மூடர் கூடம் – இசை விமர்சனம்

மூடர் கூடம்! இயக்கம் நவீன், இசை நடராஜன் சங்கரன். இருவருக்குமே முதல் படமான இதைத் தயாரித்திருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ் என்பதுதான் அனைவரையும் இந்தப் படத்தின் பக்கம் பார்வையைத் திருப்ப வைத்திருக்கிறது. ஆல்பத்தில் மொத்தம் 14 டிராக்குகள்! எப்படி இருக்கின்றன என இங்கே பார்ப்போம்!

நீயும் பொம்மை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஜே.ஜேசுதாஸ்! தன்னுடைய முதல் பாடலின் மறு உருவாக்கத்துக்கு அவரே பாடியிருப்பது இதுவரை தமிழ்த் திரையுலகில் நாம் காணாத புதுமை! வயதானாலும் குரலின் வசீகரம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. இவ்வுலக வாழ்க்கையின் நிதர்சன உண்மைகள்தான் பாடுபொருள்.

பாடலிலிருந்து ஒரு துளி:
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை!
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை!

கண்ணோடு கண்கள்

காதல் வந்த கதை சொல்லும் இந்தப் பாடலைத் தன்னுடைய தனித்துவமான சாயலில் பாடியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ். இசை தொடங்கும்போதே, இந்தப் பாட்டு நம்மைக் கட்டிப்போடப் போகிறது என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. அப்புறம் என்ன, காதல் கதையில் லயிக்கலாம்!

பாடலிலிருந்து ஒரு துளி:
நீயின்றி என் நாட்கள் எண்கள் ஆகும்!
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்!
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்!

அச்சமில்லை அச்சமில்லை

இங்கே முண்டாசுக் கவிஞனின் வரிகள் எஸ்.பி.பி.சரணின் குரலில். பாரதி, பாரதிதான்! அதிர ஒலிக்கும் டிரம்ஸின் இசை பாடலைத் தாங்கிப் பிடிக்கிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!

ஒரு ஊருல…

மீண்டும் எஸ்.பி.பி.சரண். ஒரு சிறுவனின் அவலநிலையை விளக்கும் பாடலாக ஒலிக்கிறது; கடவுளரைப் பழிக்கிறது! அதன் பின், மீண்டு வர நம்பிக்கையும் ஊட்டுகிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:
சாமிகிட்ட ஏந்திக் கைய
வரங் கேட்டுப் பலனில்ல!

இது நல்ல நாய்

ஒரு மேல்தட்டுக் குடும்பம் ஒரு நாயை வாங்குவதுதான் பாடல். அருமையான கற்பனை! உரையாடலில் தொடங்கி, பாடலும் கலந்து ஒருவிதப் புது வடிவில் ஒலிக்கிறது! நிச்சயம், குறிப்பிடும்படியான முயற்சி!

நிலா நிலா ஓடி வா!

நாம் சிறு வயதில் பலமுறை கேட்டும், பாடியும் மகிழ்ந்த அதே நிலாப்பாட்டு இங்கே வருடும் இசையுடன் புது வடிவில்! சுபிக்ஷாவின் குரலுக்குப் பாடல் நெடுகிலும் பக்கபலமாக ஒலிக்கிறது வயலின்.

வேலவெட்டி ஏதும் இல்ல

வேலையும் பணமும் இல்லாத நிலையில், படித்த இளைஞன் ஒருவன் இந்த நாட்டைப் பற்றி விரக்தியுடன் பாடும் பாடல். அவனுக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை. எல்லாமே சொதப்பல் என்கிறான். பாடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது நரேஷின் குரல்! பல உண்மைகளைச் சத்தமாகப் போட்டு உடைக்கும் பாடல்.

பாடலிலிருந்து ஒரு துளி:
தேசம் முழுதும் ஊழலாச்சு!
அறிவு திறமை வெறுமையாச்சு!
அன்பும் பண்பும் பழமையாச்சு!
சொதப்பல்…
காலேஜும் சொதப்பல்…
நேர்காணல் சொதப்பல்…
எல்லாமே சொதப்பல்!

இவை போக ஐந்து தீம் இசை டிராக்குகளும் உள்ளன. அனைத்திலும் ஏதோ ஒன்று கேட்போரைத் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது! ‘ABCD உங்கப்பன் தாடி’ என்று ஒரு பாடலும் இருக்கிறது. அது கிட்டத்தட்ட ‘சென்ராயன்’ எனும் ஒரு கதாபாத்திரத்தின் சுய விவரிப்பாக ஒலிக்கிறது. அதிலும் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் (Genre) அமைந்துள்ளன. சில புதிய சோதனை முயற்சிகளும் தென்படுகின்றன.இயக்குநர் நவீன் மூன்று பாடல்களைப் பாடி இருக்கிறார். அதுவும், ‘மூடர் கூடம் தீம்’ டிராக்குக்கு இவரது குரல் வெகு பொருத்தம்! பேஸ் (Bass) குரலில் வசீகரிக்கவே செய்கிறார்!

இந்த ஆல்பத்துக்குத் தமிழ்த் திரையுலகில் தனி இடம் நிச்சயம்! நடராஜன் சங்கரன் இத்தனை நாள் எங்கே இருந்தாரோ! இனி, அவர் தமிழ்த் திரைத்துறையில் முக்கிய இடம் வகிப்பார் என்பது உறுதி! நாமும் எத்தனை நாட்களுக்குத்தான் பழையனவற்றையே கேட்டுக்கொண்டு இருப்பது? இதோ புதிது கேட்போம்! மகிழ்வோம்!

புதியவர்கள் இருவருக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்!

மூடர் கூடம் – மேதாவிகளின் கூடாரம்!

About The Author