மாப்பிள்ளை அழைப்பு

(இது ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்படும் கதை)

சன்னிதானத்த முழுசா சுத்தி முடிச்சிட்டு இதோ ஸ்ரீகாந்த் ஒரு தூணுல சாஞ்சு உக்காந்துகிட்டான். அந்த கோதண்ட ராமன் சன்னிதானத்தில வேற பக்தர்கள் யாருமில்ல. ஆஞ்சனேயர், வினாயகர், கோதண்ட ராமர் அப்டீன்னு மூணு சுவாமிகளோட அர்ச்சகர்கள் மட்டுந்தா அங்க இருக்கா.

"மாமா நாழியாயுடுத்தே சன்னிதானத்தப் பூட்டீண்டு கிளம்பலாமல்லையோ?" இளையவர் கேக்க, "மண்டபத்திலயிருந்து மாப்பிள்ளைய அழச்சிண்டு வரதா சொன்னா. இன்னுங் காணலெ; அவாளை எட்டரை மணிக்குள்ள வரச்சொன்னேன்.. இன்னும் வரல. நாம கதவ சாத்திண்டு கிளம்பிண்டெ இருப்போம்." பெரியவா இப்படிச் சொல்ல அத கேட்டுக்கிட்டிருந்த ஸ்ரீகாந்து எழுந்து, "மாமா.. சித்த நாழி பொறுங்கோ! அவா கிளம்பி வந்துண்டு இருக்கா. நான் மாப்பிள்ள ஆத்துக்காரந்தான்."

"சரிடா அம்பி மணி இப்பவே எட்டே முக்காலாரது! நாங்க பஸ்ஸ பிடிச்சிண்டு ஆத்துக்கு போகவேணாமோ? இன்னு பத்து நிமிஷம் பாத்துட்டு ஒன்பது மணிக்கு டான்னு கதவ சாத்திட்டு கிளம்பிண்டே இருப்போம்."

"நான் போயி அவா எல்லாத்தையும் சீக்கிரமா வரச்சொல்ரேன்." அப்டீன்னு சொல்லிகிட்டே ஸ்ரீகாந்து வெளிய வந்து தன்னோட பைக்கக் கிளப்பீண்டு மண்டபத்து வாசல்ல வந்து நின்னான். உள்ள ஏராளமான கூட்டம். இதுல எல்லாமே ரெண்டாத்து சொந்தக்காராதான்.

உள்ள நுழைஞ்ச ஸ்ரீகாந்து தூரத்தில மாப்பிள்ளையோட அப்பாவ பாத்திட்டு அவராண்ட "மாமா ஒன்பது மணிக்கெல்லா சன்னிதானத்தில கதவ சாத்திடுவாளா! எல்லாரையும் செத்த சீக்கிரமா கிளம்ப சொல்றேளா!"

"இதோ மாப்பிள்ள ரெடிய நின்னிண்டு இருக்கான்! நி போயி பொண்ணு ஆத்துக்காராள கிளம்பச்சொல்லு!"

ஸ்ரீகாந்து கூட்டத்தில தொழாவிண்டே போயி கடைசியில பொண்ணோட அப்பாவாண்ட "மாமா நாழியாயிண்டே இருக்குது! எல்லாரையும் செத்த சீக்கிரம் கிளம்பச் சொல்லலாமே! ஒம்பது மணிக்கெல்லா சன்னிதானத்தில கதவ சாத்திடுவா!"

"இதோ இங்க எல்லாம் ரெடி! பொம்நாட்டிக கிளம்ப நாழியாயிடுத்து! எல்லாம் செத்த சீக்கிரம் கிளம்புரேளா!"

ஸ்ரீகாந்து அப்படியே திரும்பி தூரத்தில நின்னுண்டிருந்த மாப்பிள்ள ஸ்ரீராம் கிட்ட வந்து "வா காருக்கு போகலாம்!" அப்டீன்னு கூப்பிட, பக்கத்தில இருந்த பெரியம்மா "ஏண்டா அம்பி அவன டீக்கடைக்கு கூட்டீண்டு போற மாதிரி கூப்பிடுர! முதல்ல வாத்தியக்காராள இங்க வரச்சொல்லு.. பொண்ணோட தோப்பனார வரச்சொல்லு!"

"சரி மாமி!" அப்டீன்னு சொல்லிகிட்டே ஸ்ரீகாந்து வாசப்பக்கமா வர்ரப்போ அவனோட ஆம்படையா கிரிஜா வேகமா வந்து

"உங்கள எங்கெல்லா தேடுரது! அப்டி இவளோ நாழியா எங்கே தொலைஞ்சேல்?"

"ஏண்டி சன்னிதானம் வரைக்கும் போயிருந்தேன். அங்க கதவ சாத்தப்போரா! அத இங்க சொல்லீண்டு போலாம்னு வந்தா இங்க எல்லாரும் சாவகாசமா கிளம்பிண்டு இருக்கா!"

"இங்க எல்லாரும் கிளம்பியாயிடுத்து! எனக்கு இங்க புடவைக்கு ஃபிலீட்டு பிடிக்க வரல ஒத்தாசைக்கு நீங்க கிடைப்பேளோன்னு பாத்தேன்!"

"உம் உம்! இவாள்ளா கிளம்புர மாதிரியே தெரியல!" புலம்பிக்கிட்டே ஸ்ரீகாந்து வெளிய வந்து நிக்க, அவனோட ஆம்படைய கிரிஜாவும் பின்னாடியே வந்தா. இதோ ஒருவழியா மேள தாளத்தோட பொண்ணாத்துக்காரா மாப்பிள்ளாத்துக்காரா எல்லோருமா மாப்பிள்ளைய வாசலாண்ட கூட்டீண்டு வந்திட்டா! இனி காருக்குப் பின்னாடி மெதுவா ஊர்கோலமாப் போகவேண்டியதுதான் பாக்கி! இது எப்பப் போயி முடியிரது?

ஸ்ரீகாந்துக்கு ஒரு உபாயம் தோணித்து! வெளிய கூரையில்லாத கார் பூவால அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை அழைப்புக்காக நிக்க வச்சிருந்தா! இது மாப்பிள்ளை அழைப்புக்காக மட்டும் பயன்படுத்துற மண்டபத்தோட காரு! உள்ள கார் டிரைவரும் பின்னாடி மாப்பிள்ளைக்கு இடம் விட்டு ரெண்டு மூணு வாண்டுகளும் உக்காந்திருந்தாங்க.

ஸ்ரீகாந்து டிரைவராண்ட போயி "என்னப் பண்ணுவேளோ ஏது பண்ணுவேளோ தெரியாது.. மாப்பிள்ள இன்னும் ரெண்டே நிமிஷத்தில சன்னிதானத்துக்குப் போயிடணும்! இவாள்ளா ரொம்பவுமே நாழியாக்கிண்டிருக்கா! ஒம்பது மணிக்கு கதவ சாத்திடுவா!" அப்டீன்னு காதுல மெதுவா சொல்ல அவரும் "சரிங்க சரிங்க!" அப்டீன்னு தலைய ஆட்டுனாரு.

மாப்பிள்ள காருல ஏறினதும் காரு கிர்ருன்னு வேகமா போயிடுத்து! அவ்வள்ளவுதான் அங்க ஏக கூச்சலும் குழப்பமும்தான்.

"அச்சச்சோ! மாப்பிள்ள! மாப்பிள்ள! அச்சச்சோ! வண்டியில குழந்தைங்க இருக்காங்கன்னா!"

"அச்சச்சோ! மாப்பிள்ளைய கடத்தீண்டு போறாளே! பிடிங்கோன்னா!"

"யாராச்சும் போலீசுக்கு போன் பண்ணுங்கோளே!"

"கோப்பாலா சீக்கிரமா வண்டிய எடு! அவங்களப் பிடிக்கலாம்!"

"ராகவா! கனெசா! சீக்கிரம் வந்து வண்டிய எடுங்கோ!"

அப்பத்தான் ஸ்ரீகாந்து தன்னோட பைக்கத் திருப்பிக்கிட்டு இருந்தான்.

இதோ கிரிஜா வேகமா வந்து வண்டியில ஏறி உக்காந்துகிட்டு "சீக்கிரம் வண்டிய எடுங்கோன்னா! எடுங்கோ!"

"நீ கீழயிரங்கு!"

"ஐயோ! சீக்கிரம் வண்டிய எடுங்கோளே!"

"நீ முதல்ல கீழ இறங்கினாத்தா நா வண்டியில ஏறி வண்டிய ஸ்டார்ட் பண்ண முடியும்!"

ஒரு வயசுப்பய்யன் கூரையில்லாத காருல மாலையும் கழுத்துமா தனியா ரேசுக்கு போற மாதிரி போகறதப்பாத்து போறவா வர்றவாயல்லாம் பார்த்து சிரிக்கறா! இங்க அஞ்சாரு பைக்கு கிர்ர்! கிர்ர்ரன்னு! அவாள துரத்திண்டு போச்சு! மத்தவாள்ளா ஓட்டமும் நடையுமா நடக்க ஆரம்பிச்சா!

சன்னிதானத்துக்கு மண்டபத்திலயிருந்து சுமாரா ஒன்ற கிலோமீட்டரிருக்கும். இதோ சன்னிதானத்து வாசல்ல மாப்பிள்ள காருலயிருந்து கீழ இறங்கி நிக்க அதுக்குள்ள வண்டியில வந்த மத்தவாளும் வந்து சேந்துக்க ஸ்ரீகாந்து "உம் எல்லா சீக்கிரமா உள்ள போங்க!" அப்டீன்னு சத்தம்போட, அங்க உள்ள அர்ச்சகரும் மந்தரஞ்சொல்ல ஆரம்பிச்சிட்டாரு! இவங்க அர்ச்சன, கற்பூர ஆரத்தி எல்லா முடிச்சிட்டு வெளிய வந்த பின்னாடிதா மத்தவாள்ளாம் வந்து சேந்தா! அதுக்குள்ல சன்னிதானத்தோட கதவ சாத்தீண்டு அர்ச்சகர் மூணு பேரும் கிளம்பீட்டா! இவாள்ளா அங்கேயே நின்னுண்டு "என்னாச்சு? ஏன் கார வேகமா ஓட்டீண்டு போனா? யாரு இப்படிச்செய்யச்சொன்னா?" அப்டீன்னு ஆராச்சி செஞ்சு முடிச்சிட்டு புறப்பட அரைமணி நேரமாயிடுச்சு.

பொண்ணோட அப்பா யாராச்சும் நாலு பேரு வண்டி எடுத்திண்டு போயி வாத்தியக்காராள அழச்சுண்டு வாங்கோன்னு சொல்ல ஸ்ரீகாந்தும் இன்னும் மூனு பேருமா போயி அவாளையும் அழச்சுண்டு வந்துட்டா! யல்லா நல்லதுக்குதான்! அப்டீன்னு ஒரு முடிவுக்கு வந்து அப்புறம் அங்கேருந்து ஊர்கோலமா மண்டபத்துக்கு மாப்பிள்ளை அழைப்பு தொடங்கிச்சு.

சுபம்.

About The Author

1 Comment

Comments are closed.