ராஜராஜேஸ்வரம் – ( 3)

தஞ்சைப் பெரிய கோவில் – சில செய்திகளும், ‘பொய்’திகளும்

தஞ்சன் என்ற அசுரனிடம் பட்ட கஷ்டங்களிலிருந்து மக்களைக் காப்பதற்காக ஈசன் அசுரனை அழித்த காரணத்தில் தஞ்சாவூர் எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

தன்னைத் தஞ்சம் என்று வந்தவர்களைக் காத்தருளும் ஊர் என்பதால் இந்தப் பெயர்வந்திருக்கலாம் என்றும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் தஞ்சாவூர் என்றதுமே நம் கண்ணுக்குத் தெரிவது தஞ்சைப் பெரிய கோவில்தான்.

தஞ்சை நகரில் எங்கிருந்து நோக்கினும் நெடிதுயர்ந்த இந்தக் கோவிலின் கோபுரத்தைக் காணலாம். பொறியியல் கட்டுமானத்தில் சாதனை படைத்த கோவில். ராஜராஜனைப் போலவே கம்பீரமாக காண்பவர் மனதைக் கவர்ந்திழுக்கிறது. யுனெஸ்கோ நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது.

‘முதல் முதலாக’ என்று சொல்ல ஆரம்பித்தால் எத்தனையோ ‘முதல்’கள் எத்தனையோ தனிச்சிறப்புகளைச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டு வரை ராஜராஜசோழன்தான் இந்தக் கோவிலை நிர்மாணித்தவன் என்ற உண்மை உலகுக்குத் தெரியாது. டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் இக்கோவிலைக் கட்டியது காடுவெட்டிச் சோழன் என்று எழுதுகிறார். ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹூல்ஷ் என்பவர்தான் கல்வெட்டுகளை ஆய்ந்து 1886ல் கோவிலின் சிருஷ்டிகர்த்தா ராஜராஜசோழன் என்று உலகிற்கு அறிவிக்கிறார்.

தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்ட ஒரே கோவில். கட்டப்பட்ட காலத்து
கோபுரங்களோடு இன்றும் திகழும் கோவிலும் இதுதான். முதல் வாயில் கேரளாந்தகன்
திருவாயில் – கேரள அரசனை ராஜராஜன் வென்று பெற்ற வெற்றியின் அடையாளம்.

இரண்டாவது வாயில் ராஜராஜன் வாயில். அவ்வாயிலின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் துவார பாலகர்களின் சிலைகள்தான் உலகின் மிகப் பெரிய துவாரபாலகர்களின் சிலைகளாகக் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் 18 அடி உயரம் கொண்டவை. கோபுரச் சுவர்களில் பல்வகைச் சிற்பங்களைக் காணலாம். இடது புறம் கண்ணப்ப சரிதத்தையும், வலது புறம் சேரமான் பெருமாளின் கைலாய உலாக் காட்சியையும் காணலாம். சுற்று மாளிகையில் நான்கு வாயில்களும், கோபுரவாயிலாய் ஐந்தாவது நுழைவிடமும் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயில் இதுதான்.

215 அடி உயரக் கல் விமானம் தமிழ்நாட்டின் முதற்சாதனை. இன்றளவும் யாரும்
தொடமுடியாமற்போன உயர் சாதனை. இந்தக் கோவில் கட்டுவதற்கு முழுவதும் கருங்கற்களே பயன்படுத்தப்பட்டன. அவற்றின் எடை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் டன் எனச் சொல்கிறார்கள். தஞ்சையைச் சுற்றி எங்கும் கல் இல்லாத நிலையில் இந்தக் கற்களை பல மைல் தொலைவிலிருந்து கொண்டு வந்திருக்க வேண்டும். திருச்சியிலிருந்து கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 216 அடி விமான உயரத்திற்கு கற்களை எப்படி ஏற்றியிருக்க முடியும் என்பது இன்றும் அனைவருக்கும் புரியாத புதிர்.

பக்கத்தில் ஆறு மைல் தொலைவிலிருந்த ஊரிலிருந்து சாரம் கட்டி யானைகள் மூலம்
கற்களைக் கொண்டு வந்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு சாரப்பள்ளம் என்று பெயர்
வந்தாகவும் சொல்லப்படுவது ஆய்வுக்குரியது.

இந்த பிரம்மாண்டமான கோவிலின் அஸ்திவாரம் 15 முதல் 18 அடிகள்தான் என்பதும் ஒரு அதிசயம்தான். 13 தளங்களைக் கொண்ட இந்தக் கோவிலின் விமானம் கூம்பு வடிவில் அமைந்துள்ளது. இறைவன் ஆகாசத்தில் நடனமாடுவதைப்போலக் குறிக்கும் வகையில்தான் கோவில் விமானத்தை அமைத்து தட்சிண மேரு என்றும் பெயரிட்டான் எனக் கூறலாம்.

பவுத்த விகாரங்களையும், மிகப் பெரிய அளவிலான புத்தர் சிலைகளையும் பார்த்த மன்னன் அலகிலா விளையாட்டுடைய அண்ணலுக்கும் அது போன்று தஞ்சைப் பெரிய கோவிலை நிர்மாணித்ததாக சொல்கிறார்கள்.

கர்ப்பக்கிரகச் சுவர்களின் இடைச் சுற்றில் முதல் தளத்தில் ஓவியங்களும், இரண்டாம் தளத்தில் கரணச் சிற்பங்களும் பெற்ற ஒரே கோயில்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சண்டிகேசுவரர் சிலை இங்குதான் இருக்கிறது.
சுற்றுச்சுவர் இரண்டு வாயில்கள், கருவறை விமானம் ஆகியவைதான் ராஜராஜன்
கட்டியவை. மற்ற கோவில் அமைப்பு நாயக்கர் காலத்தவை. பின்னர் வந்த மராட்டியர்
ஆட்சிக் காலங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்தன. தமிழ்நாட்டிலேயே வேறெந்தக் கோவிலிலும் இந்த அளவு சிற்பங்கள் கிடையாது. கருவறைக் கோபுர நிலையினுள்ளே ஆடவல்லான் ஆடிய 108 கர்ணங்களில் 81 செதுக்கப்பட்டிருக்கிறது. மற்றவற்றிற்கு இடம் விடப்பட்டுள்ளது.

50 மீட்டருக்கும் மேலான நீளத்திலமைந்த பல கல்வெட்டுகளைக் கொண்ட ஒரே கோயில். கட்டுமானப் பணியில் பங்களிப்புச் செய்தவர்கள் விவரங்களையெல்லாம் கல்வெட்டுகளில் பதித்து பெருமைப்படுத்தியிருக்கும் ஒரே கோயில்.

400க்கும் மேற்பட்ட ஆடற்பெண்களும் 216 தொழிலறிஞர்களும் பணியாற்றிய ஒரே
தமிழ்நாட்டுக் கோயில்.

தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக செப்புச் சிலைகள் இந்தக் கோவிலில்தான் இருந்தது.
பல நூறு பஞ்சலோகச் சிலைகளைக் கொண்ட இந்தக் கோவிலில் இப்போது காணக் கிடைப்பது மிகச் சிலவே.

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.