வண்ணச் சிதறல் 2013 – சென்னையில் பள்ளிகளுக்கிடையிலான மாபெரும் வரைகலைப் போட்டி

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
பின்னயாவும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

எழுத்தறிவித்தலின் மேன்மையை நறுக்குத் தெறித்தாற்போல சொல்லும் மகாகவி பாரதியாரின் பாடல் இது.

இதனையே தமது தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்டெப்ஸ் பவுண்டேசன் (Steps Foundation). சமூக தளத்தில் விரிவாக இயங்கி வரும் மனிதநேயமும், சமூகத்தின்பால் கனிவும் கொண்ட ஒத்த கருத்துடைய பல நண்பர்கள் மற்றும் வல்லுநர்களின் சீரிய முயற்சியில் உருவாகியிருக்கிறது இந்த ஸ்டெப்ஸ்.

கல்வி பயில போதுமான வசதிகள் இல்லாத, வாய்ப்புகளோ கிடைக்கப்பெறாத லட்சோபலட்சம் ஏழை இந்தியக் குழந்தைகளின் வாழ்வினில் மறுமலர்ச்சியை உண்டாக்கும் உன்னத நோக்கத்தினை இறுதி இலட்சியமாகக் கொண்டு அதற்கான பாதைகளை வடிவமைக்கும் கடினமான பணியில் அயராமல் தன்னை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறது ஸ்டெப்ஸ் (படிக்கட்டுகள்). இந்தப் படிக்கட்டுகளை தம்மை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத ஏழைக் குழந்தைகளின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் உணர்வதை தங்கள் பொறுப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஸ்டெப்ஸின் நூற்றுக்கணக்கான தன்னார்வலத் தொண்டர்கள்.

குழந்தைகளின் கல்வித்திட்டமும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டியதன் அவசியமும் ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கான அடிப்படைத் தேவையாகிறது. அந்தக் கல்வியும் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாகவும், வாழ்க்கையின் பல்வேறு தேடல்களை ஈடுசெய்யும் வகையில் கற்கும் திறனும் விளங்க வேண்டும்.

விரும்பித் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாடப்பிரிவுகளாயினும் அவற்றை ஆழ்ந்து கற்க மாணவர்களின் கற்பனைத் திறன் எல்லையின்றி பரந்து விரிவதாய் இருத்தல் வேண்டும். அதற்கு ஓவியமும், கைவேலையும் நுணுக்கமாய் நிகழ்த்தும் திறன் வேண்டும். அத்தகைய திறன் பெற்றோரே சமூக தளத்தின் அனைத்துத் துறைகளிலும் பல பரிமாணங்கள் கொண்ட சிறந்த படைப்பாளர்களாக, வல்லுநர்களாக வலம் வர முடியும்.

இக்கருத்தினை மையமாகக் கொண்டு சென்னைப் பெருநகரத்திற்குட்பட்ட பள்ளிகளின் சிறார்களுக்கிடையே வரைகலைப் போட்டி ஒன்றை ஸ்டெப்ஸ் பவுண்டேசன் நடத்துகிறது.

‘வண்ணச் சிதறல் 2013’ எனும் தலைப்பிலான இம்மாபெரும் போட்டிக் கோலாகலம் சென்னை எக்மோர் அரசு நுண்கலைக் கல்லூரியில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று நடத்தப்படுகிறது. முதல் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கும், பங்கேற்க விரும்பும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான படிநிலை விவரங்களையும் பின்வரும் இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் பிரசுரத்தில் காணலாம்.

https://www.nilacharal.com/download/vanna_chidaral_2013.pdf

இதில் ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும், ஒவ்வொரு மாணவர் குழுப் பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. வென்றவர்களுக்கு மொத்தம் 24 பரிசுகள் வழங்கப் பெறுகின்றன.

முதல் பரிசு : கோப்பையுடன், ரூ. 5000 பணப்பரிசும், சான்றிதழ்களும்
இரண்டாம் பரிசு : கோப்பையுடன், ரூ. 3000 பணப்பரிசும், சான்றிதழ்களும்
மூன்றாம் பரிசு : கோப்பையுடன், ரூ. 1000 பணப்பரிசும், சான்றிதழ்களும்

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளியின் அனுமதியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

Steps Foundation
No. 6, Gandhi Nagar 1st Street,
Camp Road, Selaiyur
Chennai – 600 073.
Contact : 97899 75489, 87544 69130, 78716 80027
www.stepsfoundationindia.org

About The Author