மலையிலே… மலையிலே (2)

கோதை ஆசிரியர் பணிக்குப் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். மாலை நேரங்களிலும் பள்ளி விடுமுறைகளிலும் இந்தப் பிள்ளைகளுக்குப் பாட்டு, நடனம், கைவேலை என்று புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அதனால் பிள்ளைகளுக்கு அவளிடம் கொள்ளைப் பிரியம்.

ரோகிணி நடந்தவற்றையெல்லாம் விளக்க, கவனமாகக் கேட்டுக் கொண்டாள் கோதை. அவள் சொல்லி முடித்ததும் மைனா, "அக்கா, நாங்க ஏழைகளா இருக்கோம்னுதான அச்சயா எங்கள இப்படிக் கோவிக்கிறா?" என்றாள் பரிதாபமாக.

ரேவதி, "இல்லக்கா, அவளுக்கு எங்களுக்கு இங்கிலீசு தெரியலைன்னுதேன் எளப்பம்" என்றாள்.

"ஏங்க்கா, சென்னையில படிச்சா பணக்காரரா ஆயிருவோமாக்கா?" என்றாள் ரோகிணி ஏக்கமாக.

இதை எல்லாம் கேட்டுக் கோதை அக்கா சிரித்து விட்டாள், "அடப் பிள்ளைங்களா, நீங்க எதுக்குடி இப்படி வருத்தப் படுறீங்க? சொல்லப் போனா நீங்கள்ளாம் பெருமைப் படணும்டி" என்றாள்.

அவர்கள் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்க்க, "சரி, விளக்கமா சொல்றேன் கேளுங்க" என்று விவரிக்க ஆரம்பித்தாள்.

அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்கள்.

வழக்கம்போல மறு நாள் காலை ரோகிணி வீட்டில் சிறுமியர் பட்டாளம் கூடியது. லட்சுமி ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து வந்திருந்தாள்.

"அச்சயா, நீ சீம்பால் சாப்பிட்டிருக்கியா?" என்று கேட்டாள் லட்சுமி.

"சீம்பாலா? அப்படின்னா என்ன?"

"சீம்பால்னா என்னென்னு தெரியாதா? ஆச்சரியமாயிருக்கே" என்று வியந்த லட்சுமி, அவளுக்கு விளக்கினாள்:

"மாடு கன்னு போட்ட ரெண்டு மூணு நாளைக்குத் தர்ற பால் ரொம்ப சுவையா இருக்கும். அதுக்குப் பேர்தான் சீம்பால். நீ இதுக்கு முன்னாலே குடிச்சதே இல்லையா?"

"இல்லை. ஆனால் நான் வேற வேற •ப்ளேவர்ல மில்க் ஷேக் சாப்பிட்டிருக்கேன்" அக்ஷயா விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

"அதெல்லாம் செயற்கையான சுவை. இதுதான் இயற்கை. இயற்கைதான் சிறந்ததுன்னு எங்க டீச்சர் சொன்னாங்க" என்றாள் லட்சுமி தானும் விட்டுத் தராமல்.

அக்ஷயா முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து போய்விட்டாள். ஆனால் சீம்பாலைக் கருப்பட்டியுடன் காய்ச்சிப் பெரியம்மா தந்தபோது சுவைத்துச் சாப்பிட்டாள். மில்க் ஷேக்கின் சுவையை விட சீம்பாலின் சுவையே பிடித்திருந்தாலும் அதனை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"எங்க பண்ணையில கருப்பட்டி காச்சறாங்க. பாக்க வாறியா?" என்று அக்ஷயாவை அழைத்தாள் செல்லம்.

அவர்களின் திட்டத்தை அறியாத அக்ஷயா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவர்களோடு கிளம்பினாள்.

(தொடரும்)

About The Author