வன்முறைக்கு விடியல் எப்போது?

பல நாட்களாக நம்மில் பலரை வாட்டிக்கொண்டு இருக்கும் கேள்வி, "ஏன் உலகில் இத்தனை வன்முறை?"

ஆங்காங்கே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மக்கள் உயிரைக் குடிக்கும் தீவிரவாதிகளைச் சுட்டிக்காட்டும் முன் நம்முடைய நடவடிக்கைகளை கவனிப்போமானால் நம் நாடி நரம்புகளில் வன்முறையும் ஏறிவிட்டது என்ற கசப்பான உண்மை தெரிய வரும்.

இப்பொழுது வரும் திரைப்படங்களைப் பாருங்கள். அரிவாள் இல்லாது படம் எடுப்பதை மறந்துவிட்டோம். ஹாலிவுட்டிலும் இதே கதி தான். "ஹாஸ்டல்", "ஸா" போன்ற திரைப்படங்களை அவர்கள்தான் தந்தார்கள். (இந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், கண்டிப்பாக இனிமேல் பார்க்க வேண்டாம்.). தினமும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதைத்தான் சின்னத்திரையிலும் காட்டுகிறார்கள்.

இதனால் அதிகம் பாதிகப்படுவது சிறுவர்கள்தான். அந்தச் சிறு வயதிலேயே அவர்களுள் வன்முறை புகுந்து விடுகிறது. இதெல்லாம் பற்றாது என்பது போல, அவர்கள் விளையாடும் எலக்ட்ரானிக் விளையாட்டுக்கள்! கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளை மறந்தாகிவிட்டது. வீட்டில் அமர்ந்து கொண்டே "வீடியோ கேம்ஸ்" ஆடும் காலம் இது. "எக்ஸ்பாக்ஸ்", "ப்ளேஸ்டேஷன்" என்று என்னவெல்லாமோ வந்த வண்ணமாக இருக்கின்றன. ஆனால் எல்லா விளையாட்டுகளிலும் நடப்பது ஒரே விஷயம்தான். துப்பாக்கியை வைத்துக் கொண்டு வருவோர் போவோரைச் சுட்டுக் கொண்டு இருக்க வேண்டும். "ஜி.டி.ஏ." என்ற ஒரு விளையாட்டில் ஒரு சின்ன ரௌடி பெரிய மாஃபியா தாதா ஆகும் கதை. அவன் செய்யும் வேலைகளையெல்லாம் திரையில் நாம் செய்ய வேண்டும். அந்த விளையாட்டைப் பற்றி என் அன்னையிடம் சொன்னதும், பாவம்.. அலறிவிட்டார்.

மீண்டும் பழைய கேள்விக்குத் திரும்புவோம். ஏன் இத்தனை வன்முறை? இந்த நல்ல கேள்விக்கு பதில் சொல்வது கடினம்.

கென் டொனால்ட்ஸன் என்பவர் சொல்கிறார், "என்னிடம் ஒரே பதில்தான் இருக்கிறது! தப்பித்துக் கொள்வதற்கு ஒரு கருவியாகவே நாம் வன்முறையைப் பயன்படுத்திக் கொள்கிறோம்!"

கோரமான காட்சிகளைப் பார்க்கும் பொழுது, நம் உடம்பினுள் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் வேலைகள் பல. மது அருந்தினால் ஏற்படும் போதையைப் போன்ற உணர்வு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சி சொல்கிறது. எதையும் உட்கொள்ளாமலேயே இந்த மாறுதல் நிகழ்வதால், நாம் அந்த மாறுதலையே உணர்வதில்லை. தன்னையே அறியாது கட்டுப்பாட்டை இழந்த சிலர் வேறொரு மனநிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் அபாயங்கள் பல.

ஒரு சில மாதங்களுக்கு முன்னால் படித்த செய்தி – பத்து வயதுச் சிறுவனிடமிருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு செய்தி – ஏழாம் வகுப்புச் சிறுவன் ஒருவன் உடன் படிக்கும் இன்னொருவனைக் கத்தியால் குத்திவிட்டான். இதெல்லாம் நடந்தது அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்ல, நம் இந்தியாவின் பள்ளிகளில்.

சற்றே யோசித்துப் பார்த்தால், இதுவும் ஒரு வகை போதையினால்தானே ஏற்படுகின்றது. இந்த போதையும் வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து நம்மை மாற்றுகின்றது.

கசப்பாக இருந்தாலும், கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், உண்மை இதுவே. நாம் அனைவரும் வன்முறையை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம். நம்மையே அறியாமல், இளம் பருவத்தினரும் குழந்தைகளும் நம்மை விட வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா? ஏன் முடியாது?

நம் குழந்தைகளிடம் வன்முறையைப் பற்றியும், வாழ்க்கைக்கு அது விளைவிக்கும் கேடுகளைப் பற்றியும் எடுத்துச் சொல்ல முடியும். இளம் பருவத்தினர் வாழ்க்கையைப் பற்றியும் அன்பு நெறியைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம். அவர்கள் மனதில் நாம் நடும் இந்தச் சின்னச் சின்ன விதைகள் பிற்காலத்தில் நற்குணங்களாக தானாக வளரும்.

வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியா போன்ற சில நாடுகள் மட்டுமே இந்த வன்முறைத் தாக்குதலுக்கு பலியாகிவிட்டன. ஸ்வீடன் போன்ற நாடுகளில் இப்படி இல்லை என்று கென் டொனால்ட்ஸன் சொல்கிறார். அவர்களின் சினிமாவிலும், சின்னத்திரைகளிலும் வன்முறை கிடையாது. சமூகத்திலும் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன என்றும் சொல்கிறார். இதிலிருந்து இரண்டிற்கும் இருக்கும் சம்பந்தம் தெள்ளெனத் தெரிகின்றது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

சுற்றத்தில் நடக்கும் அனைத்து பேரிழப்புகளுக்கும் நம் மனப்பான்மைதான் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால், சற்றே விழித்துக் கொண்டு நாம் இதன் மீது கொண்டிருக்கும் பார்வை கோணத்தை மாற்றிக் கொள்வது அவசியம் ஆகின்றது. அப்படிச் செய்தால், சில இழப்புகளைத் தவிர்க்க நேரிடலாம். என்னிடமும் உங்களிடமும்தான் இது ஆரம்பிக்கின்றது!

வன்முறையை சினிமாவிலும், சின்னைத்திரையிலும் பார்ப்பதைத் தவிர்ப்போம்! வன்முறை கொண்ட நிகழ்ச்சிகளைத் தயாரிப்போரைக் கண்டனம் செய்வோம்! வன்முறையை மையமாகக் கொண்ட விளையாட்டுகளை நம் குழந்தைகளுக்கு வாங்கித் தராமல் இருப்போம்! வன்முறை கொண்ட செய்திகளின் மீது மையம் கொள்ள வேண்டாம் எனப் பத்திரிகைகளுக்கும் வேண்டுதல் விடுப்போம்.

நாம் இதைச் செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்?

செயல் திறனையும் யோசிப்புத் திறனையும் கூர்மையாக்கி மகிழ்ச்சி கொடுக்கும் விளையாட்டுகளை நம் மக்களுக்குச் சொல்லித் தருவோம். நாமும் அதுபோன்ற காரியங்களிலேயே நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள தியானத்தில் ஈடுபடுதல் உதவும். மனமிருந்தால், வெற்றி நிச்சயம்!

About The Author