மோதி விளையாடு – இசை விமர்சனம்

"க்ருஷ்ணா நீ பேகனே பாரு" என்று ஆரம்பித்துவிட்டு, "Come back as Jesus, Come back and save the world, bless all the future of every boy and girl. Come back us Rama … Come back as Allah" என்று தொடரும் பாடல் ஒன்று நினைவிருக்கின்றதா? உயிரின் மதிப்பு தெரியாமல் மத வெறியில் சிலர் அலைந்து கொண்டிருந்த சமயத்தில், பாடகர் ஹரிஹரனும், லெஸ் என்ற லெஸ்லீ ல்யூவிசும் இணைந்து இசையமைத்த "கலோனியல் கஸின்ஸ்" என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் அது. கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து, முதன்முறையாக ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்கள். எத்தனை பெரிய செய்தி! படத்தின் பெயர் "மோதி விளையாடு". இயக்குனர் சரணின் இயக்கத்தில், வினய் மற்றும் காஜல் அகர்வால் நடிக்க, இத்திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பாடல்களை ஏப்ரல் மாதத்தின் கடைசியில் வெளியிட்டார்கள். கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார். வாருங்கள்.. கேட்டு விடுவோம்!

மோதி விளையாடு

ஏதோ சோகப் பாட்டுப் போல ஆரம்பித்து, கடைசியில் டப்பாங்குத்தில் சென்று நிற்கிறது. "மோதி விளையாடு நீ" என்று கோரஸ் ஏதோ கிணற்றிலிருந்து ஆரம்பிக்க, ஹரிஹரன் பாட ஆரம்பிக்கிறார். இது என்ன இன்னொரு குரல்? இசையமைப்பாளர் தேவா! ஆஹா!! ஹரிஹரனோடு இணைந்து பாடியிருக்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவும் தத்துவங்களை வாரி வழங்குகின்றார் வைரமுத்து. ஜாலியான பாடல்! மற்ற இசையமைப்பாளர்களை எத்தனை இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களைப் பாட வைத்திருக்கிறார்கள்! பட்டியல் போட வேண்டும். ஐம்பது வருட தமிழ் சினிமாவில் ஐம்பது பாடல்கள் தேறுமா?!

லட்சம் வார்த்தைகள்

இனிமையான கிடாரிங், நல்ல மெலடி. குரலை கொஞ்சம் கூட உயர்த்தாமல், பாடகி ரஞ்சனி பாடியிருக்கிறார். பாடலோடு பின்னணியில் இழையும் பீட்ஸ். எதைப் பற்றிய பாடல்? "லட்சம் வார்த்தைகள், முற்றும் தீர்ந்தன இங்கே" என்றால் காதல் பற்றியதுதானே! ஒரே ஒரு சரணம் கொண்ட பாடல்தான். சின்ன பாடலாக இருந்தாலும் கேட்கும்படி இருக்கிறது.

ஒற்றை வார்த்தையில்

"லட்சம் வார்த்தைகள்" பாடல், ஆண் குரலில் சற்றே மாறுபட்ட வரிகளில். பாடகர் வடக்கில் பிரபலமான ஷாண். தமிழ் என்னவோ ததிங்கிணதோம்தான்! இருந்தாலும் ஒழுங்காய்ப் பாட முயற்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. பரவாயில்லை. காதலியின் மேல் உள்ள ஏக்கத்திலேயே முழுப் பாடலையும் எழுதியிருக்கிறார் வைரமுத்து. இதுவும் ஒரே சரணம் கொண்ட சின்ன பாடல்தான்.

வெள்ளைக்காரி

ஹரிஹரனின் அழகிய குரலில், கொஞ்சும் தமிழில் ஆரம்பிக்கின்றது. ஆங்கில ராப், கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி வார்த்தைகள் என்று என்னவெல்லாமோ நடுவில் வருகின்றன. லெஸ், அச்சு, கல்யாணி, சுபிக்ஷா, ரம்யா, ரீட்டா என்று ஒரு கும்பலே இந்தப் பாடலை பாடியிருக்கிறது. பெண்களைப் பற்றி வைரமுத்து எழுதியிருக்கிறார். தாளம் பாட வைக்கும் பீட்ஸ், அழகான ட்ரம்பெட் பிரயோகம். குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறொன்றும் இல்லை!

சிக்கி முக்கி

இன்னும் ஒரு காதல் பாடல். இளசுகளை குதிக்க வைக்கும் பாடலாக இருக்கட்டும் என்று நினைத்தார்களோ! லெஸ் தமிழில் பாட முயற்சி செய்திருக்கின்றார். பெண் குரல் சுர்முகி. எத்தனையோ விதமான இசை முறைகளைக் கலந்த கலவை இந்தப் பாடல். ஒரு சராசரி தமிழ் சினிமா பாடல் போலவே ஆரம்பிக்கிறது. திடீரென்று கிறிஸ்துவ தேவாலய முறையில் வரிகள் கேட்கின்றன. ஆங்காங்கே ஹரிஹரனின் கர்னாடக-ஹிந்துஸ்தானி ஆலாபனைகள் வேறு! இத்தனை இருந்தும், பாடல் ஏனோ மனதில் நிற்கவில்லை.

பாதி காதல்

பாம்பே ஜெயஸ்ரீயின் இனிமையான குரலோடு, சுனிதா சாரதியின் குரலையும் சேர்த்து ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள். பாடல் நடுவில் வரும் ஆலாபனைகள் மேலும் வியப்பை ஏற்படுத்துகின்றன. பாடல் முழுவதும் வரும் கிடாரிங், கார்ட்ஸ் ஆங்காங்கே வரும் சாக்ஸ் எல்லாமே அற்புதம்! இவற்றோடு அழகாய் ஒரு கிராமத்திய பாணி பெர்குஷனையும் சேர்த்திருப்பது, பாடலுக்கு அழகு சேர்க்கிறது. இன்னும் ஒரு சரணம் இல்லையே என்று ஏங்க வைக்கிறது ஜெயஸ்ரீயின் குரல்.

இந்திய சினிமா வரலாற்றில் இருவர் சேர்ந்து இசையமப்பது புதிதல்ல. விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர் – கணேஷ், லக்ஷ்மிகாந்த் – ப்யாரேலால் என்று பிரபலங்கள் நிறைந்த ஒரு பட்டியல் நீளுகின்றது. கலோனியல் கசின்ஸ் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About The Author