வாத்தும் சாத்தானும்

ஜானியும், சாலியும் உடன்பிறந்தவர்கள். அண்ணன் ஜானி, தங்கை சாலி.

ஒரு முறை தாத்தா பாட்டியைப் பார்க்க பண்ணைக்குச் சென்றார்கள் இருவரும். அங்கு ஜானிக்கு வெளியில் விளையாட உண்டிவில் கிடைத்தது. பலமுறை முயற்சித்தும் அவனால் உண்டிவில்லால் குறி பார்த்து அடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பினான்.

வழியில் பாட்டி பிரியமாக வளர்த்து வந்த வாத்தைப் பார்த்தான். ஏதோ ஒரு வேகத்தில் உண்டிவில்லால் அடிக்க, வாத்தின் நெற்றியில் கல் பட்டு அது இறந்துவிட்டது. பயத்தில் இறந்த வாத்தினை அருகில் இருந்த புதரில் மறைத்து வைத்தான். அதை அவன் சகோதரி சாலி பார்த்துவிட்டாள்.

பாட்டி மதிய சாப்பாடு முடிந்ததும், சாலியை பாத்திரம் கழுவ அழைத்தாள். ஆனால் சாலிக்கு அதில் விருப்பமில்லாததால் பாட்டியிடம் "ஜானி உங்களுக்கு உதவி செய்ய ஆவலாக இருக்கிறான்" என்று சொல்லிவிட்டாள். பின் ஜானியிடம் ரகசியமாக "வாத்து நினைவிருக்கட்டும்" என்று சொன்னாள். உடனே ஜானி பயந்து போய் பாட்டிக்கு உதவச் சென்றான்.

மற்றொரு நாள் தாத்தா அவர்களை மீன் பிடிக்க அழைத்தார். பாட்டி, "சாலி எனக்கு இரவு உணவு தயாரிக்க உதவியாக இங்கேயே இருக்கட்டும்" என்றாள். ஆனால் சாலிக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆசை. உடனே, "ஜானி பாட்டிக்குத் துணையாக இருக்க விரும்புகிறான், இல்லையா ஜானி?" என்று அர்த்தத்துடன் கேட்டாள்

பல நாட்கள் இதே போல சாலி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் அவள் ஜானியை மிரட்டி செய்ய வைத்தாள். ஒரு நாள் ஜானி அதற்கு மேல் சாலியின் மிரட்டலைப் பொறுக்க முடியாதவனாக, பாட்டியிடம் வாத்து இறந்த விபரம் சொல்லி மன்னிப்புக் கேட்டான்.

பாட்டி "என் செல்லக் கண்ணா, அன்றே எனக்கு வாத்து இறந்தது தெரியும்; அன்றே மன்னித்து விட்டேன்; நீயாகச் சொல்வாய் எனக் காத்திருந்தேன், எவ்வளவு நாள் நீ சாலிக்கு அடிமையாக இருப்பாய் என பொறுத்திருந்தேன்" என்றாள்.

இதே போலத்தான் நாம் செய்வது அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார். சாத்தானுக்கு அடிமையாகாமல் நம் தவறை உணர்ந்து அவரிடமே மன்னிப்புக் கேட்டால் அவர் நம்மை மன்னித்து கருணை காட்டுவார்.

(மூலம் : funlok.com)

About The Author