விடியும் முன் – இசை விமர்சனம்

"விடியும் முன்". புதுமுக இயக்குநர் பாலாஜி கே.குமார் இயக்கும் திரைப்படம். ஓர் இரவில் சில கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் கதையாம். படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

தீராத மெளனம்

தன்வியின் மயக்கும் குரலில் பாடல் ஆரம்பித்து, மெல்ல நகர்ந்து கிதாரின் மெலிதான மீட்டல்களுடன் பயணிக்கிறது. ஒரு பெண்ணி்ன் மனநிலையை விவரிக்கும் பாடல். சமகாலத்தில் வந்திருக்கும் வித்தியாசமான பாடல்!

முடிவில்லா மெளனங்கள் கல்லறையின் வேதங்கள்!
காலத்தின் மெளனங்கள் காயத்தைக் குறைக்கும்!

விடியாத இரவு

கிதாரின் சீண்டல்களுடன் ஆரம்பிக்கிறது பாடல். விதியால் ஒருவன் தத்துவம் பாடுகிறான். இசையமைப்பாளர் கிரிஷ்ஷே பாடியிருப்பது கூடுதல் பலம்! துடிப்பான இசை, நேர்த்தியாகக் கட்டமைத்திருக்கிறார்கள்! கிதாரின் ஒலி மட்டும் செவிவிட்டகல மறுக்கிறது! இந்தப் பாடல் நெடுங்காலத்துக்குக் கிரிஷ்ஷின் பெயர் சொல்லும்.

நேரம் சிதறி விழ
நினைவு தவறி எழ
மாயக்குமிழி இதுவோ!
உணர்வின் நதிக்கரையின்
ஓரம் வசித்த ஒரு
படகின் பாதை எதுவோ!

பெண்ணே

முந்தைய பாடலுக்கு நேர்மாறாக இங்கே ஒரு மெலடி. யாருப்பா அந்த சுசீலா ராமன்! லண்டனில் இருந்து வந்திருக்கும் இவர், தமிழ் சினிமாவில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்! கிரிஷ்ஷையும் பாராட்டியாக வேண்டும், ஒலிச் சேர்ப்பில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். சின்னச் சின்ன ஒலிகளும் அழகாகக் கேட்கின்றன.

உன் ஆசைகள் போதும்
என் ஆயுதம் ஆகும்
உன் காவலைக் கொண்டு
ஆயுள் கைதி ஆக்கிவிடு!


தீராத மெளனம்

அதே பாடல்தான். ஆனால், பாடியிருப்பவர் கிரிஷ். வாத்தியங்களில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கிறது. முந்தையதில் பியானோ ஒலித்த இடங்களில் இதில் கிதார் இசைக்கிறது.

Rage (ஆழ்ந்த சீற்றம்)

மென்மையாக ஒரு மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் இசை, பின்னர் பேஸ் கிதாருடன் இணைந்து தடதடத்துச் சீற்றம் கொள்கிறது. எங்கேயும் நூல் அளவு கூடப் பாட்டின் இயல்பு தவறாது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருவித எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கிறது.

Redemption

இதில் ஒலிக்கும் கோரஸ் குரல்கள் நல்ல ரசனை! சிறிது நேரம்தான் என்றாலும் கேட்கும்போது ஒருவிதப் பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

மெரினாவில் அறிமுகமானவர் இதில் மீண்டும் ஒருமுறை தன் திறமையை நிரூபித்துள்ளார்! இசை மட்டும் அல்லாது வரிகளும் இவரே எழுதியிருக்கிறார். இதில் ஆரோ 11.1 என்கிற தொழில்நுட்பத்தில் ஒலிகளைச் சேர்த்திருக்கிறார்களாம். அது காட்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம்! பார்க்கலாம்…

விடியும் முன் – ரம்யமான பொழுது.

About The Author