ரணம் சுகம் – இசை விமர்சனம்

முரணான தலைப்பு கொண்ட ஆல்பம். இது வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன! ஆனால், இத்தனை நாட்கள் கழித்து இதைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்பொழுது இந்த ஆல்பத்தோடு சேர்த்து இதே பெயரில் ஒரு நாவலையும் வெளியிட்டிருக்கிறார்கள். இயல்தமிழும் இசைத்தமிழும் கைகோத்த இந்தக் கூட்டணிக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் "புக்கிசை"!

தீம் மியூசிக்கோடு சேர்த்து மொத்தம் 10 இசைக்கோவைகள் கொண்ட ஆல்பத்தின் விமர்சனத்தை இப்பொழுது பார்க்கலாம்.

யார் இவள் பூ மகள்!

ஒற்றைப் பார்வையில் தன்னைப் பாதித்த பெண்ணைப் பற்றிய பாடல். பாதிப்பின் வர்ணனை அருமை! இடையில் வரும் தமிழ் ராப்பின் வரிகளும் வசீகரிக்கின்றன. அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் போல.

"பெண்ணே உன் கண்கள் கொஞ்சம் மூடு!
தொடர்ந்து மின்னல் பார்க்கும் சக்தி
ஆண்டவன் தரவில்லை எனக்கு" – முதல்முறை கேட்கும்பொழுதே கவர்ந்திழுக்கும் பாடல்.

காதல் சொல்லு

தான் நேசித்த பெண் தன்னை நேசிக்கிறாளா இல்லையா என்கிற நிலை புரியாது ஒருவன் திரிகிறான். அப்போது ஒரு பாடல். அதுவும், அவளுடன் அவன் இருக்கக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்… இவன் மனம் இவனுக்கு அடங்காமல் தான் நினைப்பதைச் சொல்கிறது. அத்துடன் அவள் மனக்குரலும் பின்னர் சேர்கிறது. அதுதான் இந்தப் பாடல்.

"இசை தெரியாதிருந்த என் ஸ்வரங்களும் இன்று நீ!
நிழல் இல்லா என் உலகில் அன்பான குடையும் நீ!
தோழனும் நீ! சண்டாளனும் நீ!
புன்னகை நீ! என் அழுகை நீ!" – காதல் பித்து.

தேடிச் சோறு

நண்பர்கள் நான்கு பேர் இசைப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளப் போகிறார்கள். அந்தப் போட்டிக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் நடுவர் என்றால் பாடல் எப்படி இருக்க வேண்டும்? அதை நிறைவு செய்திருக்கிறது பாடல். பாடியிருப்பவர்களும் அருமையாகத் தங்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். வரிக்குப் பாரதியைத் துணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

"வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?" – கனல் கவிஞனின் அனல் வரிகள்!

நிலவு தூங்கலாம்

மொட்டை மாடியில் உங்கள் நண்பருக்குப் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென மின்வெட்டு. அந்த நிலவொளியில் கிதாரின் வருடலுடன் ஒரு பாடல் ஒலித்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்தப் பாடலைக் கேளுங்கள்!

"சோகம் சொல்கிறேன், மறைத்த என் காதல் சொல்கிறேன்
உள்ளம் சோகமாகையில், உன் தோளில் சாய்ந்து கொள்கிறேன்" – வருடும் வரிகள்.

வெய்யில் மழை பொழியுதே.

உங்களுக்குப் பிடித்த பெண் உங்கள் வீட்டில்… உங்கள் அறையில்… வெளியில் லேசான மழை. தேவதையுடன் செலவிடக் கிடைக்கும் சந்தர்ப்பம் அல்லவா அது!… உங்கள் மனதில் உள்ளதை இன்னும் சொல்லவில்லை. ஆனால், சொல்ல வேண்டுமெனும் தவிப்பு. அப்படிப்பட்ட கவிதைத் தருணத்துக்கான பாடல்.

"கண்சிமிட்டி மெலிதாய்ச் சிரித்தாள்
பெண்மை கண்டு வியக்கிறேன்!
உன்னோடு வரவா என்றாள்
முதல் மழையில் நனைகிறேன்" – கவிதையான நேரத்துக்கு இனிமையான வரிகள்!

நீர் எழுத்தா நீ

தன்னைத் தவிர்த்துப் போன தன் தேவதையை நினைத்துப் பாடும் சோக கீதம். போதையுடன் பாடியது போல்தான் தெரிகிறது. பின்னணியில் வரும் நண்பர்களின் குரல்கள் அதை உறுதி செய்கின்றன. சோகத்தை ஆழமாகவும் எளிமையாகவும் சொல்லும் வரிகள். எடுத்துக்காட்டாக…

"நீர் எழுத்தா நீ? காகிதப் பூவா நீ?
தண்ணீரின் சுவையா நீ? நிறமில்லா வானவில்லா நீ?"

ரணம் சுகம்

ரணத்துக்கும் சுகத்துக்குமான வேறுபாடுகளைச் சொல்லி, தனது சுக துக்கங்களைப் பாடலாக்கி, அவள் இருந்தால் தனக்கு எதுவுமே பெரிய பிரச்சினை இல்லை என்கிற நாயகனின் நிலை சொல்லும் பாடல். முழுக்க அவளது நினைவுகள்… நினைவுகள்… நினைவுகள் மட்டுமே.

"நிசப்தத்தை ஒன்பது முறை உடைக்குது
கடிகாரங்கள் நடந்ததைக் காண
பின்னோக்கிப் போகிறது மணிமுட்கள்" – சுகமான ரணங்கள்.

மேனி கொதிக்குதடி

மீண்டும் பாரதியார். கோபம் காட்டுவதற்கு இல்லை, சோகம் சொல்ல. ஒருத்தி கண்முன் ஏமாற்றியிருக்கிறாள். அந்தத் துரோகத்தால் அவன் படும் துன்பம் பாடுகிறது பாடல்.

"வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி!
பார்த்தவிடத்தில் எல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி!" – சோகத்தின் ராகம்.

தீம்

கண்மூடிக் கேளுங்கள் (கண்மூடாமலும் கேட்கலாம்) நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். அதற்கு நான் உத்திரவாதம். 2.17 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த இசைக்கோவை கட்டிப்போடுகிறது செவிகளை.

நாவலும் பாடலும் உயிர்ப்புடன் இருக்கின்றன. நீங்களும் முதல் காதலில் தோற்றிருந்தால் நிச்சயம் சின்ன வலியையாவது இது உங்கள் நெஞ்சத்தில் ஏற்படுத்தும். வலியிலிருந்து மீண்டு வர வழியும் சொல்கிறது நாவல், இறுதியில்.

இதற்கு அடுத்த பாகமும் எழுதியிருக்கிறார்கள். அதன் இசை வெளியானதும் அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை ரணத்துடன் சுகமாக இருங்கள்.

பாடல்களைக் கேளுங்கள்! அத்துடன் கதையையும் படித்துப் பாருங்கள்!

ரணம் சுகம் – உயிரின் வலி

About The Author