முழு மனிதன் ஆகின்றாய்!

(Rudyard Kipling எழுதிய If என்ற கவிதையின் தமிழாக்கம்).
(மூலக் கவிதை secular Gita in English என்று ராஜாஜியால் பாராட்டப்பட்டது.)

அருகிருக்கும் எல்லோரும்
ஆத்திரத்தின் வசப்பட்டார்.
அத்தனைக்கும் பழி உன்மேல்.
ஆனால் நீ அமைதி உரு.
பிறர் உன்மேல் சந்தேகப்
படுகின்றார் என்றாலும்
குன்றாத் தன்னம்பிக்கை.
குறைகுறித்தும் கண்ணோட்டம்.
பொய்சொல்லப் பட்டாலும்
பொய்தனிலே உழல்வதில்லை.
மெய்சோர்வு வாராமல்
மிக நேரம் தாங்கிடுவாய்.
வெறுப்புக்கு ஆளாயும்
வெறுப்பை நீ வழங்குகிலை.
சான்றோனாய்த் தோன்றுகிலை;
சமத்காரம் பேசுகிலை.
கனவுகளிலே லயித்தும்
கனவுக்கு அடிமையிலை;
சிந்திக்க இயலும், எனில்
சிந்தனையே இலக்கல்ல.
வெற்றியாம், நிலைகுலைக்கும்
வேதனையாம் போலிகளைச்
சற்றேனும் தயங்காது
சந்திப்பாய் சமநோக்கில்!
உன்வாய்மைச் சொற்களினை
உலுத்தர்கள் திரித்துவிட்டு
உணராதார் அதில் விழினும்
உன் இதயம் தாங்கும் அதை!
உன் ஆயுள் லட்சியங்கள்
உடைந்தாலும் கண் எதிரே
உளுத்த பழம் கருவிகள்தாம்;
ஒட்டவைக்க முயல்கின்றாய்!
வென்றுவிட்ட அத்தனையும்
வெறும்குவியலாக்கி வைத்துப்
பணயம் எனவே சுழற்றிப்
பகடை உருட்டியதில்
போச்சுது என்றாலும்
புதிதாகத் துவங்குகிறாய்;
போன நஷ்டம் பற்றி தும்
பேசுவதா? மூச்சில்லை!
இதயத்தை, நரம்புகளை
இணைக்கின்ற தசைநாணை
இழப்புக்குப் பின் நெடுநாள்
இயங்கவைக்க முடிகிறது!
விடாதே, தொடர்! என்று
விரட்டுகிற மனம்தவிர
வேறெதுவும் இல்லாத
வேளையிலும் தொடர்கின்றாய்!
கும்பலொடு பழகிடினும்
கொள்கையிலே கோபுரம் நீ!
மன்னரொடு நடந்தாலும்
மிகஎளிமைப் பண்பிருக்கும்!
பகைவரும் இன்நண்பர்களும்
புண்படுத்த முடியாது!
அனைவருமே பொருட்டுண்டு;
ஆனால்மிகப் பொருட்டில்லை!
ஆறுபத்து நொடிப்பொழுது
அத்தனையின் முழுத் தொலைவால்
மன்னிப்புத் தாராத
மணித்துளியை நிரப்புகிறாய்!
எனவே,
மகிதலமும் அதளிக்கும்
மாண்பனைத்தும் உனக்கேதான்!
மகனே, நீ அதனோடு
முழுமனிதன் ஆகின்றாய்!

About The Author