வாரம் ஒரு பக்கம் (10)

அது என்ன பிக்மேலியன் தத்துவம்?

ஹார்வர்ட் மேலாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் கண்டுபிடித்தார்கள். ஒருவரிடம் அவருடைய மேலதிகாரி உயர்ந்த எதிர்பார்ப்புக்கள் வைத்திருந்தால் அவர் அதை நிச்சயம் நிறைவேற்றியே தீருவார் என்பதுதான் அது.

ஆசிரியர் அவரது மாணவன் நூறு மதிப்பெண்கள் பெறுவான் என்கிற எதிர்பார்ப்பை வைத்திருந்தால் அந்த மாணவன் உந்து சக்தியோடு செயல்பட்டு அந்த இலக்கை அடைவான். அதனால்தான் ஆசிரியர்கள் எதிர்மறையான சிந்தனை உடையவர்களாக இருக்கக் கூடாது என்பது. அவர்கள் நினைத்தால் மிகச் சாதாரணமான மாணவர்களைக் கூட உற்சாகப்படுத்தி, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளிர்ந்து மணம் பரப்பச் செய்ய முடியும். இதற்குப் ‘பிக்மேலியன் தத்துவம்’ என்று ஆய்வாளர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்.

நாம் யாரை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அவர்கள் நடத்தையும் மாறுகிறது. அதைப் போலவே, சில மேலதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்கள் நிச்சயம் தோற்றுப் போகும்படிப் பார்த்துக் கொள்வார்கள். மிகச் சிறந்த திறமையாளர்கள் கூட அப்படிப்பட்டவர்களிடம் பணியாற்றும்போது தன்னம்பிக்கையை இழந்து தவிடு பொடியாகி விடுவார்கள்.

நம் அணுகுமுறை மற்றவர்கள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் அலாதியானது. இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் பணியாற்றும்போது அவர்களுக்கு இரண்டு கரங்கள் அல்ல, தேவைப்படும்போது இருபதாயிரம் கரங்கள் கூட முளைத்து விடுகின்றன. அவர்களோடு வரும் அத்தனை பேரும் நெம்புகோல்களாக இருந்து அவர்கள் சோர்வைச் சுண்டி எறியச் செய்து விடுகிறார்கள்.

இந்த வார ‘ஊருக்கு உபதேசம்‘!

எல்லோரிடமும் உயர்ந்த எதிர்பார்ப்புக்களை வையுங்கள்! உன்னதமானவர்களை உருவாக்குங்கள்!

நன்றி:
வெ.இறையன்பு அவர்களின் ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ நூலிலிருந்து.

About The Author