வணக்கம் சென்னை

‘வணக்கம் சென்னை’ என வரவேற்கும் தலைப்புடன் அறிமுக இயக்குநராகக் களமிறங்குகிறார் கிருத்திகா உதயநிதி, நம்ம அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, பிரியா ஆனந்த் உடன் இசைக்கு அனிருத்தையும் இணைத்துக்கொண்டு.

ஹே!

கிதாரும், சாக்ஸபோனும் இணைய ஆரம்பிக்கும்போதே பபோனின் ஹம்மிங் நம்மை உற்சாகமாக இழுத்துச் செல்கிறது. இடையிடையில் வரும் மரியாவின் குரலும் பாடலுக்குப் பொருத்தம்தான். ஆனால், குரலில் ஸ்ருதிஹாசனின் சாயல். பாடல் முழுவதும் உற்சாகம் ததும்புகிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:

இப்போது கடிகாரம் இல்லை, கடிவாளம் இல்லை,
அட, தடைபோட யாரும் இல்லை!

இனிமேலே
அடையாளம் இல்லை, தொடுவானம் என் எல்லை,
நான் அடங்காத காற்றின் பிள்ளை!

ஒசக்க ஒசக்க

தண்ணீரின் சலசலப்பு ஒலியுடன் அனிருத்தின் குரலும் இணைந்து பாடல் ஆரம்பிக்கிறது. தன் கிராமத்துக்கு வரும் நகரத்து நாயகியின் செயல்களால் காதலனுக்குள் ஏற்படும் பாதிப்புகள் பாடலாகியிருக்கின்றன. அழகாக வட்டார வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் மதன் கார்க்கி. அனிருத்துடன் இணைந்து பாடியிருப்பவர் பிரகதி. கிராமத்துப் பாடலும் அனிருத்தின் பாணியில் அழகாகவே தவழ்கிறது!

பாடலிலிருந்து ஒரு துளி:

கண்ணை தெறந்தாலும் கலையவில்ல!
கனவா நனவான்னு புரியவில்ல!

பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல!

ஓ பெண்ணே!

பேஸ் கிதாரின் ஆதிக்கத்துடன் தொடங்கும் பாடலை அனிருத், விஷால் தாட்லானி பாடியிருக்கிறார்கள். இலேசாக முந்தைய படத்தின் சாயல். அதையும் டெக்னோ இசை மறக்கடிக்கிறது! இடையில் ஆங்கில ராப் வேறு! காதலின் ஆதங்கம் சொல்லும் இந்தப் பாடலுக்குக் குரலில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் அனிருத். எழுதியிருக்கிறார் நா.முத்துகுமார்.

பாடலிலிருந்து ஒரு துளி:

இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே!
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே!

எங்கடி பொறந்த!

ஆஹா, கலாட்டாவான பாடல்! நிச்சயம் தாளம் போட வைக்கும்; அதற்கு நான் உத்தரவாதம்! நிச்சயம் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். காதலன் – காதலியின் ஊடல் சவடால்தான் பாடல். “தும் தும்” என்று பாடலைத் தொடங்கும்போதே, என்னவோ வித்தியாசமாக இருக்கப்போகிறது என்கிறார் அனிருத்! இவருக்கு ஈடு கொடுத்து ஆண்ட்ரியாவும் சளைக்காமல் பாடியிருக்கிறார். கலவையான வாத்தியங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சவடால் வரிகளை எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

பாடலிலிருந்து ஒரு துளி:

நீ ஒசாமான்னா நான் ஒபாமாடி
உன் டெத்து என் கைலடி!
…………
வாம்மா வா வாயக் கொஞ்சம் மூடு!
பிரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு!

வாடா வா கிராமத்து ஆடு!
பலியாகாம ஊர விட்டு ஓடு!

ஐலசா ஐலசா

மீண்டும் அனிருத் இம்முறை சுசித்ராவுடன். பிரியும் நேரத்தில், நிலை கொள்ளாமல் காதல் கொள்ளும் நெஞ்சத்துடன் காதலி பாடுகிறாள். கிதாரின் வருடும் இசை ஐலசா ஐலசா என்று கேட்போரைக் கட்டியிழுக்கிறது. இவ்வளவு மென்மையாகப் பாடியிருப்பது சுசித்ராவா என்று ஆச்சர்யமாக இருக்கிறது! இடையில் மெலிதாக வரும் நீரின் ஒலி யாருப்பா சௌண்டு இஞ்சினியர் என்று கேட்கத் தூண்டுகிறது!!

பாடலிலிருந்து ஒரு துளி:

இன்றா, நேற்றா கேட்காதே!
என்னால் சொல்ல முடியாதே!

நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே!

இவை போக, இன்னும் இரண்டு பாடல்கள். ஒன்று ‘ஓ பெண்ணே!’ பாடலின் ஆங்கில வடிவம். அதை அர்ஜூன், சார்லஸ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது; இருந்தும் ஆங்கிலம் எதற்கு அழகான தமிழ் இருக்கும்போது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்ததாக ‘சென்னை கேங்ஸ்’. ஹிந்திக்காரர்களுடன் சவால் விடுகிறார்கள் தமிழ்நாட்டின் பெருமை பாடி! துள்ளலான இசை, ஆனால், அங்கங்கே ‘Crazy Frog’-ஐ நினைவுபடுத்துகிறது.

கடைசி இரண்டைத் தவிர்த்துவிட்டால், மற்றவை அனிருத்தின் திறமை சொல்கின்றன. குரலில் முதிர்ச்சி தெரிகிறது! "3"ல் பாடியபோது ரகுவரன் குரல் போல் இருக்கிறது என்று கருத்து வந்தது. ‘ஒசக்க ஒசக்க’ பாடலைக் கேட்ட பிறகு யாரும் அப்படிக் கூற முடியாது. மொத்த ஆல்பத்தையும் கேட்டு முடித்த பின் ‘எங்கடி பொறந்த’ என்று முனக வைக்கிறார் அனிருத்.

வணக்கம் சென்னை – காதலும் காதல் நிமித்தமும்.

About The Author