முகங்கள் (2)

ஓகோ, ஒரு வாரமாய் வீட்டின் முன்புறத்தை அடிக்கடி கழுவி விட நான் தான் காரணமா? சுமார் இரண்டு வாரங்களாய் அவர் என்னிடம் பேசவே இல்லை என்பதும் நினைவில் மோதியது. சந்தர்ப்பம் வாய்த்தால் பேசாமல் ஆளை விடாதவர், பல சந்தர்ப்பங்கள் வாய்த்தும் கூட என்னைத் தவிர்த்திருந்தது உறைத்தது. ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் ஒரு புறம் அவர் பயம் நியாயமோ என்றும் தோன்றியது. அவருக்கு ஐந்து, மூன்றும் வயதில் இரண்டு சிறார்கள் இருக்கிறார்கள். ஒரு தாயாய் நடக்கும் யீபிங்கின் செயல் நியாயம் தான். ஆனால், எங்கள் வீட்டில் நான் மட்டும் தனியாகவா இருக்கிறேன். நோய் எனக்குத் தொற்றினால், குடும்பத்தினருக்குத் தொற்றாதா, இல்லை மருத்துவத்துறையில் இருக்கும் எனக்கு நோயைப் பற்றித் தெரியாதா?

இதே போலத் தான் இர்ண்டு வாரங்களுக்கு முன்னர், ஒரு முறை மாலையில சீருடையோடு நாங்கள் சகசெவிலியர்கள் வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம். வந்த ஒரு வண்டியும் நிறகாமல் எங்களைக் கடந்து போனது. ஒட்டுனர்களுக்கு அவ்வளவு பயம். நோயைப் பற்றிய அரைகுறை அறிவிருந்தால் பயம் தானே வரும். அதுவும் சார்ஸ் ஆரம்பித்திருந்த நேரமது.

நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள சகிப்புத்தன்மையும் சேவை மனப்பான்மையும் எவ்வளவு தேவை. பொதுமக்கள் சுயனலமிகளாக இருக்கிறார்களே! நன்றிகெட்ட உலகம். சார்ஸ் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் தாதியருக்கு நோய் வரும் அபாயம் அதிகம். மருத்துவர்கள் உட்பட அனைவரும் தினமும் இருமுறை காய்ச்சலிருக்கிறதாவென்று சோதித்துக் கொள்கிறோம்.
முதலில் சில நாட்களுக்கு, "என்னடா பிழைப்பு, தாதியர் பணி நோயாளிகளுக்கு சேவை செய்யும் உயரிய பணியென்றெல்லாம் ஆசைப்பட்டு அப்பாவோடு கிட்டத்தட்ட சண்டை போட்டுப் படித்து வேலையில் அமர்ந்து என்ன பயன்?" என்று சலிப்பு தலைதூக்காமல் இல்லை.

சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் வந்திருந்த சமயம். நான் தொடக்கக் கல்லூரிக்குத் தான் விண்ணப்பிப்பேனென்று நினைத்திருந்த அப்பாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதுவும் பல முறை அவர் கூறியிருந்தும் நான் நன்யாங்க் தொழில் நுட்பக்கல்லூரியில் தாதிமைப் படிப்பிற்காக விண்ணப்பிக்கப் போகிறேனென்று அறிந்தும் அவரது கோபம் உச்சிக்குப் போனது. நானோ அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு அழுதபடியிருந்தேன். அப்பாவின் கோபம் மூன்று வேளை பட்டினி வரை தொடர்ந்த போதுதான் அவரது தீவிரத்தையே அறிந்தேன். அப்பொழுது குழப்பமும் கவலையும் என்னை அரித்தது. நல்ல வேளை, அண்ணனும் அம்மாவும் அடுத்த நாள் எடுத்துக் கூறியதும், "என்னவோ செய்ங்க. நல்ல படிப்பாப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னு நான் சொன்னா அவளுக்கும் சரி உங்களுக்கும் என்ன புரியுது. அதெல்லாம் ஒரு வேலையாக்கும், என் மனசுக்குத் துளியும் விருப்பமில்லை. அப்புறம் உங்க இஷ்டம்." என்று கூறிவிட்டார். பல நாட்கள் குழந்தைத்தனமாய் என்னோடு சரியாகப் பேசாமல் இருந்தார்.

முன்பு அண்ணனும் அம்மாவும் அண்ணனுக்கு இந்தியாவில் தான் பெண் எடுக்க வேண்டும் என்றும் அப்பா சிங்கப்பூர் பெண்தான் என்றும் வாதிட்டு கடைசியில் இப்படித்தான் அப்பா விட்டுக் கொடுத்தார். கல்யாணம் முடிந்த ஒரு வருடத்திற்குள், "சிவகாமி, உன்னோட தீர்மானம் சரியாத்தான் இருக்கு. என்ன இருந்தாலும் ரோகிணி மாதிரி இவ்வளவு நல்ல பொண்ணு இங்க கிடைச்சிருக்க முடியுமா? சந்தேகம் தான்." என்று ஒப்புக் கொண்டார். அதே போல நான் பயிற்சி முடிப்பதற்குள் என்னிடமும் கூறியது இன்று போல் பசுமையாய் என் நினைவில் இருக்கிறது. அப்பாவிற்கு இருந்து வந்த மூட்டுவலி அதிகரித்த போது தாங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தார். ஒரு சிகிச்சையும் பலனளிக்காமல், மூட்டுவலிக்காக முதல் முறையாக மருத்துவமனையில் மூன்று நாட்கள் இருந்து சிகிச்சை பெற்று விட்டுத் திரும்பிய அப்பா, "செல்வி, நான் கூட தாதியா இருந்தாக் கேவலம்னு நெனைச்சேன். இந்த மூணு நாளா என்னப் பார்த்துக்கிட்டாளே ஒரு சீனப் பெண், உன்னோட வயசுதானிருக்கும். யப்பா, என்ன ஒரு பொறுமை. என்ன சகிப்புத்தன்மை. செவிலியர்கள் எவ்வளவு உயரிய சேவை செய்ய்றாங்கன்னு எனக்கு இப்பத்தான் புரியுதும்மா. இப்ப, நீயும் ஒரு நர்ஸ் ஆகப் போறேன்னு நெனச்சா எனக்கு ரொம்ப பெருமை இருக்கு" கண்கள் பனிக்கத் தன் உணர்வுகளை வெளியிட்டார்.

நோயைப் பற்றி அறியாமல் மக்கள் ஒதுக்கிவந்தால் நாம் புழுங்க வேண்டியதில்லை என்று கீக்கிரமே எனக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் மாலையில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வருவது பொது மக்கள் எங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க வழி என் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் மிகப் பெரிது.

எங்களைத் தவிர்த்த வாடகை வண்டிகள் இப்போது மக்களால் தவிர்க்கப்படுகின்றன. வருமானம் குறைந்ததில் அவர்களுக்கு இப்போது பாவம் பொருளாதாரத் திணறல்! காரணம், பயம், சார்ஸ் நோயிருக்குமென்று சந்தேகத்திற்குரிய நபர் ஏறிய வாடகை வண்டி ஓட்டுனரை பல நாட்கள் தேடிவிட்டு ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டனர். அவ்வோட்டுநர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெப்பமானிகள், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சீன மூலிகை மருந்துகள் போன்ற வியாபாரிகளுக்கு சுக்கிரதிசை! பொதுமக்கள் பருவத்தைப் போல தங்கள் கவனத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த போது அதையே அலுக்காமல் பேசி அதையே தொலைக்காட்சியில் பார்த்தனர். இப்போது ஈராக் போரை ஹாலிவுட் படத்தைப் பார்ப்பதைப் போல அதே பெட்டியில் பார்க்கின்றனர். அதற்கிடையில் இந்த சார்ஸ் வேறு வந்தது.

(முடிந்தது)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author