌகர்யம் என்று நினைக்கத் தோன்றுகின்றதல்லவா?

தரையில் ஒரு மணி நேரத்தில் இதனால் ஒரு மைல் தூரத்தைக் கடக்க முடியும். வாழும் இடங்களுக்கு ஏற்ப இதன் தோல் நிறம் அமைவதால் தன் இரையை மறைந்திருந்து தாக்க இதனால் முடிகின்றது.

மனிதனின் பேராசை இவற்றையும் விட்டு வைக்கவில்லை. மலைப்பாம்புகளின் தோல் அழகானது என்பதால், இவற்றை மனிதர்கள் கொன்று வருகின்றார்கள். இவற்றின் தோல் கொண்டு செய்யப்படும் பல பொருட்கள் சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படுவதுண்டு. பிடித்து வைத்து வளர்த்தால், இதன் ஆயுட்காலம் 40 ஆண்டுகாலம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது காலங்காலமாக வழமையில் உள்ள முதுமொழி. படை நடுங்குமோ இல்லையோ பலருக்குப் பாம்பென்றாலே ஒரே கிலிதான். பாம்பாக இருந்தால் என்ன? பாயும் புலியாக இருந்தால் என்ன? அவற்றிற்குத் தொந்தரவாக இருக்கும் வரை, எந்த விலங்கினமும் இந்த இரண்டு கால் விலங்கினத்திற்கு எதிரியேதான்!

About The Author

1 Comment

Comments are closed.