வழித்தடங்கள்

"தம்பி! மாஸ்டர் பையன்தானே நீங்க?" – சந்திரா டாக்கீஸில் கூட்டத்தைப் பார்த்து நின்று கொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டுத் திரும்பினான் கணேசன்.

ராஜு நின்று கொண்டிருந்தார். தோற்றத்தில் அதீதமான முதிர்ச்சி. ஆனாலும் அவர்தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது சட்டென்று.

அவர் கையை ஆதுரத்தோடு பிடித்துக் கொண்டான் இவன். "நல்லாயிருக்கீங்களா?" என்றான். உணர்ச்சி மேலீட்டில். நெஞ்சுக் கூட்டுக்குள் ஒரு படபடப்பு. அப்பாவின் ஆப்த நண்பருடனான காலங்கள் மின்னலாய்த் தோன்றி மறைந்தன. மனம் நெகிழ்ந்தது.

"ஏதோ இருக்கேன் தம்பி. எங்க வாழ்க்கையெல்லாம் என்ன பிரமாதமா மாறிடப் போவுது? அது கெடக்கட்டும். அப்பா எப்படியிருக்காரு? அதச் சொல்லுங்க…"

"இருக்காரு… ஏதோ அவரளவுக்கு"

"எண்பது தாண்டியிருப்பாரே… இந்த வயசுல எழுந்து நடமாடுறதும், அவர் வேலைகளை அவரே பார்த்துக்கிடுறதும் பெரிய விஷயமில்ல? நான் விசாரிச்சேன்னு சொல்லு தம்பி… பாருங்க. காலம் மனுஷங்களை எங்கெங்கெல்லாம் தூக்கி அடிச்சிடுது? அவுரு இல்லன்னா நானெல்லாம் மனுஷனாவே வாழ்ந்திருக்க முடியாது. எனக்குத் தகப்பன் மாதிரி…."

கண்கள் கலங்க நின்றார் ராஜு. அந்தக் காலத்திலேயே சினிமா நடிகரைப் போன்று அவரது அழகிய தோற்றம். கர்லிங் கிராப்பும், வசீகரமும் மனதில் பதிந்து போன பிம்பங்கள்.

அதே முகம் இப்பொழுது காலத்தால் எவ்வளவு மாற்றம் கொண்டிருக்கிறது?

"என்ன தம்பி, திடீர்னு ஊருக்கு வந்திருக்கீங்க?" இதை அவர் கேட்டபோது டிக்கெட் கொடுப்பதற்கான பெல் அடித்தது. அந்தச் சத்தம் சற்று வித்தியாசமாக இருந்தது.

"ஊர் நினைப்பு வந்தது. கிளம்பி வந்துட்டேன்."

"சரி தம்பி, ஊர்ல அம்மா, அண்ணன் எல்லாரும் சுகந்தானே? அப்பாட்ட நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க…. மறந்துடாதீங்க."

சொல்லிவிட்டு இருகைகளாலும் இவன் முகத்தை அணைத்துப் பிடித்து, வருடிக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டார் ராஜு.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பார்.

"ஏன் தம்பி, தரை டிக்கெட்டுக்குப் போறீங்க? பெஞ்சு டிக்கெட் எடுங்க" என்று. ஆனால் தரை டிக்கெட்டுக்குப் போக வேண்டுமென்பதுதான் இவன் எண்ணமாக இருந்தது.

நீண்ட குகை போன்ற பொந்திற்குள் நுழைந்து வெளியே வரவேண்டும். எத்தனை படங்கள் பார்த்திருப்பான் அப்படி. சிவாஜி படமாய் ஓடி ஓடிப் பார்த்தானே? ஏழு மணிப் படத்திற்கு நாலு மணிக்கே நிற்பார்கள் அங்கே. அந்தப் பொந்தில் எப்படித்தான் அடைந்து கிடந்து, மூச்சு வாங்கி, இன்று நினைக்கவே சிரிப்பாய் இருந்தது இவனுக்கு.

அந்த டிக்கெட் கவுன்டர் இன்னும் அப்படியேதான் இருந்தது. ஒரு மாற்றமில்லை. தியேட்டரின் முகப்புத் தோற்றம் கூட மாறவேயில்லை. அதுவே இவனுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.
ரூ.5/- என்று சுவற்றின் மேலே பெயின்ட் போய், பாதி மங்கி மறைந்த எழுத்துப் பார்த்ததும் சந்தேகம் வந்தது இவனுக்கு.

"தரை டிக்கெட் தானே?" தன்னையறியாமால் கேட்டு விட்டான் ஒருவரிடம். “தரை டிக்கெட்டெல்லாம் இப்ப ஏதுங்க?” என்று ஒரு மாதிரியாய் இவனைப் பார்த்துக் கொண்டே சொன்னார் அவர்.

அப்பா கூட அபூர்வமாய்ச் சினிமா போனாலும், தரை டிக்கெட்தான் போவார். இல்லையென்றால் ராஜு மாமா அவனைக் கூட்டிப் போவார்.

"வெள்ளிக்கிழமை படம் மாத்துறதே உனக்காகத்தான் போலிருக்கு… அதென்ன அப்படியொரு சினிமாப் பைத்தியம்? கடையிலே ராத்திரி ரெண்டாம் அடுப்படி வேலை பார்க்கிறே? அது முடிஞ்சு செகன்ட் ஷோவா? காலை நாலு மணிக்குத் திரும்ப எழுந்திரிக்க வேண்டாமா. உடம்பு என்னத்துக்கு ஆறது?" என்று கடிந்து கொள்வார்.

அப்பாவின் பேச்சு வேதவாக்கு ராஜுவுக்கு. ஆளே மாறிப் போனார் சட்டென்று. அவ்வளவு மரியாதை அப்பாவிடம்.

அவரின் மூன்று பெண்டுகளுக்கும் வரன் பார்த்தது முடித்தவர் அப்பாதான்.
படி அரிசி ஒரு ரூபாய் விற்ற காலம் அது. சந்தைப்பக்கம் பெரிய ஓலைக் கொட்டானை விரித்து மலை போல் குவிந்து கிடக்கும் அரிசி. ஆனாலும் அதையும் வள்ளிசாகப் பத்துப் படி வாங்கி வைப்போம் என்பதற்குப் பணம் இருக்காது வீட்டில். எல்லாம் செட்டியார் கடைக் கடன்தான். கடனில்லாமல் அந்தச் சொற்ப சம்பளத்தில் எப்படிக் கூட்டிக் கழிப்பது?

"ஏம்ப்பா, நாளெல்லாம் நீங்க நெருப்பு முன்னால நின்னு உழைக்கிறத்துக்கு மூணு ரூபாதான் சம்பளமா? எத்தனை வருஷமா இந்தக் கொடுமை? சம்பள உயர்வு கேட்பீங்களா இல்ல மாட்டீங்களா?" அடுக்கினான் ஒரு முறை.

அப்பா மனதிலும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ – முதலாளியிடம் எல்லோருக்குமாகப் பேசி சம்பளத்தைப் உயர்த்தி வாங்கினார்.

"பிரச்சனைகளின் போது தனியா விலகிக்க முடியுமா, ஒண்ணாச் சேர்ந்து டீ குடிக்கவும், அரட்டையடிக்கவும் மட்டும்தானா தோழமை?" என்றார் அப்பா.

கிருஷ்ணா விலாஸில் எல்லோருடைய சம்பளமும் கூடியது. வெளியே பராபரியானது. பிற இடங்களிலும் இதன் எதிரொலி. ஊதிய மாற்றம் தவிர்க்க முடியாததானது.

தொழிலாளர் பிரச்சனைகளில் ரொம்ப அக்கறை செலுத்துவார் அப்பா.

"டேய் கதிர்… வேலு இருமிக்கிட்டே இருக்கான். ஜி.ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போய் மருந்து வாங்கிக் கொடு அவனுக்கு" என்று விட்டு அவன் வேலையான மாவு அரைப்பதை இவர் தொடர்வார்.

பணியாளர்கள் வீட்டில் யாராவது படுத்துவிட்டால், இங்கிருந்து காய் சாம்பார், ரசம் போகும்.
"மாஸ்டர் செய்தா சரிதான்." முதலாளி ஒன்றும் சொல்லமாட்டார். அப்பாவின் சொல்லுக்கும் செயலுக்கும் அத்தனை மதிப்பு அப்பொழுது.

மேல மந்தையில் பொதுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் கூட்டிக்கொண்டு போய்விடுவார் அப்பா.
"இன்னைக்கு பி.ஆர். பேசறார். வா போவோம்" என்று ஒரு குழந்தையைப் போல குதூகலமாய் இவனை அழைத்துச் செல்வார். அம்மா ஒன்றுமே சொல்லமாட்டாள். அவளுக்கு அப்பாவைப் பற்றிய தீர்மானங்கள் சில உண்டு.

"நாம நம்ம வேலையைச் சரியாகவும் முழுமையாகவும், செய்யுறதுலதான் நம்ம கௌரவமேயிருக்கு. அந்த அளவுக்கான கடமையுணர்வு நமக்கு கட்டாயம் வேணும். அங்கதான் தொழிலாளி தலை நிமிர்ந்து நிற்க முடியும். அது ஒரு சுய கௌரவமான விஷயம். அந்த அளவுக்கு அதோட வீர்யத்தை உள் வாங்கணும்."

அப்பாவின் பேச்சுக்கள் இவனை பிரமிக்க வைக்கும்.

டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் இவன். வரிசையாக மரபெஞ்சுகள். தரை வரிசையே இல்லை என்பது மனதுக்கு ஏக்கத்தைக் கொடுத்தது.

தெரிந்த முகங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒன்றுகூட இல்லை. தியேட்டரின் உட்புறங்களில் நிறைய மாற்றம். அவசர வழித்தகரக் கதவுகளுக்கு அப்பால் இருந்துகொண்டு ஓட்டை வழியே படம் பார்ப்பார்கள் பலர். முதலாளி ஆட்களை ஏவி வெந்நீரை ஊற்றச் செய்வார். என்ன கொடுமை இது என்று புகைவார் அப்பா. "பார்த்தா பார்த்திட்டுப் போகட்டுமே? கழுத்து வலிச்சா போகப் போறான். இதுக்காக வெந்நீரை ஊத்தணுமா?" என்று அவர் இருக்கையில் தடுக்க முயல்வார்.

படத்தில் மனம் லயிக்கவில்லை. தியேட்டரில் தரை டிக்கெட்டில் மூத்திர வாடையை மூக்கில் வாங்கிக் கொண்டு படம் பார்த்த சுகம் வருமா?

வெளியே வந்துவிட்டான். சாலையின் இருபக்கமும் பார்த்தவாறே நடந்தான். செல்லம் சவுண்ட் சர்வீஸ் வந்தபோது கால் தானாகவே நின்றது. அருகிலே இருந்த சலூனைக் காணவில்லை. இந்தப் பக்கம் ஒரு லாண்டரி. அதையும் காணோம். அவன் தன் சட்டை ஒன்றைத் தொலைத்தது நினைவு வந்தது இவனுக்கு. பாதிப்பணம் தந்தான் அவன். மறுத்துவிட்டான் இவன்.

சலூனுக்கு இறக்கத்தில் ஒரு தெரு. அங்குதான் மாட்டுக்கு லாடம் அடிப்பார்கள். இவனோடு படித்த மதுரைவீரன் அவன் அப்பா நீலமேகத்தோடு சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான்.

மாட்டுக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்யும் ஒருவர் எப்படி மிருதங்கம் வாசிக்கிறார்? ஆச்சரியம்தான் இவனுக்கு. ஒருமுறை பஜனை மடத்தில் கச்சேரி விழா நடந்தபோது ஒரு பிரபல பாடகருக்கு பக்க வாத்தியமாக மிருதங்க வித்வான் வராதபோது, நீலமேகம்தான் வாசித்தார்.
செல்லம் சவுண்ட் சர்வீஸ் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருப்பார் ஒரு வட்டிக்கடைக்கார். அவரைத் தேடியது கண்கள். அப்பா அவரிடம் போய் ஒருமுறை நூறு ரூபாய் கடன் வாங்கிவரச் சொன்னார். பத்து ரூபாய் வட்டி எடுத்துக்கொண்டு தொண்ணூறு கொடுப்பார் அவர். இவன் போய் நின்றதும் சில்லரையை நீட்டி டீ வாங்கி வரச் சொன்னார் அவர்; முடியாது என்றுவிட்டான் இவன்.
அம்மாவிடம் போய் சொல்லும்போதே அழுகை வந்துவிட்டது இவனுக்கு.

"அவர் நமக்குக் கடன் கொடுத்து உதவுறார் இல்லையா? வயசுல பெரியவர் ஒரு உதவியா நாம இதை அவருக்கு செய்தா என்ன? தப்பில்லையே?" என்றாள் அம்மா – இவனுக்குச் சமாதானமாகவில்லை.

அடுத்தமுறை கடன் வாங்க அண்ணனை அனுப்பினார் அப்பா. கடன் வாங்குவதே மனதுக்கு உகந்த விஷயமாக இல்லை அப்போது. ஆனாலும் அப்படியெல்லாம் செய்யாமால் இருந்திருந்தால் இன்று இந்த நிலை எட்டப்பட்டிருக்குமா? பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்த அப்பாவின் தியாகங்கள் எத்தனை அளப்பரியது?

சினிமாவுக்குப் போவதற்கு பதிலாக அந்த ராஜு மாமாவோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாம். அநியாயமாய்த் தவறவிட்டாயிற்று சந்தர்ப்பத்தை. ஊரும் இடமும் தலைகீழாய் மாறிப் போய்க் கிடக்கும் நிலையில் எங்கே கண்டுபிடிப்பது அவரை?

கழுதை வயது ஆகிறதேயொழிய அதற்குரிய மன முதிர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கைகூடியிருக்கிறதா? மனசு சங்கடம் கொண்டது இவனுக்கு.

இல்லையென்றால் இப்படி வந்ததும் வராததுமாக சினிமாவுக்குக் கிளம்பி வருவோமா? மனிதர்கள் என்னதான் வளர்ச்சி பெற்றாலும், அனுபவங்களை எட்டினாலும், அவர்களது பால்ய காலத்து நினைவுகளும், செயல்களும் அவர்களைச் சட்டென்று குழந்தைகளாக்கிவிடுகின்றன என்பது எத்தனை சரி?

ஊரில் தெரிந்த முகங்கள் என்று எதுவுமே தென்படாதது தான் தன்னை இப்படி இழுத்துக்கொண்டு வந்துவிட்டதோ? எப்படியானாலும் சரி பழைய முக்கியமான இடங்களையெல்லாம் பார்க்காமல் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.

காலையில் எழுந்து சிறு வயதில் நீச்சல் பழகிய வயற்காட்டு தண்டபாணி கிணறுக்கு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதற்கு முன் ஓடியாடிக் குளித்த ஆற்றங்கரையையும், அதையொட்டிய பெருமாள் கோயில் பள்ளிக்கூடத்தையும் பார்த்துவிட மனம் விழைந்தது. ஆற்றுமேட்டிலுள்ள தென்னந்தோப்பில் சேவல்கட்டு நடக்கும்.

அந்தத் தென்னந்தோப்புக்கு அப்பால் உள்ள பொட்டல் நிலத்தில்தான் திருடர்கள் கொண்டு வந்து போட்டிருந்த அம்மாவின் டிரங்கு பெட்டி கிடந்தது.

நம்ம வீட்டுக்குக்குக் கூடத் திருடன் வந்திருக்கான் பாரு என்று அப்பா தமாஷ் பண்ணினார் அன்று. எதிர்நீச்சல் சினிமா பார்த்து வந்த செகன்ட் ஷோ இரவு அது. "வாழ்க்கையிலே எதிர்நீச்சல் போடுறவன் வீடுன்னு தெரியாது அவனுங்களுக்கு. தெரிஞ்சிருந்தா நிச்சயம் நம்ம வீட்ல திருடன் வந்திருக்க மாட்டாங்க" என்றார் அப்பா.

செயல் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு வாழ்க்கையில் கஷ்டங்களையும் சோகங்களையும் ஏமாற்றங்களையும் பின்னுக்குத் தள்ளியவர் அப்பா.

தன்னோடு அப்பாவும் இப்பொழுது வந்திருந்தாரேயானால் அவரின் நினைவலைகள் எவ்வாறிருக்கும்?

"நாற்பதாண்டு காலம் ஓய்வில்லாம நான் உழைச்ச ஊரு இது. என் குழந்தைகளையெல்லாம் அந்த உழைப்புலதான் ஆளாக்கி நிறுத்தியிருக்கேன். மனுஷன் சாகறவரைக்கும் உழைச்சிட்டே இருக்கணும். அதுலதான் பெருமை. நான் இந்த ஊர்லயே கடைசி வரைக்கும் இருந்துடுறேன். என் மூச்சு இங்கேயே போகட்டுமே…" குழந்தைபோல அப்பா கண் கலங்குவதாய் நினைத்து நெகிழ்ந்தான் கணேசன்.

About The Author