முதல் மாமன்னரின் மந்திரச் சாட்டை (1)

வானத்து டிராகன்கள் இன்று போரில் ஈடுபட்டிருந்தன. மேகத்திலிருந்து பெரிய ஆறே கொட்டுவதைப் போல மழை பெய்தது. முற்றத்தைச் சுற்றி வளைந்து போன தாழ்வாரத்தின் அடியிலேயே நடந்து பாட்டி வீட்டுக்குப் போகும் படி குழந்தைகளிடம் சொன்னார் வாங் லாய்.

டிராகன்கள் தம் வால்களைக் கருமேக வானில் சூழ்ந்திருந்த சுவர்களின் மீது போட்டு அடித்தன என்றும் அந்த விதமான சண்டைகள் தான் அத்தனை பெருமழையை பூமிக்குக் கொணரும் என்றும் பாட்டி மிகவும் திடமாக நம்பினாள். மழை பாறைகளையும் கற்களையும் சுவர்களையும் முழுக்க நனைத்திருந்தது.

மதியம் பாட்டி சன்னலின் வழியாக மழையைப் பார்த்தாள். உடன் யூ லாங்கும் இருந்தார். கொஞ்ச நேரத்துக்கு அன்றைய மதிய உணவிற்குச் சாப்பிட்டு ரசித்த உணவு வகைகள், தேநீருடன் தின்ற கேக்குகள், பாட்டியின் தூரிகை தீட்டியிருந்த ஓவியச் சாகசம், யூ லாங்கின் தையல் கைவேலைப்பாடு போன்ற ஏதேதோ விஷயங்கள் குறித்துப் பேசினார்கள்.

சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்தது. முத்து போன்ற மின்னிடும் சிப்பிகள் ஒட்டி அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவ்வோவியம் பரந்து விரிந்த நிலப்பரப்பையும் சின்னச் சின்ன மனிதர்களையும் வீடுகளையும், மரங்களையும் மலை மற்றும் நதி ஆகிய பலவற்றைச் சித்தரித்தது.

எத்தனை நீண்ட சுவர் என்று குழந்தைகள் பாட்டியிடம் சொல்லி வியந்தனர். "இது நீண்ட சுவர் தான். இது பிரபல ச்சின் முடியாட்சியின் மன்னன் கட்டிய பெருஞ்சுவரின் ஒரு பகுதியும் கூட. அந்தக் கதையை நீ தெரிந்து கொள்ள வேண்டும். சொல்கிறேன்", என்றாள் பாட்டி.

"பழங்காலத்தில், இந்த ச்சின் மன்னனின் நாட்டு நிலம் நான்கு புறமும் எதிரிகளால் சூழப் பட்டிருந்தது. வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் விநோத கொள்ளைக் கூட்டத்தினர் நாட்டுக்குள் புகுந்தனர். இந்த எதிரிகளைத் தடுக்க மன்னன் ஒரு பெரிய சுவரைக் கட்டி எழுப்பிட நினைத்தார். ச்சின் மன்னன் ஒரு கொடுங்கோலன் என்று சிலர் சொல்வதுண்டு. அவர் புலியைப் போன்றவன் என்றும் தான் செய்ய நினைப்பதைச் செய்து முடிக்கும் மனவுறுதி கொண்டவன் என்றும் கூடச் சொன்னார்கள். வீட்டைச் சுற்றி வேலியாக சுவர் எழுப்புவது போல மாமன்னன் நாட்டைச் சுற்றி பெரிய சுவரை எழுப்பிட ஆணையிட்டான்."

"என் பெயர் ‘ஒரே முதல்’ மன்னர் பெயராக எதிர்காலத்தில் விளங்கும். என்னைப் போல ஒரு அரசன் முன்பெப்போதும் இல்லை. இனியும் இருக்க மாட்டான்", என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அது வரை பெயரும் புகழும் பெற்று வாழ்ந்த அனைத்து அரசர்களையும் பற்றிய வரலாற்று நூல்களையும் எரித்து அழித்தான். தான் மட்டுமே வரலாற்றில் இருக்க வேண்டும் என்ற பேராசை கொண்டாள்.

"பெருஞ்சுவர் நிச்சயமாக மிகப் பெரியது தான். அதுவரை யாரும் செய்திராத சாதனை தான். அந்த நீண்ட சுவரைப் போலவே இந்த சுவரும் தனித்துவம் மிக்கது. நமது நாட்டின் குறுக்கே ஓடும் அந்தச் சுவர் பல நூறு மைல்களுக்கு நீளும். கோயில் கோபுரம் போல உயரமாக வயல்களுக்கு மேலே எழும்பி நின்றது. இரண்டு மாட்டு வண்டிகள் ஓடக்கூடிய அகலம் சுவரின் பருமன். கற்களுக்கிடையே இருந்த மண்ணோ மிகமிகக் கடினம். எதிரிகளை விரட்ட பீரங்கிகளும் அம்பும் வில்லும் ஏந்திய வீரர்களும் நிற்பதைப் பார். அங்கே அந்தச் சுவர் நிற்கும் வரை நாம் பாதுகாப்பாகவே இருப்போம்."

"உண்மையிலுமே நாட்டின் நான்கு பக்கங்களிலும் இந்தச் சுவர் ஓடுகிறதா பாட்டி?"

"இல்லை. ச்சின் மன்னன் சுவரை முடிக்கவில்லை. சுவர் ஒரு ராட்சத குதிரை லாடத்தைப் போல இருக்க வேண்டும் என்பது தான் அவனின் திட்டம். அதன் இரண்டு நுனியும் கடலில் இருக்கவும் திட்டமிட்டான். வேலையைக் கிழக்கில் துவங்கினான். வடக்கில் இருக்கும் பாலைவனம் வரை கட்டினான். அங்கு வேலை நின்று போனது. ச்சின் மன்னன் அந்தச் சுவர் எழுப்பும் பணியை நிறுத்தியதற்கு அவன் தன் மந்திரச் சாட்டையைத் தொலைத்தது தான் என்று பரவலாகப் பேசப் பட்டது.

பாட்டி, "இது வரையிலும் எந்த நாட்டிலும் இத்தகைய நீண்ட சுவர் ஒன்றைக் கட்டும் முயற்சி நடைபெறவில்லை. நூறாயிரக் கணக்கான உழைப்பாளர்களைக் கொண்டு இரவு பகலாக வருடக் கணக்கில் வேலை பார்த்தனர். வேலையின் வேகம் குறைந்தால் கூட சாட்டையடி விழுந்தது. தெய்வங்களும் ஆவிகளும் துணைக்கு வராமல் நிச்சயம் கட்டுமானப் பணி நடைபெற்றிருக்கவே வழியில்லை", என்றார்.

"அத்தனை பெரிய பெரிய செங்கற்களை மனதர்கள் எப்படி முதுகில் சுமந்திருக்க முடியும்? அதுவும் மலை மேலே ஏறுவது என்றால்? மலைத் தெய்வங்களே தான் அந்தக் கற்களை மேலே நகர்த்த உதவியிருக்க வேண்டும். அதற்கும் முன்னால் ஒரு வெண்குதிரை சென்ற சீரான வழி ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தக் குதிரை ஓர் அமானுஷ்யக் குதிரையாக இருந்தது. கற்கள் வளைந்து நெளியும் பாம்பைப் போல அடுக்கப் பட்டன."

"குதிரையின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போயிற்று. பார்வையிலிருந்து அது மறைந்து போனது போல் உணர்ந்தனர். ஆனால், அவர்கள் கவலைப் படவேயில்லை. ஏனெனில், அந்தக் குதிரையின் குளம்படிகளைப் பார்த்து முன்னேறுவதே அவர்களின் திட்டம்."

"அப்போது வடக்குப் பாலைவனத்திலிருந்து ஒரு பேய்க் காற்று வீசியது. மாமன்னரின் வெண்குதிரையின் ஒரு குளம்படி கூட அவர்களுக்குக் காணக் கிடைக்கவில்லை. குதிரை போனதாக நினைத்த திசையில் சுவரைக் கட்டிக் கொண்டே போனார்கள். நாட்கள் கடந்தன. ஆனால், அவர்களால் குதிரையைப் பிடிக்கவே முடியவில்லை. ஒரே ஒரு மனிதனை மேலே அனுப்பிப் பார்த்தார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக குதிரை வேறு திசையில் போயிருப்பதை அறிந்து கொண்டனர். அந்தக் கதை நிச்சயம் உண்மையாகத் தான் இருக்க வேண்டும். என் அப்பாவே மரத்தின் கிளையென விரிந்த அந்த சுவரின் பகுதியைக் கண்டார்."

(மீதி அடுத்த இதழில்)

(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author