முகங்கள் (5)

அண்ணி துணைப்பாடம் எடுக்கப் போகும் தொடக்கப் பள்ளியில் கூட ஓர் இந்தியச் சிறுவன் இரு முறை இரண்டு நாட்களாய் சாப்பிடவில்லை என்றானாம். அண்ணி பரிதாபப்பட்டு மீ வாங்கிக் கொடுக்கிறேன் என்றதற்கும் வேண்டவே வேண்டாமென்றுவிட்டானாம். உடனேயே அண்ணி தொண்டூழியம் பார்க்கும் சிண்டாவிற்குத் தகவல் கொடுத்ததில், அரை மணி நேரத்தில் அந்தச் சிறுவன் வீட்டிற்கு ஓர் அரிசிப்பையும், நீளமான ஒரு ரொட்டியும் வேறு சில தின்பண்டங்களும் அனுப்பச் சிண்டா ஏற்பாடு செய்திருக்கிறது.

இரண்டு இருக்கைகள் தள்ளி இருந்த இரு இந்தியப் பெண்மணிகள் உரக்கப் பேசிக் கொண்டது தற்செயலாகக் காதில் விழுந்தது. "சார்ஸ் நோய் நம்மளவர்களுக்கெல்லாம் வராதாமே. மலாய்க் காரவங்களுக்கும் கூட வராதாம். பன்னிக்கறி சாபிடறவங்களுக்குத் தானாமே வரும்" ஒருவர். "கேக்க நல்லாதானிருக்குக்கா. ஆனா, நோய்க் கிருமிக்கி என்னா ஆறாவது அறிவா இருக்கு. மனுஷ ஒடம்பெல்லாம் ஒரே மாதிரி தானேக்கா. நீங்க வேற இதையெல்லாம் நம்பிக்கிட்டு." – சிரித்தபடி மற்றொருவர்.

"இல்லப்பா. நாம காரசாரமா சாப்பிடறதால நமக்கு வராதுன்னு சொல்லிக்கிறங்க. ஆமா, எய்ட்ஸ் வியாதிய விட கொடுமையானதாமே, ஒரேயடியா மூச்சுத் திணறி தான் சாவுறாங்களாமே. எம்மகன் கூட ‘எய்ட்ஸ் நின்று கொல்லும். சார்ஸ் அன்றே கொல்லும்’னு புதுமொழி சொல்றான்." முதலாமவர், "ஐயோ அக்கா, அதையெல்லாம் நம்பாதீங்க. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவா இருக்கற யாருக்கு வேணா வரலாம். சுகாதாரமா இருக்கறது முக்கியம். பொது இடங்களுக்குப் போய் வந்தா கைய நல்லா சோப்புப் போட்டுக் கழுவணும். முடிஞ்சா குளிக்கலாம். ஒரேயடியா அவ்வளவு தூரம் பயப்படவும் ஒண்ணும் தேவையில்ல. எத்தன பேரு குணமாகி வீட்டுக்குத் திரும்பியிருக்காங்க தெரியுமா. நாம கவனமா இருந்தா வியாதி வராது."

கிளிப்பிள்ளைகளுக்குச் சொல்வது போல சுகாதார அமைச்சும் பல வகைகளில் சார்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சியைப் பரப்பியபடியே தானிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் மூடிய பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்களாகின்றன. பொறுப்பெற்ற ஒருசில பொது மக்களால் சார்ஸைக் கட்டுப்படுத்துவது தாமதமாகவும் சிரமமாகவும் இருந்து வருகிறது.

நான் பணிபுரிவது தொற்று நோய்ப் பிரிவிற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத புற்று நோய்ப் பிரிவு. இருப்பினும் கூட நாங்கள் காலையில் போகும் போது காய்ச்சல் இருக்கிறதாவென்று தினமும் பரிசோதித்துக் கொள்கிறோம். அதன் பிறகே உள்ளே நுழைகிறோம். அது மட்டுமில்லாமல் தினமும் மருத்துவமனையிலேயே ஒளித்துவிட்டு தான் வீடு திரும்புகிறோம். இருப்பினும் கூட, யீபிங் போன்றவர்கள் எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். யீபிங்கைக் குற்றம் சொல்ல வேண்டியதே இல்லை. யீபிங்காவது சற்று படிப்புக் குறைவானவர். ஒரு சில படித்தவர்களும் கூட அவ்வாறே நடப்பதுதான் விநோதமாய் இருக்கிறது.

சிரங்கூனில் ஒரு வாரம் முன்பு நடந்த கூத்தில் இப்போதெல்லாம் உணவங்காடிகளும் கூட ஈயாடுகின்றனவாம். காய்ச்சலுடன் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மர் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி உணவங்காடியில் போய் உணவருந்தியிருக்கிறார்கள். மருத்துவமனை வண்டி வருவதற்குள் அவர்களுக்கு தங்கள் நாவையும் வயிற்றுப் பசியையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. வெளியே வந்து பார்த்து மருத்துவருக்கு பலத்த அதிர்ச்சி.

ஒருமுறை ஜெர்மனிய சுற்றுலாப்பயணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் நகைச்சுவையாகச் சொன்னது நினைவில் மோதியது. சிங்கப்பூரர்களின் பிடித்தமான முக்கிய பொழுதுபோக்கே ‘சாப்பிடுதல்’ என்று புதிதாகக் கண்டுபிடித்ததைப் போலப் பெருமைப்பட்டுக் கொண்டார். நானு இதே நாட்டுக் குடிமகள் தான் என்பதைக் கூறாமல், அந்த ‘ஓராங்பூதே’ சொன்னதற்கு அசடு வழிய சிரித்து வைத்தேன்.

அந்த எண்மரும் ‘காய்ச்சல் இருந்தால் சார்ஸா’ என்று மருத்துவருடன் தெனாவெட்டாய் ஹொக்கெயின்னில் வாக்குவாதம் வேறு செய்திருக்கிறார்கள். எல்லாக் காய்ச்சலும் சார்ஸ் ஆகாது என்ற போதிலும் ‘சார்ஸ்’ நோயின் முக்கிய அறிகுறியே கடும் காய்ச்சல் தான் என்பது பலருக்குப் புரியவே இல்லை. காய்ச்சல் இருக்கிறதா என்றும், காய்ச்சலின் அளவென்ன என்றும் நெற்றியில் கைவைத்து மட்டும் கண்டுபிடிக்கவியலாது என்பதும் பொதுமக்கள் புரிந்து கொள்ளாத மற்றொன்று. தெர்மாமீட்டர் எனப்படும் வெப்பமானியை வைத்து மருத்துவமனையின் உள்ளே நுழையும் பார்வையாளர்களின் உடல் வெப்பத்தை அளந்தால், அவர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு சிலரோ முகம் சுளித்துச் சலிப்பைக் காட்டுகின்றனர். தாதியருக்கு இதனால் வேலை கூடியுள்ளது. ஆனால், அவர்களோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொந்தரவாய் நினைக்கிறார்கள்.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. mini

    Your writings are so good. Whenever I see your name in the stories, I am so happy to see and read.

Comments are closed.