வாரம் ஒரு பக்கம் (2)

நம்மிடம் ஆலோசனை கேட்க வருபவர்கள் எல்லாருமே நம்மை மதித்து, நாம் சொல்லும் யோசனைகளை அப்படியே சிரமேற்கொண்டு செயல்படத்தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு! அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வருகிறார்கள்.

முதலில் அவர்கள் நினைத்ததையே நாம் சொல்லி விட்டால் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் சொன்னபடியே செய்துவிட்டேன் என்பார்கள். ஆனால், அவர்கள் நினைப்பதற்கு மாறான ஆலோசனையை வழங்கினால் அப்புறம் நம் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்க மாட்டார்கள்.

குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, புத்தகத்துக்குத் தலைப்பு கேட்பது இவையெல்லாம் அந்த ரகத்தில் அடங்கும். ஆகவே, நாம் அதற்காக மிகவும் சிந்தித்து, மிகவும் பிரயாசைப்பட்டுப் பெயரைச் சொன்னால் பின்னால் அவர்கள் நாம் சொன்ன பெயரைச் சூட்டவில்லையே என்ற ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆகவே, போகிற போக்கில் நமக்குத் தோன்றியதைச் சொல்ல வேண்டுமே தவிர ரொம்பவும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. கொப்பரையில், ஓட்டோடு ஒட்டாத பருப்பு மாதிரி சில விஷயங்களில் பட்டும் படாமல் இருப்பது கசப்புணர்வு தோன்றாமல் காப்பாற்றும்.

அடுத்தவர்களுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு "உங்களுக்குத் தெரியாததா?" என்று சிரித்துக்கொண்டே மழுப்பி நழுவுவதே இப்படிப்பட்ட சூழல்களில் சாலச் சிறந்தது! அதற்கு மேலும் அவர்கள் வற்புறுத்தினால் ‘இதுவும் ஒரு வழி’ என்ற ரீதியில் கருத்து சொல்லலாமே தவிர, இதுதான் ஒரே தீர்வு என்கிற பாணியில் அடித்துச் சொல்லக் கூடாது!

கலீல் கிப்ரான் கூறியது போல, ஆலோசனை கேட்க வருபவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்க முன்பே முடிவு செய்து விட்டவர்கள். இதையேதான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னார்,"புத்திசாலிகளுக்கு ஆலோசனை அவசியமில்லை. முட்டாள்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!" என்று.

ஆகவே ‘இந்த வார ஊருக்கு உபதேசம்’ நம்மை ஆலோசனை கேட்க வருகிறார்களே என்று பெருமையில் மிதக்காமல் நிதர்சனத்தைப் புரிந்து நடந்து கொள்ளவும்!

நன்றி: திரு.இறையன்பு அவர்களின் ‘ஏழாவது அறிவு‘ நூல்.

About The Author