மோகம்

ஊர் பெரிதாக மாறிவிடவில்லை. நிறைய அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. வளைந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப்பாதை, கோரை மண்டி கோடாய்க் குறுகிப்போன பேய் வாய்க்கால். சிதிலமடைந்த அய்யனார் கோயில், முற்றாக விழுந்துவிட்ட பிடாரி மண்டபம். ஏறக்குறைய அதே கதியில் சிவன் கோயில், நித்திய பூஜை தவறாமல் நடப்பதற்கு அறிகுறியாக உள்ளே போக வரத் தோதாக ஒரு நடைபாதை. நகரத்தின் கூறுகளிலிருந்து தப்ப முடியாது எதுவும் என்பது போல் தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின் விளக்குகள், நிறைய வீடுகளில் சப்தமிடும் டி.வி.பெட்டிகள். திண்ணைகளை இடித்துவிட்டு போர்டிகோ வைத்து மாற்றிக் கட்டப்பட்ட ஏழெட்டு வீடுகள்.

தவழ்ந்து விளையாடிய தெருக்களில், கிட்டிப்புள் விளையாடிய தெருக்களில், மார்கழி பஜனையில் குளிரக் குளிர் ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்…” திருப்பாவையை இஷ்டத்திற்குக் கத்திப்பாடிய தெருக்களில், இவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சடாட்சரத்துக்கும்தான்.

பாவம் தாளம். அப்போதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். கோணல் தேங்காய் மூடிக்கும் ஆறிப்போன நைவேத்யச் சோற்றுக்கும் இரண்டு அழுகல் வாழைப் பழத்திற்கும் அஞ்சும் பத்துமாய் சில்லறைக் காசுகளுக்கும் பறந்து கொண்டிருப்பதே வாழ்க்கையாயிற்று. எவ்வளவு சிரத்தையாய் பூஜை செய்தும் தாளவனேஸ்வரர் அவரைக் கைதூக்கிவிடவில்லை. உடனிருக்கும் வண்டார் குழலியம்மையும் கண் திறந்து பார்க்கவில்லை. ‘அவர் வெறும் கல் மாமா, கருங்கல். நீங்கதான் வேளை தவறாம அபிஷேகம் பண்ணி ஆராதனை பண்ணி அலங்காரம் அர்ச்சனை பண்ணி பசியாற நைவேத்யம் காட்டி என்ன பிரயோஜனம்’ என்று கேட்டால் முகம் சுண்டிப்போய்விடும்.

‘ஸ்வாமிக்குத் தெரியும். எப்போ கொடுக்கணும்? எப்படிக் கொடுக்கணும் எவ்வளவு கொடுக்கணும்னு தெரியும். பூஜைக்குன்னே அர்ப்பணிச்ச சமூகமாப் போச்சு. அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா அதுக்குமுன்னே தலைமுறை தலைமுறையா தூக்கியடிச்ச கோயில் மணி, ஏந்தின கற்பூரத்தட்டு முழங்கின வேதமந்திரம் ஆகம மந்திரங்கள் எல்லாம் இன்னிக்குவரை நிக்கலே.’
மனதின் வலி மாதிரி தெரியவில்லை. வார்த்தைகளில் பவ்யமும் பெருமையும்தான் கலந்திருந்தன.

அவரது மனைவி மோகம் பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. எப்போதாவது ஒரு தடவை இரண்டு தடவை வாசற்புறம் வந்து, கிழக்கே ஒரு தடவை மேற்கே ஒரு தடவை தெருவைப் பார்த்துவிட்டு உள்ளே புகுந்து கொள்வாள். சாயம்போன நூல் புடவை இரண்டைத் துவைத்து மாற்றி மாற்றிக் கட்டிக் கொள்வதில் திருப்தி. உச்சிக்கால பூஜை முடிந்து தாளம் வந்த பிறகு ஆறிப்போன நைவேத்யச் சோற்றை புளிரசம் காய்ந்த நார்த்தங்காய்த் துண்டோடு சாப்பிட்டுவிட்டு ஜீவிப்பதில் திருப்திதான். நல்ல வாளிப்பு. வண்டார்குழலியம்மையின் சாயல் கம்பீரம். இத்தனை வறுமையில் அழகு அதிசயம்தான்.

‘….பரம ஹம்ச ஸாம்ராஜ்யோ தாரீரீ…’கூடத்துச் சுவரில் சாய்ந்து தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பதன் சுகத்தை அவளே அறிவாள். முகத்தில் சற்றே கிறக்கம். அந்நிய மனுஷனின் பிரவேசம், வாசனை ஏதும் சலனித்திடாமல் இதுவே என் உயிர்ப்பு என்பதுபோல் அடாணாவில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போதுமானதாயிருந்ததோ? அடாணா எப்போதும் சுண்டி இழுக்கும். அவளின் சங்கீதத்தவத்தைக் கலைக்க விரும்பாமல் காலடியோசையிலும் கவனம் கொண்டு மெல்ல வந்து உட்கார்ந்தபோது சற்றே கண்களைத் திறந்தாள்.

“எப்ப வந்தாப்லே…” ஆகாயத்தில் பறந்து பரவசப்பட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று தரைக்கு இறங்கி வந்தாற் போலானாள்.

“இந்த மாயக்குரலை இத்தனை நாளும் எங்கே ஒளிச்சு வச்சிருந்தே…” பூடகம் கூடாது. திரைகூடாது. வெளிச்சம் விரும்பத்தக்கது என்றறிந்து கொள். மறைப்பினை நீக்கிவிடு.
‘ஓ, சூரியதேவனே, ஏனெனில் என்னுடைய
தர்மம் மெய்ப்பொருளைத் தேடுவதே
மோகம் – என் மெய்ப்பொருளான
மோகம். உள்ளுக்குள் உழலும்
ரகசியத்தை வெளிச்சொல்வதில்
வெட்கமென்ன. மீண்டும் சொல்வேன்
மறைப்பினை நீக்கிவிடு ஓ சூரியதேவனே.
எனது தர்மம் சத்தியத்தைத் தேடுதலே.
எனது வருகை அதைத் தேடியே
என்றறிந்து கொள்.’

தாளம் என்ற தாளவனேஸசக் குருக்களின் உலகம் வேறு. நடுக்கூடத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தால் மணிக்கணக்குதான். உலகச் க்ஷேமத்திற்காக தினம் பிரார்த்திக்கிறாராம். இந்த பெரிய உத்யோகத்தை யார் கொடுத்தது என்று கேட்டால் அதில் இருக்கும் கிண்டலைப் பொருட்படுத்தாது சட்டென்று பதில் வரும். – “ஈஸ்வரன்… தாளவனேஸ்வரன். வண்டார் குழலி உடனாய தாளவனேஸ்வரன்!”

‘யாரை நான் விரும்புகிறேனோ அவனை அனைவரினும் உயர்ந்தவனாக தேஜஸ் அடைவானாக. சிறந்த மகா புருஷானாவனாக. பேரழகனாக ரட்சிக்க வருவானாக. அழகு ரசனைக்குரியது. வணங்கத்தக்கது. ஆட்சிப் புரியத்தக்கது.’

ஆகாசத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு மோகம், நட்சத்திரங்களுக்கும் வெண் மேகங்களுக்கும் புரியுமோ சங்கீதம். சட்டென்று ஒரு நீளமான மின்னல் மைல் கணக்கில் இருக்கும். தெற்கே அரைவட்டமாய் கண்களைக் கூசச் செய்யுமாறு பளிச்சிட்டு மறைந்தது.

“மோகம், சடாட்சரம் வந்திருக்கான். பார்த்தியோ. சங்கீதத்தைப் பிடிச்சால் உனக்கு லோகம் தெரியாது. சங்கீதம்லாம் சதிர்காரா சமாச்சாரம். குடும்பஸ்த்ரீகளுக்கு ஆகுமோ. பகவானை தியானம் பண்ணு. தேவிசுக்தம் சொல்லு. துர்கா சுக்தம் சொல்லு. மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் சொல்லு. சடாட்சரம் உன்னோட கல்யாணம் என்னாச்சு? மாதிரிமங்கலம் பொண் ஜாதகம் சரியில்லேன்னாளே… நீ சாப்பிட்டுப்போ… மோகம் சடாட்சரத்துக்கு இலை போடு. நான் சித்த கோயில் வரை போயிட்டு வந்திடறேன். அர்ச்சனைக்கு யாரோ வராளாம்…”

வீடு முழுதும் தரை பெயர்ந்து கிடந்தது. கூடத்து ஓடுகள் ஒருபக்கம் சரிந்து கிடந்தன. முற்றத்தில் பாசி வழுக்கல். மோகம் வெறித்துப் பார்க்கத் தோதாய் முற்றத்து வழியாகப் பரந்து தெரியும் ஆகாசம்.
என் வருகையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுபோல் லேசான தலையாட்டல்…

“ராஜம் போன பிறகு என்ன செய்வேன்னு புலம்பின என் புலம்பல் அம்பாள் காதில் விழுந்துதான் மோகத்தை அனுப்பிக் கொடுத்தாள். அறுபத்து மூணு வயசிலே பெண்டாட்டியான்னு ஊரே கேலி பண்ணித்து. எதையும் லட்சியம் பண்ணாமல் மோகம் வந்தாள். அவளுக்குன்னு இருந்த ஒரே உறவு அப்பா சாம்பமூர்த்திக் குருக்கள் திடீர்னு போய்ச் சேர்ந்த பிறகு என்ன பண்ணுவ.”

பத்து நாள் தாடியைத் தடவிக் கொண்டு தாளம் சொன்னதைக் கேட்டு லேசான சிரிப்பு. கேலியா, அங்கீகாரமா… புரிபடாது. மோகத்தின் நெற்றி சுருங்குவதன் அடையாளமும் அர்த்தமும் என்ன? ஆமோதிக்கிறாளா ஆட்சேபிக்கிறாளா?
மனசால் ஆன உடம்பினைத் தவிர இன்னொரு உடம்பை அறிவாய். அது உணர்ச்சியால் ஆனது. பொங்கும் அசாத்ய வேகம் அதன் வெளிப்பாடாய் உள்ளது. இதையறியாதவன் நரகத்துள் செல்வான்.
நரகத்தை அடையப் போவது யார்? தாளமா மோகமா சடாட்சரமா!

வெந்து தணியும் மோகத்தின் உடம்பு நிஜம். இம்சைகள் நிஜம். பார்வைகள் நிஜம். அவளின் கேள்விகள் நிஜம். அக்னியை அழிக்கும் வல்லமை அதற்குண்டு? அது போற்றுதலுக்குரியது. சங்கீதம் மூலம் தாபத்தை விழுங்கும் முயற்சி ஜெயிக்காது மோகம்.

‘சடாட்சரம்… உன் வருகையை நானறிவேன். என் இசையின் ரகுவம்ச சுதாவின் கதன குதூகலம் மட்டும் உன் வருகையின் அவசரமில்லை…’ ஜன்னல் வழியாக விர்ர்ரென்று ஒரு திடீர்க் காற்று உள்ளே புகுந்து சுழன்றது. பூஜையறை விளக்கின் சுடர் கரைந்து திரியின் புகை கமறல் வாசனை… மெல்லிய இருள்.

‘சடாட்சரம்…சடாட்சரம்…. உன் உடம்பின் கனம். உடம்பின் சிறகு வருடல் ஒரே நேரத்தில் இரண்டும் எப்படி சாத்தியம்? ராட்சசா கடங்காரா… இதென்ன மூர்க்கம். நானறியாதது. நான் விரும்பியது. இந்த உக்கிரமான வெப்பம் உன்னுடையதா என்னுடையதா இரண்டும் கலந்த விசித்திரக் கலவையா. இந்த வாசனை மேன்மையானதா அசுத்தமானதா!’

எட்டிப் பார்த்த ஒரு குருவி சட்டென்று பறந்து போய்விட்டது.

‘மூலைக் கொன்றாய் புடவை, ரவிக்கை, மேலாடைகள் தாறுமாறாய் கிழிபட்டு சுருட்டி எறிந்த ஆவேசம். என் நீண்ட கூந்தலை அவிழ்த்து முகர்ந்து ஆக்ரோஷமாய் என்ன தேடுகிறாய். என்ன செய்கிறாய். வலியா சுகமா… மண் தரையில் அங்குமிங்குமாய்ப் புரட்டி உன்னிலும் பலமிக்கவன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தைத் தந்ததென்ன… சடாட்சரம். நமக்குள் என்ன போட்டி…. இந்தப் போட்டியில் தோற்பதொன்றுமில்லை. ஜெயிப்பது இரண்டு பேருமேதான்.
யாரது… யா…ர…து… அங்கே நிற்பது… யார்… இதமான சீரான இந்த லயத்தைக் கலைப்பதார்? யாரானாலும் அப்பால் விலகிச் செல்க. எங்களுக்கு மரணம் இல்லை. அமரத்துவம் இல்லை. இரவு பகல்களின் அடையாளங்களில்லை. லயம் கலைத்தல் தகாது. இந்தப் புயல் ஓயாது. எப்போது ஓயுமென்று தெரியாது. யுகம் முழுதும் யுகம் தாண்டியும் ஓயாது. அதுவரை யாரானாலும் எட்டி நில்… தூரப்போய் நில்….’
திறந்த கதவு மறுபடியும் சாத்தி காற்றில் படபடவென மோதிக் கொண்டது. யாரின் நிழல்?

எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலிகள் ஒருவித முரட்டு சப்தத்தோடு கிறீச்சிட்டுக் கொண்டிருந்தன. அதன் நிற்காத ஆட்டம் அர்த்தம் செறிந்ததாயிருந்தது.

“மன்னிச்சிடு மோகம்.”

தெருவில் சகஜமாக நடக்க முடியவில்லை. மனசும் உடம்பும் தள்ளாடியது. கால்கள் கெஞ்சின. கரணை கரணையாகப் புடைத்திருந்த புஜங்கள் கரைந்து போயிருந்தன. கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் குழி விழுந்து, தாடியும் மீசையுமாய் உருமாறிப் போனவனை யாருக்கு அடையாளம் தெரியும்.

இருபத்தி அஞ்சு வருஷம் கோட்டை அடுப்பில் கொழுந்துவிட்டெரியும் நெருப்போடு வெந்து அண்டா அண்டாவாய் சாம்பார் ரசம். மலைமலையாய் சாதக்குவியல் நாள் முழுக்க பெருங்காய வாசனை எந்தப் பெரிய விசேஷமானாலும் ‘கூப்பிடு சமையல் சடாட்சரத்தை’ என்னும் பெருமை. ஆனா கொஞ்சம் கொஞ்சமா உடம்பு போச்சு… புரிபடா வியாதிகள் பாடாய்ப்படுத்த – மோகத்தின் நினைப்பு மட்டும் நிரந்தரமாய் –
தாளம் சபித்தாரா? எல்லாம் போன பின்னும் தீராத அவஸ்தை ஏன்?

“கடங்காரா… கடங்காரா… போயிடாதே போயிடாதே” முகம், கை கால் மார்பு எனத் தழுவி முகர்ந்து முத்தித்து மேலே புரண்டு, வியர்வை ஆறாய் வழிய துடைத்துக் கொள்ளவும் மனசின்றி என்ன தாபம். இவ்வளவு காமம் பெற்றவர் அபூர்வம்.

“மோகம்… மோகம்.” கதவைத் திறந்து அவசரமாய் மூடி, விடுவிடுவென நிழலாய் நடந்துபோன தாளம் குறித்த நினைப்பு இம்சைதான்.

வீடு அடையாளம் தெரிந்தது. முன்புறம் சரிந்து கிடந்தது. பொந்திலிருந்து ஒரு குருவி லேசாக மூக்கை நீட்டி எட்டிப் பார்த்தது. அன்று பார்த்த அதே குருவியோ? மனசு கனத்தது. திண்ணையில் படிந்திருந்த அடர்ந்த புழுதியைக்கூட கவனிக்காமல் அப்படியே உட்கார்ந்தபோது ஜன்னலுக்கு அப்பால் இடிபாடுகளோடு கிடந்த பின்பக்கம் தெரிந்தது. அந்தக் கூடத்து மூலை தெரிந்தது. ஏழெட்டு காய்ந்த மல்லிகைப்பூக்கள் கிடப்பதைப்போல் பிரமை. மனசின் அழுகை.
‘ம்ம்…’ என்ற முனகல். யாரது? சற்றே கலவரத்தோடு திரும்ப ஏகப்பட்ட கிழிசல்களோடு அழுக்கு வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு இடுங்கிய கண்களோடு தாடி மீசை பரட்டைத் தலையோடு… யாரது? அட யாரது? தாளம்… தாளவனேசக் குருக்கள்!

“ஆரு… ஆரு?”

“லே…லே… சடாட்சரமா… ஏன்டா ஓடினே. ஏன்டா ஓடினே…? என்னத்துக்காக ராவோடு ராவா ஓடினே… நீ இருந்திருந்தா மோகம் இருந்திருப்பா… எவ்வளவு சந்தோஷமா வளைய வந்தா… ஏன் ஓடினே. மறுநாளே மோகம் செத்துப்போயிட்டா… அதோ அந்த உத்திரத்திலே… பாவி… பாவி மோகத்தைக் கொன்னவன் நீதான்…”

ஒரு கொத்து வவ்வால்கள் வீட்டிற்குள்ளிருந்து அவசரமாய் வெளியே பறந்தன.

About The Author

2 Comments

  1. vf

    து நாள் தாடியைத் தடவிக் கொண்டு தாளம் சொன்னதைக் கேட்டு லேசான சிரிப்பு. கேலியா, அங்கீகாரமா… புரிபடாது. மோகத்தின் நெற்றி சுருங்குவதன் அடையாளமும் அர்த்தமும் என்ன? ஆமோதிக்கிறாளா ஆட்சேபிக்கிறாளா?
    மனசால் ஆன உடம்பினைத் தவிர இன்னொரு உடம்பை அறிவாய். அது உணர்ச்சியால் ஆனது. பொங்கும் அசாத்ய வேகம் அதன் வெளிப்பாடாய் உள்ளது. இதையறியாதவன் நரகத்துள் செல்வான்.
    நரகத்தை அடையப் போவது யார்? தா

Comments are closed.