மூச்சினில் கலந்துவிடும் மாசு

மாசுகளை, திட நிலை (Solid Waste), நீர் நிலை (Water pollution) மற்றும் காற்றில் இருக்கும் மாசு (Air pollution) என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

திட நிலை மாசுகளுக்கு எடுத்துக்காட்டு, பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் வீட்டில் சமையல் அறைக் கழிவுகள். பல ஆலைகளிலிருந்து வரும் sludge எனப்படும் கழிவும்திட நிலை மாசுதான்.

ஆலைக் கழிவுகள், வீட்டு கழிவுகள் ஆகியவை திரவ நிலையில் இருந்து, ஆற்றிலோ ஏரியிலோ கலக்கும்பொழுது நீர் நிலை மாசு ஆகும்.

காற்றில் உள்ள தூசிகளும் வண்டி மற்றும் ஆலையில் இருந்து வரும் புகைகளும் காற்றில் உள்ள மாசுகள் ஆகும்.

(ஒரு பாடக் குறிப்பு)

காற்றில் உள்ள மாசு பற்றி இதோ :

காற்று வெளியிடை கலந்திருக்கும் மாசு நாம் நினைத்திருப்பதுபோல் நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை, பல நாடுகளில் மருத்துவ நிபுணர்கள் செய்துள்ள ஆய்வின்படி காற்று மாசுபாடு புற்று நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய அடைப்பு, கண் பார்வை பாதிப்பு ஆகிய பல நோய்களுக்குக் காரணமாயிருக்கிறதெனக் கூறுகிறார்கள்.

காற்றுச் சூழல் சீர்கேட்டில் 60 சதவிகிதம் மோட்டார் வாகனப் புகையினால் ஏற்படுகிறது என்று சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்றுவெளி தூய்மையின்மையால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் குறித்து நாட்டில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்கள், சுகாதார வல்லுனர்கள் காற்று மண்டல தூய்மையை ஒழுங்குபடுத்தும் ஆய்வாளர்கள் டில்லியில் ஆகஸ்ட் 31 ந்தேதி டில்லியில் சந்தித்தார்கள். ‘காற்றுச்சூழல் மாசுபாடும் உடல் நலமும் ‘என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள். இந்தக் கருத்துப் பரிமாற்றம் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினால் ஏற்பாடு ழ்ய்யப்பட்டது. இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவும், மற்றும் இந்திய மருத்துவக் கழகமும் இந்த உரையாடலில் இணைந்து பங்கு பெற்றார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றத்தில் கலந்துகொண்ட சில மருத்துவ நிபுணர்களின் கருத்துகளிலிருந்து சில பகுதிகள் :

டாக்டர்.வினோத் ரைனா – முதல்வர் – புற்றுநோய் மருத்துவம் , டாக்டர் அம்பேத்கர் மருத்துவ நிலையம், ரோடரி புற்றுநோய் மருத்துவமனை, டில்லி

"டில்லி அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் பதிவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் 13000 புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதில் 10 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோயால் வாடுபவர்கள். இதில் 90 சதவிகிதம் புகைபிடிப்பவர்கள். ஆனால் அண்மையில் பதிவு செய்து கொண்ட 600 நோயாளிகளைப் பரிசீலித்ததில் 30 சதவிகிதம் புகைபிடிக்கும் வழக்கம் இல்லாதவர்கள். இவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் காற்று மாசுபாடுதான். ஆனால் நம்மிடம் எத்தனை பேர் புகை பிடிக்கும் காராணங்களினால் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் எத்தனை பேர் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கணக்கிட ஒரு தெளிவான அளவுகோல் இல்லை. நுரையீரல் புற்று நோயின் விகிதம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. சில ஆய்வுகள் காற்று மாசுபாட்டினாலேயே மார்பக, கழுத்து, கணைய புற்று நோய்கள் அதிகரிக்கக் காரணம் என்று தெரிவிக்கின்றன. பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது . நாம் ஒரு பனிப்பாறையின் நுனியில் அமர்ந்திருக்கிறோம். புகைபிடித்தலாலும், காற்று மாசுபாட்டினாலும் இந்தியாவின் பல நகரங்களில் இன்னும் 15/20 வருடங்களில் புற்று நோய் பல மடங்கு அதிகரிக்கும்."

சஞ்சீவ் பாகை, தலைமை நிர்வாக இயக்குனர் நெஃப்ரான் மருத்துவ, சுகாதார மையம், டில்லி

"குறைப்பிரசவங்களும் பிறவிக் குறைபாடுகளும் அதிகமாகி வருகின்றன. ஒவ்வாமை, சளி கண், செவி சார்ந்த நோய்கள், தொண்டை அழற்சி நியூமேனியா ஆகிய பாதிப்புகளும் மிக அதிமாகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 15 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் சுவாச மூச்சு இழுப்பினால் பாதிக்கப்படாதவர்கள் இப்போது பெரியவர்கள் ஆனதும் அதனால் அவதியுறுகிறார்கள்.

இதற்கெல்லாம் முக்கிய காரனம் நமது சுற்றுப்புற சூழ்நிலைகள் மாசடைந்திருப்பதுதான்.

ஐந்து வயதுக்குள் குழந்தைகள் இறப்பதற்கு காற்று மாசுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர, இது அவர்களின் உடல் ரீதியான வளர்ச்சிகளையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது.

டில்லியில் குளிர் மாதங்களில் காரணமற்ற தலைவலிகளாலும், சோர்வினாலும் பலநோயாளிகள் வருகிறார்கள். இதற்கு குளிர்காலம் காரணமல்ல. பனிமூட்டமே காரணம். இது அவர்களின் குழந்தைகளை பிறக்கும் முன்பே பாதிக்கிறது."

எஸ். கே சாப்ரா, பேராசிரியர், இதய சுவாச உடல் நலக்கூறு. வல்லபாய் படேல் நெஞ்சு மையம்

"டில்லியில் ஆஸ்த்மா நோயாளிகள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களுக்கு ஒவ்வாமை(allergy) அதிகமாகி வருகிறது. இதற்கு அதிகபட்சமான ஓசோனே காரணம். ஒசோன் பிராந்தியங்களில் வளரும் குழந்தைகளுக்கு நுரையீரல் சிறிதாக இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் இளைஞர்கள் முதியவர்களைவிட ஒசோன் அடர்த்தியினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்."

கே.கே அகர்வால் இதய பாதுக்காப்பு அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர்

"மாசு இல்லாத சூழ்நிலை இல்லாததால் வெளியில் நடை பயிற்சி செய்ய முடிவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதனால் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு புதிய காற்றின் பயன் கிடைக்காமல் போகிறது. இது அவர்களின் இதய நலத்தை பாதிக்கிறது. விட்டமின் டி போதுமானதாகக் கிடைக்காததால் அது மறைமுகமாக மாரடைப்பு வரக் காரணமாகிவிடக் கூடும். டில்லியில் 80 சதவிகித மக்களுக்கு சரியான விகிதத்தில் வைட்டமின் டி கிடைப்பதில்லை. இதன் குறைவால் அவர்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு இதய அடைப்பும் இரத்தக் கொதிப்பும் வரும் வாய்ப்புகள் அதிகமாகின்றன."

நெரிசல் நிறைந்த தெருக்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அமெரிக்காவின் ஒரு தன்னார்வத்தொண்டு அமைப்பு டில்லியில் நடத்திய ஒரு ஆய்வின்படி, சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அருகாமையில் வசிப்பவர்கள் வாகனப் புகைக்கு ஆளாகிறார்கள். இதன் உண்மையான தாக்கத்தைத் தெரிந்து கொள்ள இந்த ஆய்வாளர்கள் சென்ற ஆண்டில் 40 நாட்களுக்கு தெற்கு டில்லியில் ஒரு வளமையான பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்தார்கள். உச்சமான போக்குவரத்து நிறைந்த அந்த பகுதிகளில் 180 மணி நேரம் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த பின்பு அந்த வாகனத்தின் உள்ளே தீமை விளைவிக்கக் கூடிய மாசு படிந்த துகள்கள் மிக அதிக அளவில் படிந்திருப்பதைப் பார்த்தார்கள்.

இந்த முடிவைக் கருத்தில் கொண்டு காற்று மாசுபாடு சீரமைப்பாளர்கள் வாகனங்கள் வெளியேற்றும் புகையைக் கட்டுப்படுத்தவும், பொது வாகனங்களின் தரத்தை உயர்த்தவும், கூடியவரை சைக்கிளில் செல்வது நடந்து செல்வது – இவற்றை ஊக்குவிக்கவும் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் சாதிக்கத் திட்டமிட வேண்டும்.

12வது ஐந்தாண்டுத் திட்டம் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து காற்றுவெளியின் தரத்தை மக்களின் சுகாதார வாழ்விற்கு ஏற்றவாறு நிர்வகிப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இது ஒரு அவசிய அவசரத் தேவை.

(நன்றி : பாடம் மாத இதழ்)

About The Author