முத்தமிழ்ச் சங்கம் (பிரான்சு) நடத்திய இலக்கிய விழாவில்

பரி (Paris என்ற சொல்லின் சரியான பிரஞ்சு ஒலிப்பு) நகரில் விழாக்கள் பொதுவாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடைபெறும். ஆனால் மே மாதம் 8 ஆம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2039 மேழம் சித்திரை 28) வியாழன் அன்று இலக்கிய விழாவை நடத்தினார் தமிழன்பர் திரு மிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள்.

கரணியம் அன்று பிரான்சில் விடுமுறை நாள். 1945 -ஆம் ஆண்டு மே மாதம் 8 -ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற நாள். அதன் நினைவாக அந்நாளைப் பொது விடுமுறை நாளாகப் பிரஞ்சு அரசு அறிவித்துள்ளது. எனவே தான் அன்றைய விடுமுறை நாளில் இலக்கிய விழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் தாத்தா நினைவு நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழா நடைபெற்ற இடம் : லா கூர்நெவ் (La Courneuve) என்ற பரிநகரின் புறநகரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம். அழகாக அலங்கரிக்கப்பட்ட விழா மணடபம். அதில் விழாவை ரசிக்க மக்கள் திரளாக வந்திருந்தனர். விழாவைத் தொகுத்து வழங்கி அமர்வுகளில் தலைமை தாங்கி நடத்தித் தர வந்திருந்தார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள்.

மணி மதியம் 3.30 அளவில், "தணியாத காதல் தமிழ் மீது கொண்டு அணிஅணியாக வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள். இனிய நல் வாழ்த்துகள்…" என அவர்தம் கணீர்க் குரல் அவையத்தில் உரத்து ஒலித்தது. தட்சிணாமூர்த்தி இணையர் மங்கல விளக்குகள் ஏற்றினர். ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாரதிதாசனின் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட்டது. (இப்பாடலே புதுச்சேரி மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகும்). உடன் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் வந்திருந்தோரை முறைப்படி விளித்து வரவேற்றார். முதல் அமர்வு தொடங்கியது.

முதலில் கவிஞர் கி. பாரதிதாசன் தம் கவிதையைப் படித்தார். தம்மையும் தமிழையும் தமிழ்ப் பகைவரிடமிருந்து தமிழ்த் தாத்தாதான் காத்திடவேண்டும் என்பது அவருடைய கவிதைகளின் மையக் கருத்து.

அடுத்துத் தமிழியக்கன் தேவகுமரன் தம் வாழ்த்துரையை வழங்கினார். ரெயுனியன் என்ற பிரஞ்சுத் தீவில் பிறந்து வளர்ந்து வந்தவர் அவர். அங்கே தமிழர்கள் தாய் மொழியாம் தமிழைத் தம் இளைய தலைமுறைக்குத் தராமல் போனதால் இளைய தலைமுறை தமிழறியாமல் போன அவலத்தை உருக்கமாக எடுத்துரைத்தார். பிரான்சில் வாழும் தமிழர்களாவது விழித்தெழுந்து விழிப்புடன் தமிழைப் பேணி இளைய தலைமுறைக்கு அதனை ஊட்ட வேண்டும் தமிழ்த் தாத்தாவைப் போல என்பது அவர் உரை முழுக்க ஊடுருவி இருந்தது.

தள்ளாத வயதிலும் உள்ளம் கொள்ளாத அளவு (தமிழ்க்) காதல் கொண்டு உலாவும் முதுபெருங்கவிஞர் கண. கபிலனார் (முதுமை கரணியமாகத்) தள்ளாடியபடியே வந்து சேர்ந்தார். படமாடும் தமிழ்த் தாத்தா அங்கே என தமிழ்த் தாத்தாவின் படத்தைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், நடமாடும் தமிழ்த் தாத்தா இங்கே வருக வருக வருக என வரவேற்க அவையில் சிரிப்பொலியும் கரவொலியும் கலகலத்தன. அவருக்கென நடுநாயகமாக நாற்காலி காத்திருந்தது. வந்த களைப்பின் காரணமாகத் தம் கவிதையைப் பிந்தித் தருவதாகக் கூறி அவர் அமர்ந்து விட்டார்.

தொடர்ந்து பேச அழைக்கப்பட்டவர் யோகானந்த அடிகள். தமிழ்த் தாத்தாவின் வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளைத்தொட்டுப் பேசினார். மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்த அவரின் கருத்து வெள்ளம் மக்களைத் தொட்டது. தமிழ்க் காதலுக்கு வித்திட்டது. புலவர் வ. கலிய பெருமாள் தம் உரையைக் கட்டுரையாகவே தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். பேசுவது காற்றோடு போய் விடும், எழுத்தில் இருப்பதுதான் நிலைக்கும் என்பது அவர் கருத்து. தமிழ்த் தாத்தாவைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய புலவர் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிப்பதில் தாத்தா பட்ட துன்பங்களையும் இறுதியில் அவர் அவற்றைச் சமாளித்த விதங்களையும் தெளிவாக விளக்கினார்.

முதல் அமர்வு முடிந்த பின் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் 15 ஆம் ஆண்டுத் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி சட்டம் கட்டிய வாழ்த்தைப் பரிசளித்தார். எல்லாத் தமிழ் விழாக்களிலும்தம் கைவண்ணததைக் காட்டித் தொண்டு செய்து வரும் ஓவியர் திரு அண்ணாதுரை அவர்களின் 60 -ஆம் ஆண்டு நிறைவைப் பாராட்டும் வகையில் அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசளித்தார். திருமதி அண்ணாதுரை அவர்களுக்குத் திருமதி பூங்குழலி பெருமாள் பொன்னாடை போர்த்தினார்.

உடனடியாக இரண்டாம் அமர்வு தொடங்கியது. லியோன் என்ற தொலை தூர நகரிலிருந்து வந்திருந்த கவிஞர் மாமல்லன் தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பாராட்டிக் கவிதை படித்தார். தொடர்ந்து கவிதை படிக்க வந்த கவிஞர் திருமதி பூங்குழலி பெருமாள் நல்ல ஓட்டமும், பொருள் ஊட்டமும் கொண்ட தம் கவிதைகளை இனிய குரலில் வாசித்து அவைக்குச் சுவை கூட்டினார்.

புலவர் பொன்னரசு தமிழ்த் தாத்தாவின் தொண்டுகளைப் பற்றிக் கூறி அவர் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும் தமிழ்த் தாத்தாவுக்கும் இருந்த குரு சீடர் உறவினைச் சிறப்பாகப் புலப்படுத்தினார். இதுவரை களைப்பாறிய முதுபெருங்கவிஞர் கவிசை சித்தர் திரு கண கபிலனார் தம் கவிதையை அருவியாகப் பொழிந்தார். இலக்கணம் இலக்கியம் இரண்டுக்கும் உள்ள தொடர்பினைக் கவிதையில் புலப்படுத்திய அவர் கவிதை எழுதும் போது இலக்கணத்தையோ கவிதையையோ நினைக்கக் கூடாது என்ற தத்துவத்தை உரைத்தபோது அவை முழுக்கக் கையொலிதான்.

தொடர்ந்து ஆசிரியர் பி. சின்னப்பா தம் இடிக் குரலில் தமிழ்த் தாத்தா பற்றிய தகவல்களை அடுக்கினார். தம் தலைப்பையும் மறந்து விடாமல் தாத்தா இன்று வந்தால் என்ன என்ன அவலக் காட்சிகளைக் காண்பார் என்பதையும் விளக்கினார்.

இறுதியாகத் தம் சிறப்புரையை வழங்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தாத்தாவின் எள்ளு கொள்ளுப் பேரப் பிள்ளைகள் அவரை இன்று எப்படிப் பாக்கிறார்கள் எனச் சுருக்கமாக ஆனால் சுவையாக விளக்கினார். இவ்விழா பற்றிச் செய்தி வெளியிட்ட இணைய தளங்களுக்கு நன்றி கூறித் தம் உரையை முடித்தார்.

இறுதியில் பலகுரல் மன்னன் திரு மோரோ நடராசன், வாரியார், நம்பியார், சனகராசு, பாலையா, ரசினி… போன்றவர்களின் குரல்களில் பேசிக் காட்டியது சுவையாக இருந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களைப் பேராசிரியர் அறிமுகப் படுத்திய பாங்கும் அவரவர் உரை முடிந்த பின் அவர்கள் பேச்சு வேகத்தில் சொல்ல மறந்த துறந்த தகவல்களைக் குறிப்பிட்டு நிறைவு செய்ததும், நகையோடும், சுவையோடும் தொகுத்து வழங்கியதும் அருமை.

இறுதியாக அடியார்க்கன்பன் திருமிகு கோவிந்தசாமி செயராமன் அவர்கள் அனைவர்க்கும் நன்றி கூறி அடுத்த ஆண்டுச் சிறப்பாக நடைபெற இருக்கும் இலக்கிய விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தலோடு விழா நிறைவு பெற்றது. பின்னர் அனைவரும் சிற்றுண்டி அருந்தி இல்லம் திரும்பினர்.”

About The Author