விண்ணைத் தொட்ட அக்னி புத்திரி டெசி தாமஸ்

வீட்டுக்குள் காலையில் எழுந்தவுடன் காபி போடத் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது பெண்களுக்கும் அக்னிக்குமான பந்தம். புராணங்களிலும் பெண்களை நெருப்புடன் தொடர்புபடுத்தி பல செய்திகள் கூறப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையைத் தன் கண்களாலேயே எரித்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கை ஆரம்பிக்க சாட்சியாக அக்னியை வைப்பதும் நம்மில் பழக்கமாக உள்ளது. இப்படி தொன்று தொட்டு பெண்களுக்கும் அக்னிக்கும் தொடர்பு இருப்பதால் இன்றைய நவநாகரீக உலகில் அக்னி ஏவுகணைகளை விட்டு வெற்றி காணவும் செய்திருக்கிறார்கள் நம் தேசத்து பெண்கள். பெண்கள் வீட்டுக்குள் போராடிய காலங்கள் மலையேறி இப்போது விண் களத்தில் தங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இது இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான அணுசக்தி ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. 1958ல் ஆரம்பிக்கப்பட்டு பிரித்வி, அக்னி-1, அக்னி-2, அக்னி-2ஏ, அக்னி-3 என்று ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. விண்களத்தில் விடும் ஏவுகணைகள் மட்டுமின்றி நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை உருவாக்குவதிலும் வல்லமை படைத்திருக்கிறது.

கடந்த மே 7 அன்று அக்னி-3 ஏவுகணை ஒரிசாவில் வீலர் தீவிலிருந்து ஏவப்பட்டது. அதனை இயக்கியது ஒரு பெண் விஞ்ஞானி. இந்த ஏவுகணை 3000 கிமீக்கு அப்பால் சென்று தாக்கக் கூடிய வல்லமை உடையது. ஏவப்பட்ட 13 நிமிடங்களிலேயே மஞ்சள் புகை கக்க சீறிப் பாய்ந்து இலக்கை தொட்டது. இந்த ஏவுகணையின் முக்கிய பிளஸ், அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லும் அதன் திறன். இந்த வெற்றி மூலம் அந்த ஏவுகணையின் இயக்குனரான டெசி தாமஸ் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். 45 வயது பெண் விஞ்ஞானியான டெசி தாமஸ் 20 வருடமாக இந்த ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிகிறார்.

கேரளாவில் உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர் டெசி தாமஸ். தன்னுடைய பள்ளிப்படிப்பை ராக்கெட் நிலையமான திருவனந்தபுரத்தில் படித்ததாலேயோ என்னவோ இவருக்கு சிறு வயதிலிருந்தே ராக்கெட் விஞ்ஞானத்தின் மீது ஆர்வம். 1988ல் அப்துல் கலாம் அவர்களால் அக்னி புராஜக்ட் 5 பெண் விஞ்ஞானிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. பூனேவில் நவீன தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு முறை பற்றி மாஸ்டர் டிகிரியை முடித்துவிட்டு அக்னி புராஜக்ட்டில் சேர்ந்தார் டெசி. டூவர் ஏவுகணைகளை இயக்கும் எரிபொருட்களை தயாரிப்பதில் வல்லுனராக இருந்த்தால் அக்னி-2 ஏவுகணை உருவாக்கும் திட்டத்தில் 95 பெண் விஞ்ஞானிகளுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இது போன்ற உயர்ந்த பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டது அதுவே முதன் முறையாகும். அந்த வகையில் முதல் பெண் விஞ்ஞான இயக்குனர் என்ற பெயரும் தாமஸுக்கு கிடைத்தது .

இவரது வளர்ச்சியைப் பார்த்த பெரிய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பணத்தைக் காட்டி இவரை கவர்ந்திழுக்க முயற்சித்தன. ஆனால் அதற்கெல்லாம் மசியாமல் தாமஸ் நாட்டுக்காக உழைப்பதில் தீவிரமாக இருந்தார். அக்னி-3லும் இவரே தலைமைப் பொறுப்பு ஏற்க நேர்ந்தது. 5 ஆண்டுகளாக அக்னி-3 ஏவுகணை சோதனையில் ஈடுபட்டனர். இது அக்னி-2 ஐ விட 1000 கிமீ கூடுதல் வேகத்தில் பாயக் கூடியது. இதற்கு கூடுதல் உந்து சக்தி கொடுப்பதற்காக புத்தம் புதிய திட எரிபொருள் ராக்கெட் எஞ்சினை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இது 16 மீட்டர் நீளமும் 48 டன் எடையும் கொண்டது. 

2006 ஜூலை 12 அன்று அக்னி-3 ஏவப்பட்டது. சில தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏவுகணை வங்கக் கடலில் விழுந்தது. அப்போது தாமஸும் மற்ற விஞ்ஞானிகளும் மனம் தளராமல் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தனர். பயங்கர அதிர்வின் காரணமாகவே ஏவுகணை விண்ணை அடையாமல் பாதியிலேயே வீழ்ந்தது என்பதைக் கண்டறிந்து சரி செய்தனர்.

தாமஸ் வேலை செய்யும் இடத்தில் ஆண், பெண் என்று பாலின பாகுபாடு பார்ப்பதில்லை. அவரவர் வேலைக்கு ஏற்ற பொறுப்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்பார். தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார். நாட்டில் பெண்கள் அவர்களுடைய பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கையில் தான் நாட்டுப் பாதுகாப்பிற்காக வேலை பார்த்துக் கொண்டிருப்பதை எண்ணி பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறுகிறார் தாமஸ்.

அக்னி-3 ஏவப்பட ஒரிசா சென்றிருந்த போது இவரது ஒரே மகன் தேஜாஸ் 12 ம் வகுப்புத் தேர்வை ஹைதராபாத்தில் எழுதிக் கொண்டிருந்தார். தாமஸுடைய கணவர் இந்திய கப்பல் படையில் கேப்டனாகப் பணியாற்றுகிறார். என்னுடைய இந்த வெற்றியில் என் மகன் மற்றும் கணவருடைய ஒத்துழைப்பும் இருக்கிறது. அவர்கள் என்னைப் புரிந்து கொண்டதனால் என்னால் இவ்வாறு செயல்பட முடிகிறது என்று தாமஸ் கூறுகிறார்.

நாட்டிற்காகப் பணியாற்றினாலும் மகனுக்கு நல்ல தாயாகவும், கணவருக்கு நல்ல மனைவியாகவும் தன் கடமையைச் செய்யத் தவறாத குடும்பப் பெண்மணியாகவும் தாமஸ் விளங்குகிறார்.

மொத்தம் 7000 விஞ்ஞானிகள் DRDOவில் உள்ளனர். 11,000 தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் 950 பெண் விஞ்ஞானிகள் மற்றும் 1050 தொழில் நுட்ப பெண் வல்லுனர்கள் அடக்கம். மற்ற துறைகளான எலக்ட்ரானிக் துறையில் 325 பெண்கள், ஏரோநாடிக்ஸ் 180, ஏவுகணை 13, ஆயுதப்படை 105, வாழ்க்கை அறிவியல் 100, கப்பல் படை 70 என்று ஒவ்வொரு துறையிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இனி வரும் காலங்களில் பெண்களின் வளர்ச்சியை விண்ணளவு முட்டச் செய்யும்.

About The Author