ராஜராஜேஸ்வரம் – 1000 (6)

கதை கூறும் கல்வெட்டுக்கள்

ராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டியபோதே இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்துள்ளது. தன் ஆட்சியில் நடந்த ஒவ்வொரு செய்தியையும், நிகழ்ச்சியையும் நாட்குறிப்புக்கள் போலக் கல்வெட்டுக்களில் பதித்திருக்கிறார். கம்ப்யூட்டர் யுகமான இந்த நாளில் கூடத் தகவல்களைத் தேட நேரமாகலாம்; ஆனால், இந்தக் கல்வெட்டுக்கள் ஒவ்வொரு செய்தியையும் கண் முன்னால் நிறுத்துகின்றன.

முதன்முதலாக, கோவிலைக் கட்டிய கலைஞர் பெயரையும், கோவிலோடு தொடர்புடைய அனைவர் பெயரையும் கல்வெட்டில் பதிவு செய்து, நன்றி செலுத்திய மன்னன் ராஜராஜனாகத்தான் இருப்பார். வீரசோழன் குஞ்சரமல்லன் என்கிற பெருந்தச்சனே முதல் தலைமைக் கட்டடக் கலைஞன் என்பதும், அவன் துணையாளர்களாக மதுராந்தகன் நித்தவினோதன் மற்றும் இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகியோர் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம். அக்காள் குந்தவை, மகன் ராஜேந்திரன், அமைச்சர், ஈசான சிவபண்டிதர் என்கிற ராஜகுரு முதலான பலருக்கும் கல்வெட்டில் இடம் கிடைக்கிறது.

ராஜராஜனின் இயற்பெயர் அருண்மொழி என்பதையும் கல்வெட்டே நமக்கு உணர்த்துகிறது. ‘கோயில் எடுத்தேன்’ (கோயில் கட்டினேன்) என்று சொல்லாமல், ‘எடுப்பித்தேன்’ (கோயில் கட்ட வைக்கப்பட்டேன்) என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பணிவும் இவரிடம் இருந்திருக்கிறது.

முதலில் நம் கண்ணைக் கவர்வது மதிலில் அமைந்திருக்கும் 55 மீட்டர் நீளமுள்ள தளிச்சேரிக் கல்வெட்டு. பணியிலமர்த்தப்பட்ட நானூறு நாட்டிய மங்கைகள் அவர்தம் வீட்டு இலக்கம், அவர்களது பெயர்கள், எங்கிருந்து வந்தனர், ஒவ்வொருவரது பணியும் என்ன, யாராவது பணிக்கு வராவிட்டால் என்ன மாற்று ஏற்பாடு என்று பல விஷயங்களை வெகு நுணுக்கமாகச் சொல்லும் இந்தக் கல்வெட்டு ராஜராஜனின் நிர்வாகத் திறமைக்கு ஒரு சான்று. அவர்கள் பெயர்களைப் பதிந்த ஒரே மன்னன் ராஜராஜனாகத்தான் இருப்பார். ஒருவேளை தன் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு ஆடல்வல்லான் வழிபாட்டில் எந்தப் பிழையும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, முன் எச்சரிக்கையாக அவர் இந்த விவரங்களைப் பதிந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு கல்வெட்டும் நேர்த்தியாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. "ஆடவல்லான் என்னும் மரக்காலளவு" என ஒரு கல்வெட்டைக் காணும்போது அளவைக்குக் கூட அந்த ஈசனின் பெயரைப் பயன்படுத்தியிருக்கும் மன்னனின் பக்தி தெரிகிறது. மனதைத் தொடும் இன்னொரு கல்வெட்டு, கருவறையின் மட்டத்திற்குக் கீழே காணப்படுகிறது. இது மன்னரின் உயர்ந்த மனதிற்கும் சிந்தனைக்கும் ஒரு சான்று.

"நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்… இந்தக் கல்லிலே வெட்டியருளுக என்று திருவாய்மொழிஞ்சருளி…" என்று கூறும் அந்தக் கல்வெட்டு ஆடவல்லானுக்கு யார் என்ன கொடுத்தாலும் அல்லது பணிவிடை செய்தாலும் அது சிறியதாயிருந்தாலும் பெரிய அளவில் இருந்தாலும் கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டும் என்கிற ராஜராஜனது பெரிய மனதைக் காட்டுகிறது. கால காலங்களையெல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நிற்பதற்குக் காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் மிக உயர்ந்த இந்த எண்ணம்தான்.

இக்கோயிலில் பணியாற்றிய பல வகைப் பணியாளர்கள், அவர்கள் பெற்ற ஊதிய விவரங்கள் கல்வெட்டுகளில் விரிவாகக் கூறப்படுகின்றன. பண்டாரர்கள், சமையல் செய்பவர்கள், கணக்கெழுதுபவர்கள், திருமெய்க்காப்பு, திருப்பதியம் பாடுவோர், உடுக்கை வாசிப்பார், கொட்டி மத்தளம் வாசிப்பார் போன்ற பலர் பணியாற்றியுள்ளனர்.

பரிசாரகர் ஸ்ரீகோயிலுக்குரிய உள்ளூர்ப் பண்டாரத்தில் (கருவூலம்) ஊதியம் பெற்றுக் கொள்ள வேண்டும். கோயிலைப் பாதுகாக்கப் பலர் நியமிக்கப்பட்டனர். இவர்களைத் ‘திருமெய்க்காப்பு’ என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இன்று திருக்கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ‘மெய்க்காவல்’ என அழைக்கிறோம். தஞ்சைப் பெரிய கோயிலில் பணியாற்றிய மெய்க்காப்பாளர்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்பதையும், இவ்வாறு அனுப்பிய 23 சதுர்வேதி மங்கலங்களைப் பற்றியும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவர்களை அனுப்பிய ஊர்ச்சபையினரே அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கலம் நெல் அளிக்கவேண்டும் எனக் கல்வெட்டு குறிக்கிறது. அனைவரும் தஞ்சைப் பெரியகோயிலின் மீது ஈடுபாடு கொண்டு விளங்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பதை ஊகிக்க முடிகிறது. மெய்க்காப்பாளரை இக்கோயிலுக்கு அளித்த சதுர்வேதி மங்கலங்களில் சோழமகாதேவி சதுர்வேதி மங்கலமும் ஒன்று!

ரரஜராஜனுக்குப் பதின்மூன்று மனைவியர் இருந்தனர். இவர்களில் லோகமாதேவி, சோழமகாதேவி, அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன் மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி போன்ற அரசிகள் தஞ்சைப் பெரியகோயிலில் வழிபாட்டிற்காகச் செப்புத்திருமேனிகள், அவற்றுக்கு ஆபரணங்கள் போன்றவற்றைச் செய்து அளித்தனர் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

ரரஜராஜேஸ்வரனின் சகோதரி குந்தவை கோவிலுக்கு வழங்கிய கொடைகள் பற்றி ஒரு கல்வெட்டு,

"இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார் கொ[யி]லில் உடையார் ஸ்ரீராஜரா[ஜ¦] தேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதெவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எழுந்தருளுவித்த திருமேனிகள் தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியார்க்கும் தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியார்க்கும் பொன்மாளிகைதுஞ்சினதெவராக எழுந்தருளுவித்த திருமேனிக்கும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனிக்கும் உடையார் ஸ்ர்ராஜராஜதெவர் எழுந்தருளுவித்த திருமேனி தக்ஷிணமேருவிடங்கர்க்கும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் குடுத்த பொன் ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை எடுத்தும் ரத்நங்கள் சரடு" என்பதை வைத்து, குந்தவை தேவியார் தஞ்சைக் கோயிலுக்கு ஆடல்வல்லான், நம்பிராட்டியார், உமாபரமேசுவரியார் ஆகிய திருமேனிகளைச் செய்து அளித்தார்; அத்திருமேனிகளே இன்றும் வழிபாட்டில் இருந்து வருகின்றன எனக் கருதலாம். ராஜராஜரின் இருபத்தொன்பதாவது ஆட்சியாண்டு வரை குந்தவையார் அக்கோயிலுக்கு வழங்கிய கொடைகளை இக்கல்வெட்டு பட்டியலிடுகிறது.
பொன்னை எப்படி நிறை எடுத்தார்கள் என்ற செய்தியையும் இக்கல்வெட்டு கூறுகிறது. கொடுக்கப்பட்ட பொன்னை ‘ஆடவல்லான்’ என்ற பெயர் கொண்ட அளக்கும் கல்லால் நிறை எடுத்தார்கள். தங்க நகைகளை (ரத்னம்) சரடு – கயிறு, சட்டம், சப்பாணி – செப்பு ஆணி, அரக்கு, பிஞ்சு இவற்றை நீக்கிவிட்டு நகையிலிருக்கும் தங்கத்தை மட்டும் ‘தக்ஷிணமேருவிடங்கர்’ என்ற கல்லால் நிறை எடுத்தார்கள்.

கோவிலுக்கு தானமாகக் கொடுத்த பொருள் ‘பொலிசையூட்டுக்கு வைத்த காசு’ என்று குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து வரும் வட்டியினைச் செலவினங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்று அறிய முடிகிறது. இந்த நிதியினைப் பாதுகாப்பவர்கள் ‘ஊர்களிலார்’ என்றழைக்கப்பட்டார்கள். ஊர்களிலார் என்பவர்கள் ராஜராஜீஸ்வரத்தைச் சுற்றியிருக்கும் ஊர்களின் சபையினர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட காசு எவ்வளவு, அந்தக் காசிற்காக அந்தந்த ஊர்ச் சபையினர் ஓராண்டிற்குக் கொடுக்க வேண்டிய நெல் அளவு, அப்படி வரும் நெல்லை எந்தெந்தச் செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்களெல்லாம் கல்வெட்டுக்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சுந்தரசோழரின் திருமேனிக்கு ஒருநாள் இருபொழுது திருவமுது செய்வதற்குத் தேவையான நெல் அளவையும், என்னென்ன அமுது படைக்க வேண்டுமெனவும் இக்கல்வெட்டு பின்வருமாறு பட்டியலிடுகிறது.

"அமுது, அமுது செய்யப் பயன்படும் பொருள், பொருளுக்குத் தேவையான நெல்:

திருவமுது – அரிசி 4 நாழி, 1 குறுணி, 2 நாழி
நெய்யமுது – நெய் 1 ஆழாக்கு, 4 நாழி
கறியமுது – காய் – 6 உரி, 6 நாழி
பருப்பமுது – பருப்பு 1 உரி, 1 நாழி, 1 உரி
சர்க்கரை அமுது – சர்க்கரை 1/2 பலம், 1 நாழி, 1 உரி
பொரிக்கறி அமுது – நெய் 2 செவிடரை, 2 நாழி
வாழைப்பழ அமுது – பழம் 2 செவிடரை 1 நாழி
தயிரமுது – தயிர் 1 நாழி, 3 நாழி
அடைக்காயமுது – பாக்கு – 4, வெற்றிலை – 32, 1 நாழி
கடுகு, உப்பு, மிளகு – 1 உரி, 1 ஆழாக்கு
விறகு – 4 நாழி.”

இப்படி ஒரு நாளுக்குத் தேவையான நெல் பட்டியலிடப்பட்டு, ஓராண்டுக்குத் தேவையான நெல் 129 கலம், 2 தூணிப்பதக்கு, 1 நாழி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடன் 1 குறுணி, 7 நாழி நெல் சேர்க்கப்பட்டு 130 கலம் நெல் ஓராண்டுத் தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறாகக் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்துச் சபையார் கொடுக்கும் 130 கலம் நெல் சுந்தரசோழரின் செப்புத்திருமேனிக்குத் திருவமுது செய்யப் பயன்படுத்த வேண்டுமெனக் கல்வெட்டு கூறுகிறது. இது போலவே மற்ற ஊர் சபையினருக்குக் கொடுத்த காசு, அதற்கு ஈடாக அவ்வூர்ச் சபையினர் ஓராண்டிற்குக் கொடுக்க வேண்டிய நெல் அளவு, அந்த நெல்லை எதற்குப் பயன்படுத்த வேண்டுமெனவெல்லாம் இக்கல்வெட்டு தெளிவாகப் பட்டியலிடுகிறது.

இப்படி எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கூட யோசித்துச் செயல்படுத்திய ராஜராஜனது மேலாண்மை இன்று அரசிலுள்ளவர்களுக்கு ஒரு முன்மாதிரி!

பெரிய கோவிலின் எந்த மூலையில் திரும்பினாலும் கல்வெட்டுக்கள் கல்வெட்டுக்கள் கல்வெட்டுக்கள்! எத்தனை பக்கங்கள், எத்தனை புத்தகங்கள் அவை பற்றி எழுதினாலும் முற்றுப் பெறாது.

–வரும்…

தகவல்கள் உதவி: பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை, வரலாற்று ஆசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியார், நாகசாமி, சத்தியமூர்த்தி, கலைக்கோவன், குடவாயில் பாலசுப்ரமணியன் ஆகியோர், வரலாறு.காம், ரீச் பவுண்டேஷன்.

புகைப்படங்கள்: திரு.சந்திரசேகர்

About The Author