வல்லினம் – இசை விமர்சனம்

ஈரம் கொடுத்த அறிவழகனின் இரண்டாவது படைப்பு ‘வல்லினம்’. தமிழில், எப்போதாவதுதான் விளையாட்டை மையமாக வைத்துப் படம் வரும். அவ்வகையில் கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது வல்லினம். தமன் இசையில் வல்லினம் எப்படி ஒலித்திருக்கிறது என்று பார்ப்போம்.

மாமன் மச்சான்

நட்பு போற்றும் பாடல். சிம்பு, முகேஷ், தமன் மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் வேண்டாம் என நண்பர்கள் பாடுவது போல் அமைந்துள்ள பாடல். "கூத்தாடி காத்தாடி" என்று சிம்பு பாட ஆரம்பிக்கும்போது ஈர்க்கிறது குரல். இடையில் வரும் கிதாரின் மீட்டல்களும், அதிரும் டிரம்ஸ் பீட்டுகளும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தாழ்ந்தால் உறவுகள் பிரியும்
உன்னைத் தாங்கிட என்றும் வருவது யாரடா?
கனவிலும், நினைவிலும் பேச்சிலும் மூச்சிலும்
நட்புதான் நம்பிக்கை குடுக்குதே! – நட்பின் வரிகள்.

நகுலா நகுலா

காதலியின் தவிப்புதான் பாடுபொருள். ஆண்ட்ரியா, நகுல் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதை எழுதியிருப்பவர் அறிமுகப் பெண் பாடலாசிரியர் பார்வதி. வரிகள் அனைத்தும் இயைபுடன் அழகாகக் காற்றில் தவழ்கின்றன.

இரவும் பகலா? துளியும் கடலா?
மணல் மணலா மணலா புனலா?
…………………
கண்களை விடவா கல்லென்ன வலுவா?
கேள்விக்குப் பதிலும் உறக்கத்தில் தரவா? – புதுமை வரிகள்!

உயிரில் உயிரில்

இந்தப் பாடலுக்கு இரண்டு வடிவங்கள். ஒன்று காதல் வந்ததையும், இன்னென்று காதல் முறிவையும் பாடுகிறது. மகிழ்ச்சியை ஹரிசரண் பாட, காதலின் வலியைப் பாடியிருக்கிறார் தமன். இதில் இசைச் சேர்ப்பு கவனம் பெறுகிறது. சின்னச் சின்ன சப்தங்களும் அழகாகக் கோக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சிக்கான பாடலில் ஒலிக்கும் மெல்லிய டிரம்ஸ் இசை பாடலுக்கு நல்ல பொருத்தம்.

உடையாமல் உடைந்தேனே உன்னாலே
ஒரு நொடியும் மறக்காது இனிமேலே
நம் பாதம் பட்ட பாதை இன்று
விலகுதே சரிதானா? – சோக வரிகள்

என் ஆதியும் அந்தமும் நீயெனத் தோன்றிடுதே
ஒரு மெளனமான கனவு, உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது ஏனோ? – வியப்பு வரிகள்.

வல்லினம்

படத்தின் தீம் பாடல் போல் ஒலிக்கிறது. வாலியின் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார்கள் ராகுல் நம்பியார், ஸ்ரீராம் ஆகியோர். மெலிதான இசையில் ஆரம்பித்து, பின் செல்லோவிற்குத் தடம் மாறித் தடதடக்கிறது . நம்பிக்கை விதைக்கும் பாடல். கேட்டுப் பாருங்கள், நிச்சயம் புது உத்வேகம் பிறக்கும்!

வாழ்க்கை என்றால் பந்தயம்தான்
வென்றுதானே பார்க்கணும் வா! – வாலி(ப) வரிகள்!

நிச்சய வெற்றியை ஆல்பத்திற்கு எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே மிரட்டிய கூட்டணி என்பதால், பாடல்கள் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கின்றன.

வல்லினம் – ஓங்கி ஒலிக்கும்.

About The Author