முடி வெட்டும் முனியன்

முடி வெட்டும் தொழிலாளி முனியனுக்கு ஓய்வெடுக்கும் வயதாகிவிட்டது. இருப்பினும் தன் வாழ்வின் வளத்திற்குக் கை கொடுத்து உதவிய இந்த முடிவெட்டும் தொழிலை விட்டுவிட மனம் வரவில்லை. அதே நேரம் தனது தொழிலுக்கு இவ்வளவு நாட்களாக ஆதரவு அளித்துவந்த பொது மக்களுக்கும் ஏதாவது ஒரு வழியில் புதுமையாக உதவிடவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தன்னிடம் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அன்று முதல் இலவசமாக முடி வெட்டிவிடத் தீர்மானித்தார்.

முதல் நாள் ஒரு பூ வியாபாரி அவரிடம் முடி வெட்டிக்கொள்ள வந்தார். வேலை முடித்ததும் பணம் கொடுத்தார். முனியன் வாங்க மறுத்துவிட்டார். மறு நாள் காலை கடையைத் திறக்க வந்த முனியன் கடை வாசலில் ஒரு அழகிய, நறுமணத்துடன் கூடிய மலர்க் கொத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்.

அன்று ஒரு ஸ்வீட் கடை முதலாளி முடி வெட்டிக்கொள்ள வந்தார். அவருக்கும் நல்ல முறையில் முடி வெட்டி விட்டுப் பணம் வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார், நம் முனியன். மறுநாள் கடையைத் திறக்க வந்த முனியன் கடை வாசலில் இனிப்புகள் நிறைந்த அட்டைப்பெட்டி ஒன்றும், நன்றி என்று எழுதப்பட்ட வாழ்த்து மடல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்.

அன்று ஒரு சாட்வேர் இஞ்சினியர் முடி வெட்டிக்கொள்ள வந்திருந்தார். அவரிடமும் பணம் எதுவும் வாங்காமல் முடி திருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை கடையைத் திறக்க வந்த முனியனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. சுமார் பதினைந்து பேர்கள் தங்கள் கைகளில் ஒவ்வொரு பேப்பருடன் முடி வெட்டிக் கொள்ள கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.

முனியன் இலவசமாக முடி வெட்டி விடும் விஷயம் ஈ-மெயில் மூலம் அவர்கள் எல்லோருக்கும் முதல்நாள் முடி வெட்டிக்கொண்டு போன சாட்வேர் இஞ்சினியரால் இலவசமாகவே விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த ஈ-மெயிலின் நகலை ப்ரிண்ட் செய்து கொண்டு கடை வாசலில் கும்பலாகக் கூடி விட்டனர் அந்த நண்பர்கள்.

இலவச சேவையால் தான் மட்டும் மகிழ்ச்சி அடையாமல், பிறரையும் மகிழ்ச்சியடைய வைத்த அந்த சாட்வேர் இஞ்சினியரின் செயலும், புதுமை துளிர்விடுவதாக உள்ளதல்லவா?

About The Author