வலி… வழி… (1)

"அம்மா………" ஷ்யாமா குமுதினியை பின்னால் வந்து இறுக அணைத்துக் கொண்டாள்.

"என்னடா ராஜா? எக்ஸாமெல்லாம் நல்லா போச்சா? ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை." அமெரிக்க வாடை கலந்த ஆங்கிலத்தில் மகளிடம் பேசினாள் குமுதினி.

"இதுலயும் ஏ ப்ளஸ் வாங்கிடுவேன் அம்மா. நாளைக்கு இந்தியா போகணுமே… என்னோட ட்ரெஸ்; அங்க என்னோட பயலாஜிகல் பேரன்ட்ஸ்…..ட்ரிபிள் ஸிஸ்டேர்ஸ் இவாளுக்கு வாங்கின கி.:ப்ட் ஆர்டிகிள்ஸ் எல்லாம் பேக் பண்ணனும் இல்லையா."

குதூகலமும் உற்சாகமுமாக ஷ்யாமா தன் அறைக்குள் துள்ளி ஓடினாள்.

குமுதினியின் முகத்தில் சோகம் நிழலாடியது. பன்னிரண்டு வயது குழந்தையின் உற்சாகம் புரிந்தாலும் ஏதோ பறி போவது போன்ற துயரம் மனதை பிசைந்தது. இன்ப துன்பம் எல்லோருக்கும் பொதுவானது; ஆனால் தனக்கு துன்பம் சற்று தொடராக வருவது அதிகமோவென மனம் நொந்தது.

*****

நடுத்தரக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்து பெற்றோர்களின் அன்பை முழுமையாக பெற்றவள்தான் குமுதினி. தங்கை கமலினி, தம்பி நரேன் என இனிமையாக ஓடியபோது அவளது பத்தாவது வயதில் அம்மா வித்யாவுக்கு ரத்தப் புற்றுநோய் என மருத்துவர் குண்டைப் போட.. அப்பா ராகவன் தளர்ந்து போனார்.

குமுதினியின் குழந்தைப் பருவம் ஒரே எட்டில் மாறி, பொறுப்பும் பாரமும் அழுத்தி அவளை பெரிய பெண்ணாக்கி விட்டது. அத்தை ராதா ஆறு மாதங்கள் உடனிருந்தாள். "நீ தான் மூத்த பெண். பொறுப்பா தங்கை, தம்பி…..ஏன் அப்பவைக் கூட கவனிச்சுக்கணும். அப்பா பாவம் ஆபீஸுக்கு போகணும்; பேங்குல மேனேஜர்…. அங்கேயும் பொறுப்பு
அதிகம்.. சமையலுக்கு ஆள் போட்டாச்சு.. அம்மாவைப் பாத்துக்க நர்ஸ் வருவா…..வீட்டு வேலைக்கு முத்தம்மா இருக்கா…..சரியா?"

அத்தையின் பேச்சுக்கு மருட்சியுடன் தலை ஆட்டினாள் குமுதினி. அன்று துவங்கியஒரு வகை ஹிம்ஸை உணர்வு பல சந்தர்ப்பங்களில் அவளைத் தொடந்து அலைக் கழித்தது.

காலப்போக்கில் கல்லூரி.. உத்யோகமென சிறிது காலம் மனத்தெம்புடன் வளைய வந்ததென்னவோ உண்மை. அவளுடைய திருமணப் பேச்சை அத்தை ராதா துவங்கி வைத்தாள்.

"வெளியே அலைந்து கஷ்டப்படாதே அண்ணா. இதோ என் பிள்ளை ரகு இருக்கான்; இஞ்சினியர் கை நிறைய சம்பளம். அவனைக் கேட்டாச்சு.. சம்மதம்னு சொல்லிட்டான். குமுதினி நான் பார்த்து வளர்த்த பெண்… மாட்டேன்னு சொல்ல மாட்டா."

"ஐயோ! குமு….வேண்டாம்னு சொல்லிடு….. ஆபீஸுல விவேக்கை காதலிக்கிற விவரத்தைப் போட்டு உடை….." பின்னாலிருந்து உசுப்பினாள் கமலினி.

குமுதினி அத்தையிடம் தலை ஆட்டும் தந்தையைப் பார்த்து ஊமையாக நின்றாள். அப்பா ரொம்ப மென்மையானவர்; மனைவியை இழந்த பின் தங்கை சொல் மந்திரமென வாழ்ந்து பழகி விட்டார்.

"குமு…..இந்த அத்தையோட டார்ச்சர் என்னால தாங்க முடியாது….. நான் காதலிப்பது வேறு பாஷைக்காரன்; அனாவசிய வாதம் விவாதம்னு வீடு ரெண்டு படும். உனக்கு மட்டும் சொல்லி விடுகிறேன். உன் கல்யாணத்துக்கு மறுநாள் நான் விஷாலோட மும்பை போகிறேன்.. அங்க வச்சு ரெஜிஸ்டர் மேரேஜ்….."

கமலினி அதிரடி முடிவெடுக்க வயிறு கலங்க விழித்தபடி நின்றாள் குமுதினி. ரகுவுடன் திருமணம் ஆனது. அவன் விருப்பப்படி அமெரிக்க வாசம். கமலினி உறவு சில காலம் முறிந்த நிலையில் இருந்தது. ஆனால் தம்பி நரேனின் திருமணத்தில் எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பியது.

கமலினிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று அழகான பெண் குழந்தைகள். குமுதினிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் எதிர்பார்த்து ஏங்கியதுதான் மிச்சம். இதற்கும் அத்தை ஒரு தீர்வு சொன்னாள். "கமலி உனக்கு பகவான் புண்ணியத்துல மூணு
தங்க விக்ரஹம் மாதிரி பெண்கள். ஒரு குழந்தையை அக்காவிற்குத் தத்துக் கொடு."

கமலினி தயங்கவில்லை. "குமு….. ஷ்யாமா உன்னோட பெண்….."

குழந்தையை அள்ளிக் கொண்டாள் குமுதினி. அத்தையை நன்றியுடன் பார்த்தாள். ரகுவும் ஷ்யாமாவை மிகுந்த வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டான். செப்டம்பர் மாதம் 2001 கமலினி குடும்பத்துடன் ந்யூயார்க் நகருக்கு வந்த பொழுது குமுதினி சந்தோஷத்தில் மிதந்தாள்.

அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை.

ஒரு நாள் பொழுது விடிந்தது.

(மீதி அடுத்த இதழில்)

About The Author