யார் பெரியவர்? கடவுளா? பக்தனா?

இந்து மதம் ஒரு அற்புதமான மதம். ஏனெனில் இங்கு கடவுளும் கூட சில விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். உண்மைக்கு இங்கு அளவுக்கு மீறிய மதிப்பு. கடவுளோ பழங்கால மன்னர்களோ ஒரு வாக்கு கொடுத்துவிட்டால் அதை மீறமுடியாது. பஸ்மசுரனுக்கு யார் தலை மீது கை வைத்தாலும் அவர்கள் எரிந்து போகும் வரத்தைக் கொடுத்துவிட்டு சிவனே ஓடிய கதையை நாம் அறிவோம். தசரதன் கைகேயிக்குக் கொடுத்த மூன்று வரங்களையும் (இந்தக் கால அரசியல் தலைவர்கள் போல!) காற்றில் பறக்க விட்டிருந்தால் ராமாயண காவியமே இருந்திருக்காது. ஆனாலும் சிலர் பெறும் வரங்களோ, விடுக்கும் கோரிக்கைகளோ தர்மத்துக்கு முரணாக இருந்தால் அதுவே அவர்களை அழித்துவிடும். வாய்மையே வெல்லும் என்னும் முண்டகோபநிஷத் (சத்யமேவ ஜயதே) வசனத்தை இந்திய அரசாங்க சின்னத்தில் படிக்கிறோம். அறம் வெல்லும், பாபம் தோற்கும், தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்பதையும் நாம் அறிவோம்.

பக்தர்கள் விஷயத்திலும் இப்படித்தான். யாராவது பக்தர்களுக்குத் தீங்கிழைத்தால் அவர்களை கடவுளே கூட மன்னிக்க முடியாது. பக்தர்களின் சக்தி கடவுளையும் மிஞ்சியது. இதை விளக்கத்தான் அவ்வையார் அருமையாகப் பாடியிருக்கிறார். பெரியது எது என்று முருகப் பெருமான் கேட்ட கேள்விக்கு அவ்வை கொடுத்த பதில் தொண்டர்களின் பெருமையைக் கூறுகிறது:

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒரு சிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

எளிய தமிழ்ப் பாடல், பொழிப்புரையே தேவை இல்லை. புவனம்(பூமி), நான்முகன் (பிரம்மா), கரியமால் (விஷ்ணு), குறுமுனி(அகத்தியன்), அரவு (பாம்பு, ஆதி சேடன்), உமையவள்(பார்வதி), இறையவன் (இடப் பக்கத்தை உமைக்கு அளித்த சிவன்) – இவர்கள் எல்லோரையும் விடப் பெரியவர் தொண்டர் (பக்தன்) தான். ஏனெனில் பக்தன் உள்ளத்திலே எப்பொதும் தங்கி இருப்பவன் இறைவன் .ஆகவே தொண்டரின் பெருமையை சொல்லவும் கூட முடியாது, அவ்வளவு பெரிது என்பது பாடலின் பொருள்.

துர்வாசர் கதை

இதை விளக்க பல கதைகள் இந்து சமய நூல்களில் உள்ளன. மிக முக்கியமான கதை கோபக் கனல் தெரிக்கும் துர்வாசரின் கதையாகும். சூரிய குலத்தில் உதித்த மாமன்னன் அம்பரீசன் ஏகாதசி விரதம் இருந்த காலத்தில் அவனைப் பார்க்க துர்வாசர் வந்தார். துவாதசி வந்தவுடன் சாப்பிடலாம், நீங்களும் உணவு அருந்தவேண்டும் என்று மன்னன் அன்போடு வேண்டினான். துர்வாசருக்கும் மகிழ்ச்சி. ஆனால் குளிக்கப் போன துர்வாசர் திரும்பி வர தாமதமாயிற்று. நாள் முழுதும் பட்டினி கிடந்த மன்னன் துவாதசியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிட்டாக வேண்டும். சரி, துர்வாசர் வந்தால் அவரைத் தனியாக கவனிப்போம் என்று அம்பரீசன் வெறும் தண்ணீர் குடிக்கிறான். திரும்பிவந்த துர்வாசர் தான் ஒரு விருந்தாளிதான் என்பதையும் மறந்து, தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கூட கேட்காமல் கோபப்பட்டார், கொந்தளித்தார், மன்னனை சபித்தார். ஒரு ஆயுதத்தை அவன் மீது ஏவினார். யார் பொருட்டு அவர் விரதம் இருந்தாரோ அந்த இறைவன் பொறுப்பானா? அந்த ஆயுதம் அவரையே துரத்தும்படி இறைவன் பணிக்கிறான். துர்வாசர் ஓடினார், ஓடினார். மூவுலகங்களிலும் தஞ்சம் கேட்டார். கடவுள்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இறைவனோ தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கைவிரித்தனர். துர்வாசர் திரும்பி வந்து அம்பரீஷன் காலில் விழுந்தார். மன்னிப்பும் பெற்றார்.

காகாசுரன் கதை

இதேபோல சீதா தேவியைத் துன்புறுத்திய காகசுரனும் ராமன் ஏவிய அம்புக்குப் பயந்து எங்கெங்கோ ஒடினான். இனி பிழைக்க முடியாது என்று தெரிந்தவுடன் ராமன் காலிலேயே வந்து விழுகிறான். சரணடைந்தவர்களை மன்னிப்பது ராமனின் பெருங்குணங்களில் ஒன்று. காகாசுரனை மன்னித்த போதிலும் ராமன் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்காமல் நிற்காது. எல்லா காகங்களுக்கும் ஒரு கண் மட்டும் போகும்படி செய்தது.

கணிகண்ணன் கதை

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருமழிசை ஆழ்வார். இவருடைய சீடர் கணிகண்ணனைப் பல்லவ மன்னன் பழித்தான். உடனே ஆழ்வார், காஞ்சியில் கோவிலில் இருந்த பெருமாளையும் கணிகண்ணனையும் கூட்டிக்கொண்டு வெளியூருக்குப் போய் விட்டார். மன்னன் இதை அறிந்து மன்னிப்பு கேட்டவுடன் பெருமாள் அவர்களுடன் திரும்பிவந்தார். இதனால் அந்த கோவில் பெருமாளுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற பெயர். மன்னனைவிட தொண்டனே பெரியவன் என்று ஆண்டவன் காட்டியது மட்டும் அல்ல. ஆழ்வார் சொன்ன சொல்லுக்கு அவர் கட்டுப்பட்டேயாக வேண்டி இருந்தது.
பெருமாளைக் கூட்டிச் சென்றபோது அவர் பாடிய ‘கணிகண்ணன் போகின்றான்’ என்ற பாடலும், திரும்பிவந்தபோது அவர் பாடிய ‘கணிகண்ணன் போக்கொழிந்தான்’ என்ற பாடலும் மிகவும் பிரபலமானவை. மற்றொரு ஆழ்வாரின் பெயரே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்.

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின் நீயும் உன் பை நாகப் பாயைச் சுருட்டிக் கொள்

பாயைச் (பாம்புப் படுக்கையை) சுருட்டிக் கொண்டு போ என்று பக்தன் உத்தரவு இட்ட மாத்திரத்தில் ஓடிப் போனார் பெருமாள். வா என்றவுடன் வாய் பேசாமல் திரும்பிவந்தார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன் பைநாகப்பாய் படுத்துக் கொள்

திருமலை நாயக்கர்

மதுரை மீனாட்சி கோவிலை உலகோர் வியக்கக் கட்டிய திருமலை நாயக்கர் தனது குடும்பத்தினரின் உருவங்களை மீனாட்சி சன்னிதியில் தரையில் பதிக்க உத்தரவிட்டார். ஏன் தெரியுமா? பக்தர்களின் புனிதமான பாத துளிகள் தன் மீது பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. இது போல தென்காசி, ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களிலும் உண்டு.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகருக்காக மதுரையில் சிவ பெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்பல. அவைகளில் நமது தலைப்புக்குப் பொருத்தமான ஒரு விஷயம், தொண்டர் மீது கை வைத்தால் இறைவனே கோபப்படுவான் என்பதாகும். குதிரை வாங்கக் கொடுத்த காசில் கோவில் கட்டிய “குற்றத்திற்காக” பல தண்டனைகளைப் பெறுகிறார். அவர் செய்தது குற்றமல்ல, திருப்பணி என்பதை நிலைநாட்ட மதுரையில் வெள்ளம் வரவழைத்து அதில் சிவ பெருமான் தானே கூலியாளாக வந்து பாண்டிய மன்னனிடம் முதுகில் அடிபடும் போது, அங்குள்ள எல்லா மனிதர்களின் முதுகிலும் அடி விழவே மாணிக்கவாசகரின் மகத்துவம் புரிகிறது. பின்னர் மன்னர் அவரை விடுவிக்கவே அவர் தனது இறைப்பணியைத் தொடர்கிறார்.

பெரியபுராணம்

நாயன்மார்களின் அரிய பெரிய அற்புதக் கதைகளை விளக்க வந்த பெரிய புராணம் முழுதும் அடியார்களின் பெருமையைக் காணலாம். நால்வரில் ஒருவரான சுந்தர மூர்த்தி சுவாமிகளே தன்னை அடியார்க்கும் அடியேன் என்றே அழைத்துக் கொள்கிறார். அவர் பாடிய சுருக்கமான திருத்தொண்டர் தொகையை விரிவாகக் கூறவே பெரிய புராணம் பிறந்தது. ஒவ்வொரு கதையிலும் தொண்டரின் பெருமையை வெளிக் கொணரவே சிவபெருமான் பல சோதனைகளை முன் வைத்து அவைகளில் தேரும் தொண்டர்களை நமக்கு அறிமுகப் படுத்துகின்றார். ஆயிரம் ஆண்டுக்குப் பின்னரும் இவைகள் படிக்கப் படிக்க நம்மை புனிதப் படுத்துகிறது, ஊக்குவிக்கிறது என்றால் தொண்டர் தம் பெருமையை உணர்த்த வேறு ஒரு எடுத்துக்காட்டும் தேவையா?

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    தசரதன் கைகேயிக்கு மூன்று வரங்களா கொடுத்தான்? மூன்றாவது வரம் என்ன?
    யோசித்துப் பார்த்தேன் மன்டை குழம்புகிறது. எனக்குத் தெரிந்த எல்லோரிடமும் கேட்டு விட்டேன். ஒருவருக்கும் தெரியவில்லை. 2 வரங்கள் தானே? உண்மையைச் சொல்லுங்கள் அய்யா! உண்மை தெரிந்தால் தான் நிம்மதியாக உறங்கமுடியும்.

Comments are closed.