மூன்று உருவங்களில் நரசிம்மர் (1)

ஹிரண்யகசிபுவையும் பிரஹ்லாதனையும் அறியாதவர் யார்? நரசிம்மாவதாரமே அவர்களுக்காக எடுக்கப்பட்டதுதானே!

"நீ சொல்லும் நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?" என்று கேட்ட ஹிரண்யகசிபுவுக்கு "ஆம்" என்று பிரஹலாதன் பதில் அளிக்க, கோபத்தில் அந்தத் தூணை ஹிரண்யன் பிளக்க, தூணிலிருந்து வந்து ஹிரண்யனை மடியில் போட்டு வதைக்கிறார் நரசிம்மர். ஆனால் இதற்கு முன்பே வராகநரசிம்மராகவும் தோன்றிப் பிரஹலாதனைக் காப்பாற்றியிருக்கிறார் நாராயணன்.

எங்கும் தன் உருவத்தையே வழிபட வேண்டும் என்று கட்டளை விதித்து, வேதப் பாடப்பள்ளிகளிலும் தன் பெயரை மட்டுமே ஓதச் சொன்ன ஹிரண்யகசிபு அராஜகத்தின் உச்சம் தொட்டான். இதை மீறுபவர்களுக்கு மரணதண்டனையும் விதித்தான். ஆனால் அவன் மைந்தன், சிறு பாலகன் பிரஹலாதன் எப்போதுமே அந்த நாராயணநாமத்தை மட்டுமே உச்சரித்து வந்தான். நயமாகச் சொல்லியும், பயமாகச் சொல்லியும் கேட்காமல் அந்த நாராயண நாமத்தை உச்சரித்ததால் வந்தது வினை!

அந்தச் சிறு பாலகனைத் தன் சொந்த மகன் என்றும் பாராமல் மலையிலிருந்து உருட்டிவிட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தான் ஹிரண்யன். பிரஹலாதனும் மலை உச்சியிலிருந்து வீசப்பட்டான் . அப்பொழுதும் "நாராயணா!… நாராயணா!" என்ற ஜபத்தை விடவில்லை! ஓடிவந்தார் விஷ்ணு தன் பக்தனைக் காப்பாற்ற. வராக நரசிம்மனாகிப் பிரஹலாதனை அப்படியே தாங்கினார்.

அந்த இடம் தான் ‘சிம்மாசலம்’. ஹிரண்ய வதம் ஆன பிறகு, இந்த இடத்தில் நாராயணன் தன் பக்தனைக்காத்த அடையாளமாகக் குன்றின் மேல் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளினார். நாளடைவில் இயற்கையின் மாற்றத்தில் அந்த அர்ச்சாமூர்த்தியைச் சுற்றிப்புற்று வளர்ந்து வெளியே தெரியாதபடி மூடிக்கொண்டது. காலங்கள் உருண்டன. யுகமும் மாறியது. திரேதாயுகத்தில் ஒரு நாள்!

அக்ஷய திருதியை எனும் நன்னாள். புரூரவன் என்ற மன்னன், விஷ்ணுபக்தன், விஷ்ணு நாமஸ்மரணையில் அன்று ஈடுபட்டிருந்தபோது தன்னையுமறியாமல் உறக்கத்தில் மூழ்கிப்போனான். பெருமாள் அவன் கனவில் வந்தார். அக்ஷய திருதியை நன்னாளில் அவர் வந்தது மிகவும் சிறப்பில்லையா!

வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோயில் கட்டுமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். மன்னனும் சுவாமி சொன்ன இடத்தில் தேடி அர்ச்சாமூர்த்தியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அந்தக் குன்றில் அவர் வீற்றிருக்கப் பெரிய கோயில் கட்டினான். குன்றில் கோயில் இருந்தால் அருகில் ஒரு நீர் ஓடை கண்டிப்பாக இருக்கும். இங்கும் ஒரு குகைக்குள் கங்காதாரா இடைவிடாமல் பொழிகிறாள்! அவள் வருவதற்கென்று ஒரு சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது!

குகையின் சுவரில் நரசிம்மரின் திருச்சிற்பம் அமைந்திருக்கிறது. இந்தக் கங்காதாரையில் நீராடினால் தோல் நோய்கள் நீங்கிவிடும் எனும் நம்பிக்கையால் இங்கு கூட்டம் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த ஊற்றுக்கு அருகில் விநாயகர், பிரம்மா, இரு நாகர்கள் அருள்பாலிக்கும் ஒரு சந்நிதியும் இருக்கிறது.

சிம்மாசலம் வராக நரசிம்ம சுவாமி கோயில் போகச் சுமார் எண்ணூறு அடி உயரம் மேலே செல்ல வேண்டும். இந்த ஆலயத்தில், நரசிம்மர் மூன்று உருங்கள் கொண்டு அருள் புரிகிறார்! இது போல் எங்குமே அமைந்ததில்லை. எப்போது போனாலும் பக்தர்கள் குழுமி இருப்பதைப் பார்க்கும்பொழுது இவரது சக்தியை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆலயத்துக்கு வலது பக்கம் ஒரு சிவன் கோயில். சுவாமி திருபுராந்தகர் எனும் பெயரில் அருள் புரிகிறார். சிம்மாசலம் போக வேண்டுமென்றால் விசாகப்பட்டினம் செல்ல வேண்டும். அங்கிருந்து கார், பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

(மீதி அடுத்த இதழில்)

About The Author