மாற்றம் (2)

“ஆமா, நீங்க எங்க வேலை பார்க்குறீங்க?” – இவ்வளவு நாள் கழித்து என சாவகாசமான கேள்வி‚

“நா கூலி வேலை பார்க்குறேன் சார்… நெல்லு மண்டியில மூட்டை தூக்குறேன்…”

கொஞ்சம் நேரம் உறைந்து போனேன் நான். பிறகு கேட்டேன்.

“அப்போ இன்னைக்கெல்லாம் உங்க வருமானம் போச்சு… இல்லையா?”

“ஆமா சார்… என்ன சார் பண்றது? சில சமயம் அப்படித்தான். அதுவா அப்படி அமைஞ்சு போகுது. ஏத்துக்க வேண்டியது தான்…”

“அது சரிதான்…” ஆமோதித்தேன். மாறுதல்கள் ஏற்படும் போது அதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் பக்குவ மனநிலை, எதிர்கொள்ளத் தயார் படுத்திக் கொள்ளும் நிதர்சனம், போராட்ம் நிறைந்த வாழ்க்கை‚

“போனவாரம் பூராவும் பாருங்க சார்… போலீஸ் டார்ச்சர் அதிகமாயிடுச்சி. டிராஃபிக் சரிபண்றோம்னுட்டு விரட்டிட்டே இருந்தாங்க… ஒரு ஓரமா அப்டி சைடுல இருந்துக்கிடுறோம்னு சொல்லிப் பார்த்தோம். கேட்கல… இடை இடைல அப்படி வர்றது தான், போறது தான்… ஆனா நம்ப இளநிக் கடைக்கார அண்ணாச்சி இருக்காரு பாருங்க… இனி இங்க இருக்க முடியாதுப்பான்னு முடிவே பண்ணிட்டாரு… போனவர் போனவர் தான்… நாலுரோடுல எங்கிட்டோ கடை போட்டிருக்கிறதா சொன்னாக… அதுக்கப்புறம் யாருமே சரியாக் கடை போடலைங்கிறது தான் துயரம்…”

அன்று அவர் ஒத்தை மரத்துக் குரங்கு போல், இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது எனக்கு. நான் வாங்கிய பழங்களுக்கான காசுதான் அன்று அவரது முதல் போணி போல் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது இருட்டிப் போகும். பிறகு கடையை உருட்டிக் கொண்டு போக வேண்டியது தான்.

இது கடந்த வாரம் கண்ட காட்சி என்றால் இன்று என்ன வந்தது? இன்று தான் இல்லையா? அல்லது அன்றிலிருந்து தொடர்ச்சியாகவே இல்லையா? ஏனிப்படி ஆயிற்று? சுரத்தில்லாமல் போனதே அப்பகுதி?

என் நீண்ட வரிசைப் பார்வைக்கு எதிர் வரிசையில் ஒரே ஒரு கருவாட்டுக் கடை தெரிந்தது. மரத்துக்கு அந்தப் பக்கம் நிழலுக்கு ஒதுங்கி ஒடுங்கியிருந்தார் அவர். அதுவும் அப்பொழுது தான் என் கண்ணில் பட்டது. அவரிடம் சென்று கேட்டேன்.

“அதுவா? அந்தம்மாவுக்குப் பேறுகாலம்ல சார்…”

“என்ன சொல்கிறார் இவர்?” – புரியாமல் பார்த்தேன்.

“அது வராது சார்… பிரசவத்துக்குப் பெறவு தான் பார்க்க முடியும்… அவரும் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாரு…”
அந்தப் பெண்ணின் அழகு முகம் என் மனதில் தோன்றியது.

தாய்மையின் செழுமையா அது? அட‚ மடையனுக்கு இதைக்கூடப் புரிந்து கொள்ளத் தெரியவில்லையே? ஆஹா‚ என்ன ஒரு தெய்வீகம்? கையெடுத்துக் கும்பிடலாம் போல் இருந்ததே? அடடா‚ இன்னொரு முறை தரிசிக்கவே முடியாதோ? மனசு வருந்த ஆரம்பித்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை. கையில் பையோடு காய்கறி வாங்கக் கிளம்பினேன் நான்.

வழக்கம் போல் வாராந்திரக் காய்கறிகள் வாங்கும் போது இனி உழவர் சந்தையிலேயே பழங்களையும் வாங்கிவிட வேண்டியது தான். முடிவு செய்து கொண்டேன்.

“என்னப்பா இந்த விலை சொல்றே?” – ஒரு பழக் கடையில் அவன் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்து போனேன். வாங்குவதா, வேண்டாமா?” – சட்டென்று யோசனை வந்துவிட்டது.

“அங்கெல்லாம் பழக்கடைகளைக் காணலை. அதுனால இப்படியா?” – கேட்டிருக்க வேண்டாம் தான். வாயில் வந்து விட்டது. நாக்கைக் கடித்துக் கொண்டேன் அவனறியாமல்.

பிடித்தானே ஒரு பிடி…‚

“நாங்களெல்லாம் வெலை சொன்னா இப்படித்தான் சார் கேட்பீங்க… ஏ.சி. ரூம்ல, ஷோ கேஸ்ல பளபளன்னு வெறுமே துடைச்சு அடுக்கி, வெலையை எழுதி நட்டு வச்சிட்டுப் பேசமா உட்கார்ந்திட்டா கம்முன்னு வாயைப் பொத்திட்டு வாங்கிட்டுப் போவீங்க… வெளில போய் பெருமையா வேற சொல்லிக்குவீங்க… அதானே சார்…”

இப்பொழுது நான் அடக்கி வாசித்தேன். “அதுக்கில்லேப்பா… விலை ரொம்ப அதிகமாத் தெரியுதேன்னு தான்… அங்கெல்லாம் கடை எடுத்தாச்சு… அதான் விலை ஜாஸ்தியாயிடுச்சோன்னு தான்…” – இப்பொழுதும் நான் சரியாகப் பேசவில்லை தான். எனக்கே நன்றாகத் தெரிந்தது. ஏதாவது பேசியாக வேண்டுமே என்று ஆரம்பித்தால் பொருத்தம் இல்லாமல் தான் வருகிறது வார்த்தைகள். பேசாமல் இருப்பதே எவ்வளவோ மேல்.

அவன் அமைதியாக இருந்தான். அந்த அமைதி சரியானதாய்த் தோன்றவில்லை. உள்ளுக்குள்ளே கோபமடைந்துவிட்டானே.
காலைப் பொழுது சரியில்லை. அவனுக்கா அல்லது எனக்கா?

“பழம் இல்ல சார்… போயிட்டு வாங்க…” – பட்டென்று முறித்துக் கொண்டான் அவன்.

என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன். பக்கத்துக் கடையில் வாங்குவோர் சிலரின் பார்வை இங்கே. கூச்சமாக இருந்தது எனக்கு.

எதற்குக் காலையில் இவனோடு பிரச்சனை? சாதாரணமாய், யதார்த்தமாய் பேசுவது கூடத் தவறா? வாடிக்கையாளர் என்றால் பலவிதமாகவும் தானே இருப்பர்? ஏன் இவனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?

“வாங்கினால் வாங்கு. இல்லாவிட்டால் போ…” – என்கிறானே? மேற்கொண்டு எதுவும் பேசுவது சரியாக அமையாது. மெல்ல அங்கிருந்து நழுவினேன். நழுவினேன் என்று தான் சொல்ல வேண்டும். தலையைக் குனிந்து கொண்டிருந்தவன் பட்டென்று நிமிர்ந்தன்.

“போங்க சார்… போங்க… இந்த ரோட்டுக் கடைசீல புதுசாக் கடை திறந்திருக்கானே… அங்க தான நோங்கியிருக்கு எல்லாருக்கும்… எங்களுக்கென்ன தெரியாதா? நல்லா போங்க… வாயே பேசமாட்டான் அங்க. இங்க மாதிரி சுதந்திரமாப் பேரம் பேச முடியாது. அங்க… கையும காசும் தான் நீளும்… எல்லாத்துக்கும்…‚ அதானே இன்னைக்கு நாகரீகம்… நல்லாப் போயிட்டு வாங்க…”

– ஏதோ வயிற்றெரிச்சல் புலம்புவது போல இருந்தது. அது ஏன் அப்படிச் சொல்கிறான்? தன் பழக்கடை தான் மீதி என்பது போலல்லவா பேசுகிறான்?

அன்று பழங்கள் வாங்காமல் வந்தது வீட்டில் சண்டையை உண்டாக்கும் என்று தான் நினைத்தேன்.

நின்னு நிதானமா இன்னும் இரண்டு கடை இருக்கான்னு பார்த்து, வாங்கிட்டு வர வேண்டியது தானே? அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? எனக்குப் பழம் சாப்ட்டாத்தான் சரியாயிருக்கு. வயிற்றுத் தொந்தரவு இல்லாம இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?

கேட்பாள் என்று தான் எதிர்பார்த்தேன். வாயே திறக்கவில்லையே? இவளுக்குத் தான்.

“வாங்கலேல்ல… நல்லதாப் போச்சு… கிளம்புறபோதே சொல்லிவிடணும்னு நினைச்சேன்… அந்தப் புதுக்கடைல போய் வாங்கிடலாம்… எல்லாம் ஃபிரஷ்ஷா இருக்கும்…

“பிரஷ்ஷா இருக்குமா? என்ன கிண்டலா? அப்படீன்னா இத்தனை நாள் நான் அழுகினதையும், புழுத்ததையுமா வாங்கிட்டு வந்திட்டிருக்கேன்…?” – நானும் கேட்டேன் ரோஷமாக.

“போச்சு, ஆரம்பிச்சிட்டீங்களா? சுத்தமா இருக்கும்னு சொல்ல வந்தேன்…”

“அதைத்தாண்டீ கேட்குறேன்… அப்போ இத்தனை நாள் தின்னு தீர்த்தது? சுத்தமில்லாதததையா? புதுசா சொல்ற?”

“அதெல்லாம் கெடக்கட்டும்… இனிமே வாங்கிறதை பிரஷ்ஷா… வாங்குங்க… அவ்வளவு தான்”

“பார்ரா‚ திரும்பத் திரும்ப பிரெஷ்ஷா… ப்ரெஷ்ஷாங்கிறதை? அங்க ஒரு கடை கூட இல்லாம அல்லாடிப் போய் வர்றேன் நான்… பாவமா இருக்கு நினைச்சா… போக்குவரத்து வேறல்ல வெரட்டியிருக்கு அவங்களை…? என்னடா தொடர்ந்து காணலையே? என்னாச்சுன்னு யோசிச்சா இதுதானா சமாச்சாரம்? அட ஆண்டவனே?”

அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான். மனசு அந்த நீண்டு வெறுமையாய்க் கிடந்த சாலை ஓரப்பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டது. சில்லரை வாங்கி விற்கும் சின்னச் சின்னப் பழக்கடைகள் ஒன்று கூட இல்லையே இன்று?

“உங்களுக்குத் தெரியாதா? தெனம் அந்த வழியாத் தானே போவீங்க ஆபீசுக்கு? கவனிச்சதே இல்லையா? எவ்வளவு பெரிய கடை. அடேங்கப்பா?”

“கவனிக்காம இருப்பாங்களா… ஏதோ புதுசாக் கடை திறந்திருக்கான்னு நினைச்சேன்… நமக்குப் பொருந்தாத எடம் மாதிரித் தெரிஞ்சுது… விட்டுட்டேன்‚ மேற்கொண்டு அதைப்பத்தி யோசிக்கலை…”

“போனவாட்டி நீங்க மெட்ராஸ் போனீங்களே… அப்போ உங்ககூட ஜங்ஷன் வர்றப்பவே நான் கவனிச்சிட்டேன்… அப்பவே தீர்மானிச்சிட்டேன்…”

“பெரிய காம்ப்ளெக்ஸ் ஒண்ணு ஓப்பன் பண்ணியிருக்கானே, அதைத்தானே நீ சொல்றே?” திரும்பவும் கேட்டு உறுதி செய்து கொள்ள யத்தனித்தேன்…

“அதேதான்… அதேதான்… நல்லா ஞாபகத்துல வச்சிக்குங்க…”

இனிமேல் உழவர் சந்தைக்கு நான் காய்கறி வாங்கப் போகையிலோ அல்லது ஆபீஸ் முடிந்து வீடு திரும்புகையிலோ அந்தச் சாலை வரிசையிலே அந்தப் பெண்ணின் கடையோ, வேறு கடைகளோ எதுவுமே இருக்காது?

தன் மனைவியின் குழந்தைப் பேறு முடித்து அடுத்தாற் போல் அவன் எங்கு கடை போடுவான்? கடை போடுவானா? அல்லது வழக்கமான கூலி வேலையைத் தொடருவானா? அப்படித் தொடர்ந்தால் அந்த வருவாய் அவனுக்குப் போதுமானதாக இருக்குமா? கைகுழந்தை பராமரிப்பு என்று ஒன்று உள்ளதே? வேறு எங்காவது கடை போடுவதானாலும், அந்தப் பெண்ணை அமர்த்துவது சாத்தியமாகுமா? அந்த இளநீர்க் கடைக்காரன் முன்னதாகவே உணர்ந்து தன் இடத்தை மாற்றிக் கொண்டது போல் இவர்களும் எங்காவது போய்விடுவார்களோ? இனி அங்கே எவருமே வர வாய்ப்பில்லையோ? அந்த எல்லோரின் ஜீவிதம் இனி எங்கு தொடரும்?

இப்பொழுதெல்லாம் அலுவலகம் செல்லும் பொழுது தினமும் அந்த இடத்தைப் பார்க்கத் தவறுவதில்லை தான்.
வெறுமை சூழ்ந்த அந்த நீண்ட வெட்டவெளி, வெயில் காய்ந்த தனிமையில், தன் உறவுகளையெல்லாம் இழந்த துக்கத்தில் வெப்பம் தகிக்கும் தன் பெருமூச்சை பெருத்த ஏக்கத்தோடு வெளிப்படுத்திக் கொண்டே விரிந்து நீண்டு கேட்பாரின்றிக் கிடக்கிறது.

(முடிந்தது)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

2 Comments

  1. nejan

    அழகான படைப்பு. ஆனால் பிழை திருத்தம் செய்யவில்லை. கதையில் அதிகம் வந்துள்ளது …‚….?????

  2. ravi

    உஷா, இனிமை, அருமை. இது இந்தியாவில் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஏழைகளும் எப்படியோ எதையோ விற்று பிழைப்பை நடத்தி விடுகிறார்கள். இது இல்லையென்றால் அது.

    ரவி

Comments are closed.