வித்தகம் (2)

01.

‘உதவட்டுமா’
ஆங்கிலத்தில் பேசி பாட்டியின்
கூடையை எடுத்து வந்தான்
ஐந்து வயது சிறுவன்

மறக்காமல் பாட்டி அளித்த ஒற்றை
ரூபாயைத் தந்தையிடம் காட்டினான்
முதல் சம்பளம் என்று
போர்ட் மீட்டிங் அறையின் வெளியே
உச்சி மோர்ந்தார் அப்பா, மாறாகக்
குழந்தைப் பணி என்று பதறாமல்

அவர் அளித்த உண்டியலிலேயே இட்டு
காடுமலை தாண்டி, சட்டையில்
தொங்கவிடப்பட்ட கருப்புக் குடையுடன்
மழையில், படகில் அமர்ந்து அடுத்தவரைச் சந்தேகித்து
வெயிலில் நடந்து, நடந்து இட்டான்
வங்கியில் பத்திரமாய்.

வீடு திரும்பிய சிறுவனுக்கு
ஜலதோஷம் இருமலும் பின் தும்மலும்
ஆதரவாய் அன்னை தேய்த்தாள் களிம்பு
அன்பிலும், களிம்பிலும் முற்றிலுமாக
விடுதலை பெற்றான்

பின்னும் அறையில் அமர்ந்தபடி
மழையை ரசித்தான் ஜன்னல் வழியாக
அந்நிய நாட்டில் பணிபுரியும் அப்பாவுக்கு
கைப்பேசி வழி அனுப்பிவைத்தான் – மழையைப் படமாக்கி

அறிவான பால் குடித்து விஞ்ஞானியுமானான்
அதே ஐந்து வயதிற்குள் அதே அன்னை அளித்து
ஊட்டபானம் உறிஞ்சி தங்கப் பதக்கமும் வென்றான்
விளையாட்டிலும் படிப்பிலும்

எப்போதும் சிறுவன்.

*****

02.

சிறுமியோவெனில்,
பட்டுப் பாவாடைக்கு, தீபாவளிக்கு,
புத்தாண்டுக்கு, கிறிஸ்துமசுக்கு, ரம்ஜானுக்கு –
இக்கடையில், அக்கடையில் வாங்க
கை நீட்டி சிரிப்போடு அன்போடு
அழைத்தாள்

நல்ல நேர்மையான சோப்பு வாங்க சைக்கிளில்
சிறுமி புறப்பட்டாள், அன்னையோ
பதறிப்போனாள்-மாற்று சோப்பினால்
மகளுக்குத் திருமணம் தடைப்பட்டுப் போகுமோவென

தனித்துவிடப்பட்டாள் சிறுமி பள்ளியிலும்,
விளையாட்டு மைதானத்திலும்,
வாகனத்திலும் தலையின் பேன்
புரிந்தே இருந்தது அவளுக்குக் காரணம்
பின் அன்னை பேன் எடுத்து ஷாம்பு போட்டு
அனுப்பினாள் பள்ளிக்கு, அனைவருடனும் அலை
அலையாய் தலை ஆட்டி பெருமிதத்துடன்

ஊட்டசத்து மட்டுமின்றி ஊற்றும்
எண்ணெயிலும் ஆரோக்கியம் உவந்து அளிக்கிறாள்

எப்போதும் சிறுமி.

*****

03.

சிறுவர்கள் நிகழ்ச்சி அவர்களே வழங்க
தலையும், முடியும், தோலும் மற்றும் உடையும்
பளபளக்க, ஆண் குழந்தை, பெண் குழந்தை யாராயினும்
செழிப்பு வெளிப்பட, நிற்கும் நடக்கும்,
தொப்புள் தெரிய தொகுத்து வழங்கும்
பிஞ்சில் பழுத்து பெரிய திரை சின்னத்திரை
ஆட்டம் ஆடிப் பாட்டுப்பாடி இடுப்பை
ஆட்டி ஆட்டி, ஆடை பளபளக்க.

ஈன்ற பொழுதிலும் பெரிதுவப்பர் பெற்றோர்
சுற்றத்தார் மயங்க, இதில் இடம் அற்ற
பிள்ளையின் பெற்றோர் பொசுங்க

ஆயிரமும், பதினாயிரமும் பெற்று
பெருவாழ்வு பெறுவர் பெற்றோர்
பெருமிதத்துடன்.

*****

About The Author