மூன்று கால் முயல்!

காடு. மரங்களும், செடி கொடிகளும், புல்வெளிகளும் கொண்ட காடு அது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் முயல்கள் மட்டுமே வசித்து வந்தன. அதனால் அக்காட்டுக்கு ‘முயல் காடு’ என்று பெயர்.

அந்த முயல் காட்டில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது. அப்பள்ளியில் முயல் குட்டிகள் கல்வி கற்றன. எல்.கே.ஜி. முதல் வகுப்பு என்று ஐந்து வகுப்புகள் பள்ளியில் இருக்கின்றன். ஐந்தாவது வகுப்புக்கு மேல் பாடம் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லாததால், முயல் குட்டிகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டன.

ஓர் அம்மா முயல் தன் மகன் முருகேஷ் என்னும் குட்டி முயலைப் பள்ளியில் சேர்க்கக் கூட்டிக் கொண்டு வந்தது. எல்.கே.ஜி. வகுப்பின் ஆசிரிய முயலும், படிக்கும் மற்ற முயல் குட்டிகளும் முருகேஷை வியப்யோடு பார்த்தன. ஏனென்றால் முருகேஷுக்கு மூன்று கால்கள்!

முகேஷின் முன்னங்கால் கொஞ்சம் தடிமனாகவும், பின்னால் இரு கால்களும் சாதரணமாக மற்ற முயல்களுக்கு உள்ளது போலவும் இருந்தன. இப்படி மூன்று கால்கள் கொண்ட முயல் குட்டியை ஆசிரியர் முயலும், மாணவ முயல் குட்டிகளும் பார்த்ததில்லை. அதனால், அவை முருகேஷை ஆச்சரியத்தோடு பார்த்து, தங்களுக்குள் பார்வையாலேயே தங்கள் வியப்பைப் பரிமாறிக் கொண்டன.

"இது எப்படி நேர்ந்தது?" ஆசிரியர் முயல் அம்மா முயலிடம் கேட்டது.

"அதான் தெரியலே" என்றது அம்மா முயல்.

"இதோட அப்பா முயலுக்கு மூணு காலா?" ஆசிரியர் முயல் கேட்டது.

"இல்லே, நாலு கால்தான்" என்றது அம்மா முயல்.

பள்ளியில் சேர்த்துவிட்டு அம்மா முயல் காட்டில் தன் பொந்துக்குத் திரும்பிவிட்டது. முருகேஷ் பெஞ்ச் மீது உட்கார்ந்து திருதிருவென்று விழித்துக் கொண்டு மற்ற முயல் குட்டிகளையும், ஆசிரியர் முயலையும் நோக்கியது.

"டேய் மூணு கால்!" என்று கூவியது மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு முயல் குட்டி.

"மூணு கால், மூணு கால்!" என்று மூழக்கமிட்டன மற்ற முயல் குட்டிகள்.

"அமைதி, அமைதி!" என்றது ஆசிரியர் முயல்.

இன்னொரு முயல் குட்டி பாடியது.

"படிக்க வந்த
முயல் குட்டிக்கு
மூணு காலாம்.
அது
பலப்பம் பிடித்து
எப்படி எழுதும்?
பார்க்க வேணுமே!"

"பார்க்க வேணுமே! பார்க்க வேணுமே!" என்று எல்லா முயல் குட்டிகளும் சேர்ந்து பாடின.

"ஆமா! முன்னங்கால் ஒண்ணுதானே இருக்கு! அந்தக் காலினாலே சிலேட்டைப் பிடிச்சுக்குவே. அப்புறம் எந்தக் காலினாலே எழுதுவே?" ஆசிரியர் முயல் முருகேஷைப் பார்த்துக் கேட்டது.

"எழுதறதா?" முருகேஷ முகத்தில் கல்வரத்துடன் கேட்டது.

"ஆமா, ஆனா, ஆவன்னா எல்லாம் எழுதக் கத்துக்கிடணுமில்லே?" ஆசிரியர் முயல் சொன்னது.

"ஆனா, ஆவன்னான்னா என்ன?"முருகேஷ் கேட்டது.

மற்ற முயல் குட்டிகள் சிரித்தன. முருகேஷ் கலவரத்தோடு கூடிய முகத்துடன் அவற்றைப் பார்த்தது.

"அ என்பது ஓர் அத்திப் பழம். ஆ என்பவன், ஆசைப்பட்டான்!" என்று பாடியது ஒரு முயல் குட்டி.

ஆசிரியர் முயல் கரும்பலகை அருகில் நின்று. பலகையில் அ, ஆ என்று இரண்டு எழுத்துக்களையும் எழுதிக் காண்பித்தது. “இப்படி உன்னால் எழுத முடியுமா?” என்று அது முருகேஷிடம் கேட்டது.

"மூணு கால்
முயலுக்கு
ஆனா எழுதத் தெரியாது.
ஆவன்னா எழுத
முடியாது!"

ஒரு முயல் குட்டி பாடியது.

"முடியாது, முடியாது" என சேர்ந்து பாடின மற்ற முயல் குட்டிகள்.

"அமைதி, அமைதி" என்று கூறிய ஆசிரியர் முயல் பாடம் நடத்தத தொடங்கியது.

முருகேஷூக்கு எதுவும் புரியவில்லை.

மாலை பொந்துக்குத் திரும்பிய முருகேஷ் தன் அம்மாவிடம், “அம்மா, நான் நாளையிலிருந்து பள்ளிக் கூடத்துக்குப் போக மாட்டேன்” என்று கூறி சிலேட், புஸ்தகப் பையைத் தொப்பென்று தரையில் போட்டது.

"ஏன் கண்ணு. ஆசிரியர் ஏதாவது சொன்னாரா?" என்று அம்மா முயல் கேட்டது.

"ஆமா, அம்மா! சிலேட்டைப் பிடிச்சுக்கிட்டு நான் எப்படி எழுதுவேன்னு ஆசிரியர் கேட்டாரு" என்றது முருகேஷ்.

"ஏன்? அது என்ன கஷ்டம்? இப்படி சிலேட்டை எடுத்துட்டு வா. சொல்லித் தரேன்" என்று கூறிய அம்மா முயல், முருகேஷ் எடுத்துக் கொடுத்த சிலேட்டை ஒரு முன்னங்காலால் பிடித்துக் கொண்டு, சிலேட்டுக் குச்சியை வாயால் கல்விச் சிலேட்டில் ‘அ’ என்று எழுதியது.

"அட! எப்படி அம்மா அது?" என்று வியப்புடன் கேட்ட முருகேஷ் அம்மாவிடமிருந்து சிலேட்டையும் குச்சியையும் பெற்றுக் கொண்டு தன் முன் காலால் சிலேட்டையை பற்றி, குச்சியை வாயில் கவ்வித் தானும் ‘அ’ என்று சிலேட்டில் எழுதியது.

அம்மா முயல் ‘ஆ’ போட்டுக் காட்டியது. முருகேஷ் எழுதியது.

"உம். அப்படித்தான். எதையும் கத்துக் கிடணும்னு ஆசை இருந்தால் போதும். எப்படிச் செய்யறது என்கிற வழி தானாக வரும்" என்றது அம்மா முயல்.

முருகேஷூக்கு ஒரே குஷி, இனா, ஈயன்னா என்று அது பாட்டுக்கு வாயில் சிலேட்டுக் குச்சியைக் கல்விப் பிரித்து எழுதத் தெரிந்துவிட்ட மகிழ்ச்சியில் அது முன்னங்காலைத் தரையில் ஊன்றி வட்டம் அடித்தது.

"அட, இந்த வித்தை கூடத் தெரியுமா?" என்று ஆச்சரியத்துடன் முருகேஷிடம் கேட்டது அம்மா முயல்.

"ஓ. அப்படிக் கிறு, கிறுன்னு சுத்துவேனே!" என்று சொல்லி, ஊன்றிய முன்னங்கால் இடம் பெயராது இருக்க, காற்று வேகத்தில் வட்டங்கள் அடித்துக் காட்டியது முருகேஷ்.

அடுத்த நாள் முருகேஷ் பள்ளிக்கு வந்தபோது, எல்லா முயல் குட்டிகளும் கூடி நின்று பாடின.

"படிக்க வந்த
முயல் குட்டிக்கு
மூணு காலாம்! – அது
பலப்பம் பிடித்து
எப்படி எழுதும்?
பார்க்க வேணுமே!"

பாட்டைக் காதுகள் கொடுத்துக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளாமல் முருகேஷ் தன் இடத்தில் போய் உட்கார்ந்தது.

ஆசிரியர் முயல் வந்தது. "அமைதி, அமைதி" என்று கூறிவிட்டு அது முயல் குட்டிகளிடம் சிலேட்டில் எழுதச் சொன்னது.

எல்லா முயல் குட்டிகளும் எழுதத் தொடங்கின. முருகேஷூம் எழுதியது.

ஆசிரியர் முயல் எழுதியவற்றைப் பார்வை இட்டது. முயல் குட்டிகள் ‘அ, ஆ, இ, ஈ…’ எழுத்துக்களை சிலேட்டுகளில் எழுதி இருந்தன. முருகேஷிடம் வந்து நின்ற ஆசிரிய முயலின் காதுகள் ஆச்சர்யத்தால் மிக உயரே நீண்டது. முருகேஷின் சிலேட்டில், ‘படம், பட்டம், பாப்பா’ என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.

"முருகேஷ், எழுந்திரு." என்றது ஆசிரியர் முயல்.

முருகேஷ் நின்றது.

"நீதான் எழுதினாயா?"

"ஆமாங்க ஐயா!"

"இல்லே, வீட்டிலே அம்மா எழுதிக் கொடுத்தாங்களா?"

"நான்தான் எழுதினேன். ஐயா!"

"எங்கே இப்ப எழுது. ‘படபட" என்றது ஆசிரியர் முயல்.

சிலேட்டை முன்னங்காலால் பிடித்துக் கொண்டது முருகேஷ் வாயில் பலப்பத்தைக் கவ்வி எழுதியது. ஆசிரியர் முயல் வியப்புடன் பார்த்தது. மாணவ முயல் குட்டிகள் தங்கள் இருப்பிடங்களில் உட்கார்ந்து கொண்டு, தலையை வளைத்து காதுகளை உயர்த்தி, நோக்கின.

"சபாஷ்" என்றது ஆசிரியர் முயல். "பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவிட்டான் பாருங்கள்! அதனால், உடல் ஊனமுற்றவர்களை நாம் பழிக்கக் கூடாது. அவர்கள் தங்களது அலுவல்களை எப்படிச் செய்கிறார்கள், ஊனமற்ற நாம் சோம்பேறித்தனமாக நமது உடல் உறுப்புக்களை எந்த அளவுக்குப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்".

அதிலிருந்து இதர மாணவ முயல் குட்டிகள் முருகேஷிடம் பிரியமாக இருந்தன. அவற்றிற்கு முருகேஷ் முன்னங்காலைத் தலையில் ஊன்றி மிக வேகமாக வட்டமடித்து வேடிக்கை காண்பித்தது. மற்ற முயல் குட்டிகளால் அப்படிச் செய்ய முடியவில்லை!

About The Author