வாரம் ஒரு பக்கம் (3)

12 வயது மாணவன் ஒருவன். படிக்கிறேனென்று அறைக்குச் செல்வான். ஏதோ புத்தகங்களைத் தேடுவான். திரும்ப வந்து அமர்ந்து கொள்வான்.

இதனால்தான், மனம் ஒரு குரங்கு என்கிறோம். இதைக் கேட்டுக் குரங்குக்கு ஒருமுறை கோபம் வந்துவிட்டதாம்.

"அப்படியென்றால் எங்களால் எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது என்கிறீர்களா? எங்கே, நிரூபியுங்கள், பார்க்கலாம்!" என்றதாம்.

அதனிடம் ஒரு செடியைக் கொடுத்து, “இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நட்டுப் பெரிதாக வளர்த்த்துக் காட்டு” என்றார்களாம்.

குரங்கு அந்தச் செடியை எடுத்துக் கொண்டு போய்த் தோட்டத்தில் சரியாகவே நட்டதாம். முறையாகத் தண்ணீரும் ஊற்றியதாம். பார்த்தவர்கள் ‘குரங்குக்கு இதெல்லாம் கூடத் தெரிந்திருக்கிறதே’ என்று வியந்தார்களாம்.

கொஞ்ச நேரத்திலேயே அது செடியைப் பிடுங்கி உயரத் தூக்கிப் பார்த்து உயரத்தைக் கண்ணால் அளந்ததாம். கேட்டவர்களுக்கு, "இல்லை, செடி வளர்ந்திருக்கிறதா என்று பார்த்தேன்" என்றதாம் குரங்கு. இப்படியே ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, நட்ட செடியைப் பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்ததாம். பின், செடி எப்படி வளரும்? அதனால்தான் குரங்கு மனம் என்கிறோம். அதற்குப் பொறுமையும் இல்லை, கவனமும் இல்லை.

நம் மனமும் இப்படித்தான் பல சமயங்களில் இந்தக் குரங்கைப்போல எதையும் உருப்படியாகச் செய்ய விட்டாமல் தடுக்கிறது.
ஜோஷு என்கிற ஜென் துறவியிடம் சீடன் ஒருவன் கேட்டான்.

"என் மனதில் ஒன்றுமே இல்லை. நிர்மலமாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்?" என்று.

"அதைத் தூக்கி வெளியில் எறி!" என்று ஜோஷு சொன்னார்.

"நான் ஒன்றுமே இல்லை என்கிறேன். இல்லாத ஒன்றை எப்படித் தூக்கி எறிவது?" என்று மீண்டும் கேட்டான் சீடன்.

"ஓ! உன் பிரச்சினை புரிகிறது. வேறுவழியில்லை, அதைச் சுமந்து கொண்டு திரி" என்றார் ஜோஷு.

நாமும் பல சமயங்களில் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் குரங்கு மனம் படுத்துகிறது.

ஆக, இந்த வார ‘ஊருக்கு உபதேசம்‘:

மனசை அலைபாயவிடாதீங்க!
எடுத்த காரியத்தை முடிப்பதில் உறுதியாக இருங்க!

மூலம்: திரு.சோம.வள்ளியப்பன் அவர்களின் ‘உஷார்! உள்ளே பார்!’ நூல்.

About The Author