வாசனையின் நிறம்

மூக்கைப் பிடித்துக் கொண்டு காவிரிப் படித்துறையில் உட்கார்ந்திருந்த ராமபத்ர கனபாடிகளை யாரோ அவசரமாகக் கூப்பிடும் குரல் கேட்டது.

"யார் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை.. அனைத்தையும் படைப்பவரான அந்த ஒளி வடிவைத் தியானிக்கிறேன்."

வெள்ளமாய் நுரையாய் வெண்மையாய் சில நேரம் வண்டல் சேர விசித்திரமான வண்ணத்தில் சுழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த காவிரிக்கும் இப்போது வறுமை வந்துவிட்டது – மணல் காடு – போனால் போகிறதென்று துளி அடையாளமாய்

தெற்குக் கரையோரம் நூலாய் வகிடு பிரித்து ஓடும் பரிதாபம் –
– நாம் இனிமையானவற்றையே பேசுவோம் ?
– அதையே யோசிப்போம் –
– அதையே நாடுவோம் –

"ஓய் உம்மைத்தான்யா… சதா என்ன தபஸ் வேண்டியிருக்கு. காவிரிக்கரையில் மூக்கைப் பிடிச்சுண்டே உட்கார்ந்திருந்தா ஆச்சா. லௌகீகம் புரிஞ்சுக்கணும். பொழப்பப்பாரும் முதல்ல. மாங்குடியிலே அவசர காரியம். பத்து நாளும் நீர்தான் பண்ணியாகணும். உம்மை ஊர் ஊரா சல்லடை போட்டுத் தேடினா – இங்கே உட்கார்ந்திருக்கீர். சீக்கிரமா கிளம்பும்… நல்ல வருமானம்!"

"இதுவென்ன புதுசாய் அழைப்பு? யாரும் சீந்தாத மனுஷனாய் ஆன பிறகு இப்போ என்ன கரிசனம். உபதேசம்? வருமானம் பற்றிய அறிவிப்பு – நாலு வேதம், சாஸ்திரம், புராணம் கரைச்சுக் குடிச்சவன் திருவையாறு சீனிவாச ஸ்ரௌதிகளிடம் நாலு வருஷம் குருகுலவாசம் மாதிரி அனுபவப் படிப்பு. பிரயோஜனம்? இதை வச்சு வியாபாரம் பண்ற சாமர்த்தியமில்லே. சமத்தில்லே. பத்து நாள் தாடி. துவைத்த வேஷ்டி, சின்னக் குடுமி, ஏகப்பட்ட சுருக்கங்களோட மூஞ்சி, வெற்றிலைக் காவியேறிய பற்கள்… எடுபடுமோ – போதுமோ சரியோ?

காலத்திற்கேற்ப பெரிய வண்டி – பட்டுக் கலர் வேஷ்டி கண்ணைப் பறிக்கற மாதிரி மேல் வஸ்திரம் – கோணலாக முடிந்த குடுமி, நாசூக்காகச் செதுக்கிய தாடி – நெற்றியிலே சந்தனக் கீற்று. பெரிய குங்குமப்பொட்டு, உசந்த கடிகாரம், கழுத்திலே தாம்புக் கயிறு மாதிரி தடிமனான செயின், செல்போன், பான்பராக், இடத்துக்குத் தகுந்தாற்போல, சம்பாவனைக்கு ஏத்தப்ல மந்திரம், வளைஞ்சு குனிஞ்சு பேசற சாதுர்யப் பேச்சு. இதெல்லாம் பெரிய குவாலிபிகேஷன் புரோகிதத்திற்கு. எம்.ஏ மாதிரி பி.எச்டி.மாதிரி – இப்போ இதொன்றுமில்லாமல் வெறும் வித்தைக்கு மதிப்பு ஏது மரியாதை ஏது?

தர்மாம்பாளுக்குப் பிடிக்குமோ, காலத்தை அனுசரிக்காதவனோடு குடித்தனம் சாத்தியமோ. இது பற்றியெல்லாம் பேசவோ கேட்காமலோ இருந்தால்தான் என்ன. புரிந்து கொள்ள முடியாதோ?

சேது சொல்வான் அடிக்கடி –

"மாமி வானத்திலிருந்து குதித்த தேவதை."

எந்த வார்த்தைகளுக்கும் வியக்கிறதாயில்லை என்ற வைராக்யமோ. இதற்கு மௌன மொழியில்தான் பதில் – அதுவே அதிகம் என்கிற எண்ணத்தில் வானத்தில் எதையோ தேடுவதில் அவசரம்?

நீளவாக்கில் நாலு கட்டு வீடு – பெரிய திண்ணை – ரேழி, முற்றம் – தாழ்வாரம் ஊஞ்சல் – இடைக்கட்டு – சமையல் – சாப்பாட்டுக் கூடம் – வடக்கு மூலையில் பெரிய ஜகடைக் கிணறு – துவைக்கும் கல் – பெரிய கொல்லை – வாசலுக்கும் கொல்லைக்கும் ஒரு நடை போய் வந்தாலே கால் கெஞ்சும். தஞ்சாவூர் ராஜா ரகுநாத நாயக்கர் காலத்திலே தானமாக் கட்டிக் கொடுத்த வீடு. அப்போ நாயக்கர்கிட்டே மந்திரியா இருந்த கோவிந்த தீட்சதர் ஏகப்பட்ட உபகாரம் பண்ணினதாச் சொல்வார்கள். கொல்லைப்படி இறங்கினா பத்தடி தள்ளி கோரை வாய்க்கால். அதையும் தாண்டினால் நாலுவேலி அசல் நஞ்சை – தாத்தாவும் அப்பாவும் சீட்டாடி தொலைச்சப்புறமும் மிச்சமாயிருந்தது ஏகப்பட்டது. இந்தப் பக்கத்திலே வரிசை வரிசையா இருக்கற அக்ரகாரங்களும் நிலபுலன்களும் இப்படி இனாமா வந்ததுதான். சதா திண்ணையிலே உட்கார்ந்து ஜெபிச்சிண்டு பொழுது போக்கறவாளுக்கு இவ்வளவு சொத்துக்களை உழைச்சுச் சம்பாதிக்க முடியுமோ? – யோக ஜாதகர்கள் – சொல்வதில் வெட்கமென்ன?

தர்மு பிரமாதமாக இருப்பாள். ஆடம்பரம் பிடிக்காது. நகை நட்டு பிடிக்காது. சாதாரண கவரிங் சங்கிலி, இந்த காலத்திலே யாரும் போட்டுக்கறதா தெரியலே. அப்படியொரு காது கம்மல்கள், சாயம்போன நூல் புடவை. அதையும் அலட்சியமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் லாவகம். என் அழகுக்கு அலங்காரம் தேவையில்லை என்பதுபோல் ஒருவித அலட்சிய பாவம். வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல் ஈரம் காய தலையைக் கோதிக்கொண்டு நின்றால் சவுந்தர்ய லகரி சட்டென்று நினைவுக்கு வரும்.

…பத்மப்ரியாம் பத்மாக்ஷீம், பத்ம சுந்தரீம்…

அம்பாளின் தரிசனம் மேன்மையானது. வசீகரிப்பது – அந்த அருள் பார்வை உலகத்தை ரட்சிக்கும்.

காத்யாயனி தேவியை அறிந்து கொள்வோம் – துர்காதேவியின் நினைவைத் தியானிப்போம் – கன்யா குமரியைச் சரணடைவோம் – நானே காற்றைப்போல் இயங்குகிறேன். வானைவிட உயர்ந்தவள். இந்த பூமியைவிட மேலானவள். இவ்வாறெல்லாம் என் மகிமை உள்ளது. எல்லா உலகங்களிலும் நான் நிறைந்திருக்கிறேன். அதுபோல் வானையும் என் உடலால் தொடுகிறேன்.

இந்த ரட்சிப்பிலே உலகம் சுகமாகச் சுழல்கிறது. எல்லாமே நலம் என்றறிவித்துப் பறக்கிறது ஒரு சின்னக் குருவி –
"ராமபத்ரன், ராமபத்ர ஸ்வாமி என்னய்யா மணிக்கணக்கா தியானம் பண்ணிண்டிருக்கீர். கூப்பிடறது காதிலே விழலே. எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீர்." ஆற்றின் அக்கரையில் மேளச் சத்தம் கேட்கிறது. நாதஸ்வர இசை காற்றில் மிதந்து வருகிறது. உலகத்தை ரம்மியப்படுத்தும் வல்லமை வேறெந்த வாத்தியத்திற்கும் இல்லை. தர்முவோடு இருப்பதால் ஒட்டிக் கொண்ட வாசனை.

காவிரிப் படித்துறை மேல்படியைத் தாண்டும் தண்ணீர். தர்மு பாடுவாள். சன்னக்குரல். லேசாக அரைக்கண்கள் மூடியபடி ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பதைப்போல். "நாதலோலுடை", கல்யாண வசந்தம் மெலிதான அதே நேரம் – கம்பீரமாய் மிடுக்காய் ராஜ நடையில் அது சஞ்சரிக்கும். காற்றுத்துகள்களுக்குள் புகுந்து கொண்டு வானவெளியெங்கும் வியாபிக்கும். அதுவோர் அற்புதம். "எல்லாம் கேள்வி ஞானம்தான்" என்பாள்.

"தியாகராஜ உத்சவத்தில் பாடினால் என்ன மாமி நல்ல குரலாச்சே" யாராவது கேட்டால் சிரிப்புதான் பதில். இந்த சிரிப்பின் பொருள் என்னவாக இருக்கும்?

"உத்சவத்தில் தியாகராஜரை யார் நினைக்கறா? பெரிய மனுஷா விவகாரமா ஆயிட்டுது. ஆடம்பரம், பளபளப்பு, பந்தல் அலங்காரம் கலர் கலரா எலக்ட்ரிக் லைட்கள், போட்டோ, வீடியோக்கள் பொய்ச் சிரிப்பு, விலையுயர்ந்த கார் வரிசை எல்லாமே வந்தாச்சு. சங்கீதத்தை புனருத்தாரணம் செய்ய வந்தவர்களைப்போல நீளநீளமான பேச்சு.. பத்திரிகைக்காரா தடபுடல் விமரிசனங்கள், மந்திரிமார்கள் – எல்லாமே ஆரவாரமாப்போச்சு. பணம் வசூல் டொனேஷன் என ஆகிப்போச்சு. எல்லாமே ஒருவித வியாபாரம். தியாகராஜ ஸ்வாமிகளும் அவருடைய கீர்த்தனைகளும் மூலதனம்.

அத்தனை ஆரவாரங்களும்போய் தியாகராஜர் தனித்து விடப்படும் தருணம் தர்முவின் நேரம். சந்நிதிக்குப் பக்கத்திலே இருக்கும் பலா மரத்தடியிலே வசமாக உட்கார்ந்து கொள்வாள். இரண்டு சிநேகிதிகளின் துணை. நேரம் போவது தெரியாது. ‘சக்கனி ராஜ’ பாடுவாள். சக்கனி ராஜ… மார்க்கமு… அப்புறம் தனக்குப் பிடித்தமான சாருகேசி – ஒற்றைக்குரல் சன்னமாய் இழைய மரப்பொந்துகளிலிருந்து பறவைகள் குதூகலத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு தடவை கிறீச்ட்டுவிட்டு எங்களுக்கும் பாடத் தெரியும் என அறிவித்து உள்ளே முடங்கும்.

சற்று பக்கத்தில் நீண்ட மதில் சுவர் தாண்டி மயான ஜ்வாலை. வெளிச்சம் காட்டும். சங்கீதம், மரணம் – ரெண்டுமே நித்தியமானது நிச்சியமானது. குதூகலப்படுத்துவது.

தர்முவை எழுப்ப யாரால் முடியும்? அவளுடைய சங்கீதத்தை யாரால் நிறுத்த முடியும்! பசி தாகம், சுகம், துக்கம் எல்லாம் தாண்டியவளாய் – அவ்வப்போது நிகழும் இதன் முழு அர்த்தம் விளங்காது. ஒருவேளை சத்குருவிடம் எதையோ அவருக்குப் புரிந்த சங்கீத மொழியில் விண்ணப்பம் செய்கிறாளோ?

ஒட்டிய வயிற்றோடும் எளிய தம்புராவோடும், பூஞ்சைக் கண்களோடும் உஞ்ச விருத்திப் பாத்திரத்தோடு திருவையாறு மாடவீதிகளில் காலைக் குளிரின் இதத்தில் சொற்களை சூழக் கூட்டிக் கொண்டு சகிருதயனாய் வலம் வந்த சத்குருவே இதோ உனக்குப் பிடித்த கரகரப்ரியா, நாதநாமக் க்ரியை, யதுகுல காம்போதி, சிம்மேந்திர மத்திமம் என்று வரிசையாய்… அலுக்காது அவளுக்கு. இருட்டிய பிறகும் வெகுநேரம் தொடரும்.

"இரவின் தேவி இன்று உனக்கு அருளட்டும் பறவைகள் மரங்களிலுள்ள கூடுகளுக்குத் திரும்புவது போல அவளுடைய வரவின் காரணமாய் நாம் வீட்டிற்குத் திரும்புவோம்."

"போகலாம்…" புடவையில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தட்டியவாறே எழும்போது எதுவும் பேசத் தோன்றாது – கூட அழைத்துச் செல்வது தவிர வேறு வழி? மாதத்திற்கு ஒரு தடவை இந்த தபஸ் நிச்சயம்.

"மாமா குடிக்க ஜெலம் வேணும் –

– வேதம் கத்துக்க வரட்டுமா ரொம்ப நாளா ஆசை.
– தலைவலி மாத்திரை இருக்கா…
– சங்கீதம் கத்துக்க வரலாமா. மாமி சொல்லித் தருவாளா?
– மாமியை எங்கே காணும். வெளியே வரமாட்டேங்கறா."

வரிசையாய்க் குரல்கள். ஏழு நாள் தாடியை தடவிக் கொண்டு ஆகாயத்தை வெறிக்கப் பார்ப்பது வசதிதான். ஸ்திரமற்ற மனசுக்கு எதுவும் வழி –

உன்னைத்தேடி பலவீனனாக அலைபவனுக்கு யார் உடனடி உணவு கொடுக்கிறார்களோ அவர் வள்ளல். அவருக்கு ஏராளமான வெகுமதிகள் காத்திருக்கின்றன.

வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் பொசுக்கெனப் புறப்பட்டு பூமியை நோக்கிப் பாய்ந்து கீழிறங்கி ஒளிர்ந்து நடுவில் காணாமல் போகிறது –

"உடம்பு லேசாய்ச் சுடுகிறதே. தர்முவிற்கு உடம்பு முடியலையோ. ஜுரமோ. புரண்டு புரண்டு படுக்கும் அவஸ்தையென்ன? அந்த லேசான இருட்டில் பளிச்சென்று தெரிந்தாள். சூடியிருந்த மல்லிகைச் சரத்திலிருந்து இதமான வாசனை வேறு" –

கொலுசுகளின் சிணுங்கல்களோ. இவளின் முனகலோ, மனசின் தாபமோ – உடம்பின் இம்சையோ – தர்மு என்ன ஆச்சு…?
லேசாக பயம் பிடித்துக் கொண்டது.

"அமைதி பெறுவதற்கு உலகில் என்னென்ன வழிகள் உளவோ, அவற்றை மேலானவர்கள் அறிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு அமைதியைக் கொண்டு வரட்டும். எனக்கு சாந்தியைத் தரட்டும். பயமின்மையைத் தரட்டும். பூரணமாகக் காப்பாற்றட்டும். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருக்கும் தேவதேவனே என்னைக் காப்பாற்று -"

தற்செயலா தூக்கத்திலா முடியாமையினாலா, கனவிலா புரியலையே தர்மு! காலைத் தூக்கி மேலே போட்டாள். நெஞ்சில் விழுந்த பாதங்கள் சுடுமோ? சுடுகிறதே!

"தூங்கிட்டேளா…"

வெள்ளை வெளேரென்று உடம்பு. கல்யாணமாகி ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு முழுசாய்ப் பார்க்கும் உடம்பு. நெருப்பாய்ச் சுட்டது. தென்றலாய் – சட்டென்று குளிர்ச்சியாய் – இரண்டும் கலந்த கலவையாய் அதிசயமாய் புதுசாய் இருந்தது கண்டு ஏற்பட்ட நடுக்கம் மாளாது.

"தர்மு அடி தர்மூ… என்ன ஆச்சு உனக்கு?"

"உனது ஒவ்வோர் அங்கங்களிலிருந்தும் ஒவ்வொரு முடியிலிருந்தும் நோய் தோன்றுகிற ஒவ்வொரு இடங்களையும் சுட்டுப் பொசுக்குகிறேன். உனது தொடைகளிலிருந்து, மூட்டுகளிலிருந்து, குதிகால்களிலிருந்து இடுப்புப் பகுதியிலிருந்து உன் உள்ளுறுப்பின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் நோயை விரட்டுகிறேன்" –

"அர்த்தமுள்ள இந்த இரவில் அர்த்தமற்ற எதை முணுமுணுக்கிறீர்கள்" – தர்மு புரண்டாள். மூச்சுக் காற்றின் நெருப்பு எலும்புக் கூடாயிருந்த மார்பைச் சுட்டது. முனகினாள். லேசாகப் புலம்பினாள்.

இதுவரை பார்த்திராத தர்மு… புதிதாய் யாரிவள்? எங்கிருந்து இந்த மூர்க்கம்? மலரின் மென்மைக்கு எதிரிடையான இதுவென்ன! அவளிடமிருந்து பெறும் வாசமே புதிதாய் புதிராய் இருந்தது. என்ன வன்மமிது? எதன் பொருட்டு இந்த யுத்தம். எப்படி இந்த அசுர பலம்? நாராய்க் கிழித்தெறிந்து விடுவாயோ-

"தர்மு… தர்மு… விடு… விட்டுடு என்னை. என் கதறல் கேட்கிறதோ!"

இது கேட்கிறதோ! வீட்டின் சுவர்களைப் பிளந்து கொண்டு தெருவையே அதிர வைக்கும். உறங்கிக் கொண்டிருந்த எல்லாமும் இதென்ன அபயக்குரல் என்று திடுக்கிட்டு எழுந்து அல்லாடும்.

பெரிய கைகள், புஷ்டியான பருத்த துடைகள், லேசாக ஒட்டிய வயிறு, செழிப்பான ஸ்தனங்கள், படுக்கை நிறைய விழுந்து பரந்து கிடக்கும் கூந்தல், சிவந்து போன முகம், துடிதுடிக்கும் உதடுகள், உஷ்ணமான மூச்சுக்காற்றை விசிறிக் கொண்டு அரற்றினாள். இங்கு மங்குமாய்ப் புரண்டாள். சந்நதம் வந்தவளைப்போல முறுக்கிக் கொண்டாள்.

அக்னிதேவனை சபையின் மிக உயர்ந்த இடத்திலிருந்து கூப்பிடுகிறேன். இந்த சபையில் எழுந்தருள்க. என் எல்லாத் துன்பங்களையும் பொசுக்கட்டும். தவறுகளுக்கு அப்பால் எடுத்துச் செல்லட்டும். என்றுமிலா அதிசயமாய் நெருப்பில் தகிக்கும் இவளைக் குளிர்விக்கும் வழியைத் தரட்டும்.

"என்ன இது" என்னும் சலிப்பான வேம்பு தடவிய சொல் கொல்கிறது என்னை. தர்மு சாந்தமாயிரு. "சாந்தமுலேது சௌக்யமு லேது…" பாடுவாயே –

இந்தப் பூஞ்சையான உடம்பை உடும்பாய்ச் சுற்றிப் பின்னியிருந்த கால்களை வெறுப்பாய் விடுவித்துக் கொண்டு ஓரமாய்க் கிடக்கும் புடவையை அள்ளி மேலே மூடிக்கொண்டு நகர்ந்து படுத்தபோது மெல்லிய விசும்பல் கேட்டது – லட்ஜை துறந்த அதிசியம் –

மௌனமானாள். பேச்சற்று நிற்றல் கொடுமையானது. அவ்வப்போது உம், ஆமாம், இல்லை, சரி என்ற சிக்கனமான வார்த்தைகளின் பயன்பாடு பேச்சாகுமோ!

கூப்பிட்டுச் சலித்து காணாமால்போன குரலுக்குப்பின் இன்னொரு புதுக்குரல் கூப்பிட்டது. "ராமபத்ரா… உடனே வா, அவசரம்… ஆரு… மேலத்தெரு கணேசனா… ஏன் இப்படி மாற்றிமாற்றித் தொந்தரவு -"

கிழக்குச் சூரியனின் கதிர்களின் உக்கிரம் தங்கமுடியலே. சின்னக் காவிரிக் குட்டையில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. சண்டையில்லை சச்சரவில்லை. விரோதமில்லை. அழுக்கு நீர். அதிலேயே மூழ்கி அதிலேயே சுவாசித்து அதிலேயே பசியாறி – யாருக்கு வரும் இந்தக்கலை. இந்த நிம்மதி…?

"ராமபத்ரா! நாராயணன் போயிட்டான். மாரை லேசா வலிக்கறதுன்னான். நாற்காலியிலேருந்து சாய்ஞ்சான். சட்னு பிராணன் போயிட்டுது. அஞ்சே நிமிஷம் எல்லாம் முடிஞ்சு போச்சு. கான்பூரிலிருந்து பிள்ளையாண்டான் ஃபிளைட் புடிச்சு வந்துட்டான். கலிபோர்னியாவிலிருந்து பொண்ணை எதிர்பார்த்திண்டிருக்கோம். வந்திண்டே இருக்காளாம். நீ வா காரியத்த ஆரம்பிச்சுடு..".
நாராயணா, கடல் மாதிரி பூர்வீக சொத்து. ஊரையே வளைச்சு மேலே மேலே சேர்த்து அடுத்த ஊருக்குத் தாவி சுற்று வட்டார கிராமங்களையும் வளைச்சு… எப்படி சாத்தியமாயிற்று! அரண்மனை மாதிரி வீடு. டவுன்லே நாலஞ்சு பங்களா, மூணு ரைஸ்மில், கவர்மெண்ட் கான்ட்ராக்ட் – ரோடு போடறது, பாலம் கட்டறதுன்னு அள்ளி அள்ளிக் குவிச்சே… என்ன ஆச்சு. அஞ்சு நிமிஷம்தான். அஞ்சு நிமிஷமென்ன? க்ஷணம் போறாதோ?

நினைப்பு தடுமாறுகிறது. லட்சம் வருஷங்கள் ஆனாலும் என்ன? தர்மு. ஆழமாப்பதிஞ்ச நினைப்பை மறக்க முடியுமோ. நிழலாய்ப் படிஞ்ச உருவங்களை அழிக்க முடியுமோ?

– தொலைவிலுள்ள ஆகாயத்தையும் இந்த பூமியையும் நிலவையும் சமுத்திரத்தையும் காலமே படைத்தது. இருந்தவை இனி இருக்கப் போகிறவை. எல்லாமே காலத்திலிருந்து வெளிவந்தவை. காலம் உன்னதமானது. காலம் மேன்மை யானது. மறைய வேண்டியவை காலத்தாலே மறையும் –

வெளியூர் போய்த் திரும்ப நாழியாகிவிட்டது. நன்றாக இருட்டிவிட்டது. "இரவின் தேவியே துர்மிருகங்கள், விஷ ஜந்துக்கள் அணுகாமலிருக்கச் செய். அவளே ஒளியாய் நின்று இருளைப் போக்குகிறாள்!"

ஊர் அடங்கிப் போயிருந்தது.

தர்முவின் குரல் லேசாய் உற்சாகமாய் கூடத்து ஊஞ்சலைத் தாண்டி – இதென்ன – அட!
தர்மு சிணுங்குவது புதிதாய் இருந்தது.
தர்மு சிரிப்பது புதிதாய் இருந்தது.
தர்முவின் குதூகலம் புதிதாய் இருந்தது.

முழு உடம்போடு நாராயணன். தர்மு வெள்ளைக் குழந்தையாய் முழுதாய் – முழுக்கவே அர்ப்பணித்தவளாய் – அவன் மேல் பரவிக் கிடந்தாள்.

என்னது என்ன இது. ஒருபோதும் நம்ப முடியாத என்ன இது…?

"நாராயணா விட்டுட்டுப் போயிடாதே. நீ ரட்சகன். உன் மூர்க்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. உன் மார்பில் காடாய் மண்டியிருக்கும் மயிர் கற்றைகள் நெஞ்சைக் குத்தும் வலி அற்புதமானது. அதன் லயம் அற்புதமானது. அது தேவையாய் இருக்கிறது. இதற்காக நான் காத்திருந்தேன் யுகமாய். என் சங்கீதம் போலவே இதுவும் இதமான ஒன்று – லயத்தை நிறுத்திவிட்டுப் போயிடாதே. நான் உயிரை விட்டுவிடுவேன் அது தரிக்காது -"

தர்முவின் முகம் பிரகாசமாய்த் தெரிய நாராயணன் முகத்தில் விழுந்து மறைக்கும் கூந்தல் கற்றைகளை ஒதுக்கிவிட்டு ஆக்ரோஷமாய்ப் புரட்டிப் போடும் போது –

‘காலுக்கடியில் பூமி பிளந்ததா! கண்ணெதிரில் நிகழும் பூகம்பத்தை – அதன் சீறலை, அது வெட்டிச் சாய்க்கும்
எல்லாவற்றையும் பார்க்க இயலாமல் கண்கள் இருள’ – எங்கும் புகை மூட்டம்.

உடம்பை முறுக்கிக் கொண்டு பரந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு, தாறுமாறாய்க் கிடந்த துணிகளைத் தேடித்தேடி உடம்பில் சுற்றிக் கொண்டு, ஆறாய் வழியும் வியர்வையைத் துடைத்து –

தர்மு… நாதலோலுடை… ப்ரம்மா நந்த… – கல்யாண வசந்தத்தின் கிறுகிறுப்பு – இதுவா -?

திசையும் வழியும் புரியாவிடினும் பயணம் நிற்குமோ? நிற்காமல் நீண்டது. பாதங்களின் வலி பெரிதல்ல. தேவீ.

"என்னய்யா நீர். கூப்பிடக் கூப்பிட யோக நிஷ்டையில் இருக்கீர். உம்மைக் கண்டுபிடிக்க எங்கெங்கே அலைஞ்சோம் தெரியுமா? வைதீகா எல்லாம் வருமானம் தேடி பட்டணம் போயாச்சு. நீராவது உபகாரமா இருக்கீறே… எல்லாரும் வந்தாச்சு – நாலு மந்திரத்தை ஸ்பஷ்டமாச் சொல்லி அவனைக் கடையேத்து. நன்னா வாழ்ந்தவன். அல்பாயுசிலே போயிட்டான்".
அவன் பயணம் இனிமையாக இருக்கட்டும். தர்மு கூட அங்கே காத்திருக்கலாம். ‘நாதநாமக் க்ரியை’ முணுமுணுத்துக் கொண்டும் உடம்பின் சூடு மாறாமலும் –

தண்ணீரின் தேவதைகளே! உயர்ந்த சுகத்திற்கு நீங்கள் காரணமாய் இருக்கிறீர்கள். அத்தகைய நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் மேலானதுமான அகநோக்கையும் ஆற்றலையும் அளியுங்கள் –

கைப்பிடி எள்ளையும் தண்ணீரையும் சேர்த்து நடுங்கும் கரங்களால் மந்தகாசமான முகத்தோடு இப்போதும் நீளமாகக் கிடக்கும் நாராயணனின் ஜில்லென்ற பாதங்களில் தெளித்து மர்ஜன மந்திரங்களை நிறுத்தி நிதானமாய் உச்சரிக்க ஆரம்பித்தார்-
-தர்மு. உனக்கும்-

About The Author

3 Comments

Comments are closed.