மழைச் சிறார்கள்

மழைகால மேகம் போல்
களி நிறைந்த நெஞ்சங்கள்…

மண் வாசம் வீசும்போது
மனதெங்கும் மத்தாப்பு…

வானம் மின்ன
தூறல் சிந்த
கைகள் தேடும் காகித ஓடம்…

இடை இடையே இடி இடிக்க
செவியோடு அதட்டல் கேட்க
மனது மட்டும் மழையோடு…

விட்டகுறை தொட்டகுறையாய்
மழை விட்டும் தூவானம்…

சிறுவர்கள் மனம் வேண்ட
மரக் கிளைகள் பெய்யும்
மீதி மழை…

"நான் அழைத்தால் மழை வரும்;
மழை வந்தால் ஊர் செழிக்கும்"!
மரம் சொன்ன சேதி அது…

மழையப் பாத்து நாளாச்சு
காகித ஓடமெல்லாம் பழசாச்சு…
வானம் பாத்த பூமி போல
ஏங்கித் தவிக்குது எங்க மனம்…

மரம் சொன்ன சேதி
அப்போ விளங்கல…
இப்போ மழையும் இல்ல
சேதி சொல்ல மரமும் இல்ல…

About The Author