வாரம் ஒரு பக்கம்(7)

அடுத்தவர்களை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல வகைகளில் நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செல்லுமிடத்தையெல்லாம் சாம்ராஜ்யமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், குறையையே காண்பவர்கள் வீட்டையே சிறையாக்கிக் கொள்கிறார்கள்.

பூதக் கண்ணாடி போட்டுக்கொண்டு குறைகளையே பார்க்கும்போது உடலில் அமிலத்தன்மை அதிகமாகிறது, குடல் புண்ணாகிறது, அட்ரினலீன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது, உடல் வியர்க்கிறது. இப்படி நம் உறுப்புக்கள் ஓவர்டைம் செய்வதால் உடல் தளர்ந்து இளமையிலேயே முதுமை தட்டிவிடுகிறது. எப்போதும் நல்லதையே காண்பவர்கள் இளமையுடன் இருக்கிறார்கள். அவர்கள் எருக்கம் பூவில் உள்ள மருத்துவத்தையும் தர்ப்பைப் பூவில் இருக்கும் மகத்துவத்தையும் ஒன்றாகவே உணர்வார்கள்!
ஒரே ஒரு நாள் சோதனை செய்து பார்க்கலாம். அன்று, காலை முதல் காண்கிற எல்லோரிடமும் அன்புடன் இருப்போம். அவர்களிடம் நல்லனவற்றையே காண்போம். அவர்களுடைய தவறுகளை ஒதுக்கி வைப்போம். அன்று இரவு திரும்பிப் பார்த்தால் களைப்பு எதுவும் ஏற்படாமல் மகிழ்ச்சியுடன் உற்சாகம் பொங்குவதை உணர்வோம். நம்முடன் இருப்பவர்களும் நம்மைச் சார்ந்தவர்களும் உற்சாகப் பந்தாக இருப்பதையும் உணர முடியும்.

பெரிய வெள்ளைத்தாளில் கருப்புப் புள்ளி போன்றவை குற்றம், குறைகள். குற்றம் பார்க்கில் அவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். அந்த மனோ நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்! அது போன்ற தேவையில்லாத, சற்றும் நன்மை பயக்காத மனோ நிலைகளைச் சற்றே களைந்து, நல்லதைப் பார்க்க மனத்தைப் பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்! தரும புத்திரருக்குக் கெட்டவர்களே கண்ணில் படவில்லையாம், துரியோதனனுக்கு நல்லவர்களே கண்ணில் படவில்லையாம். எல்லாவற்றுக்கும் மனோநிலையே காரணம். நாம் யாரும் நீதிபதிகள் அல்ல – மற்றவர்களிடம் குறை கண்டு தீர்ப்பு சொல்ல!

இந்த வார ‘ஊருக்கு உபதேசம்’...

எல்லோரும் நல்லவரே என்று சேர்ந்து பாடுவோம்!

மூலம்: ‘எப்போதும் இன்புற்றிருக்க – இறையன்பு’ மற்றும் வேறு சில கட்டுரைகளின் சாரம்.

About The Author