மாற்றான் – இசை விமர்சனம்

ஹாரிஸ் ஜெயராஜ் – கே.வி.ஆனந்த் ஹிட் கூட்டணியின் அடுத்த ஆல்பம். இதன் வெளியீடு சிங்கப்பூரில் நடந்தது. சூர்யா இதுவரை நடித்திராத வேடம். படத்தின் டீசர் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி பாடல்களைப் பார்ப்போம்!

இரட்டைக் கதிரே

ஹாரிஸ் ஜெயராஜின் பழகிய மெட்டுதான், இருந்தும் க்ரிஸ்ஸின் உச்சரிப்பும் நா.முத்துக்குமாரின் வரிகளும் கவனிக்க வைக்கின்றன. இரட்டையர்களின் வாழ்க்கை, சுபாவம் ஆகியவற்றை வர்ணிப்பதே பாடல். இசையும் ஆர்ப்பாட்டம் இல்லமால் வார்த்தைகளைச் செவி சேர விடுகிறது.

"இவன் வார்த்தை மழைத் துளியாக அவன் மறு வார்த்தை சரவெடியாக" என இரட்டைக் குணம் சொல்கின்றன வரிகள்.

நாணிக் கோணி

இது இரட்டையர்களுக்கான டூயட். விஜய் பிரகாஷ், கார்த்திக் குரல்களுடன் ஷ்ரேயா கோஷலின் ஆல்கஹால் குரல் இணைந்திருப்பது கூடுதல் ஈர்ப்பு! முதலில் விஜய் பிரகாஷின் வசீகரக் குரல் நம்மைச் செவிசாய்க்க வைக்கிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பாடல் முடிந்த பிறகுதான் கார்த்திக்கின் குரலேவருகிறது; இருந்தும் வருடுகிறது!

"கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா?" போன்ற விவேகாவின் வரிகள் அருமை!

தீயே! தீயே!

பா.விஜய் எழுதியுள்ள இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள் ஆலப் ராஜு, சுசித்ரா. ஆரம்பத்தில் வரும் ஃப்ராங்கோ-வின் குரல் விசித்திர ரகம்! இதுவரை தனிப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த ஆலப் ராஜுவுக்கு இது முதல் டூயட்! நன்றாகவே பாடியிருக்கிறார்! துள்ளலான இசைக்கு ஈடு கொடுக்கும் வார்த்தைகள்.

"அழகான வார்த்தை நீயென்றால் முற்றுப்புள்ளி வெட்கம்" போன்ற ஹைக்கூ வரிகள் அசத்தல்!

யாரோ யாரோ

ஆல்பத்தின் ஒரே ஒரு மென் மெலடி! கார்த்திக், ப்ரியா ஹிமேஸ் குரலில், காதல் சோகம் சொல்லும் பாடல். முதல் முறை கேட்கும்போதே மனதைச் சென்றடைகிறது. இசையும் அளவாக ஒலித்து ரசிக்க வைக்கிறது.

"சரி பாதியில் இரவும் பகலும் எனக் கூறியே உலகம் சுழலும்; ஒரு பாதியும் பிரிந்தே போனால் என்னாகும்?"

"திரும்பாமலே நடந்தால் சென்றால் என்னாகும்?" "உனைப் பார்த்தும் பாராதது போல் சிறு வஞ்சம்" எனத் தாமரையின் சோகம் சொல்லும் வரிகள் அருமை!

கால் முளைத்த பூவே!

மொத்த ஆல்பத்தில் தனித்துத் தெரிவது இது மட்டுமே! வித்தியாச இசையுடன் தொடங்கும் பாடல், ஜாவேத் அலியின் மெஸ்மரிசக் குரலுக்குத் தடம் மாறிப் பூச்செண்டு நீட்டுகிறது. இணைந்து பாடியிருப்பவர் மஹாலட்சுமி அய்யர். இதன் பாடுபொருள் காதல்தான் என்றாலும் மதன் கார்க்கி தன் எழுத்தால் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். உதாரண வரிகள்…

"நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!"

ஆல்பத்தின், கடைசிப் பாடலைத் தவிர, மற்ற பாடல்களைக் கேட்கும்போது ஹாரிஸ் ஜெயராஜின் முந்தைய மெட்டுக்கள் நினைவுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஹாரிஸின் ரசிகர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள முடியாது! அத்தனையிலும் அவருடைய பழைய மெட்டுக்களின் சாயல். ஏன் இப்படி?… படத்தின் பின்னணி இசையில் புதுமை படைப்பவர் அதைப் பாடல்களிலும் செய்யலாமே! இனியாவது தன் ரசிகர்களுக்காகப் புது முயற்சி செய்கிறாரா எனப் பார்ப்போம்!…

ஆனாலும் ‘மாற்றான்’, ஹாரிஸ் ஜெயராஜின் வெற்றிப் பட்டியலில் இன்னொன்று என்பதை மறுக்க முடியாது.

About The Author