விரட்டு – இசை விமர்சனம்

கட்டளையிடும் தலைப்புடன் புதுமுக இயக்குனர் குமார் இயக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசை அமைத்திருக்கிறார். பாடல்களை இசையுடன் அலசலாம் வாருங்கள்.

மெளனமே மெளனமே

முதல் பாடல் கிடாரின் மீட்டல்கள் மற்றும் ஆண்ட்ரியாவின் கிறக்க குரலுடன் ஆரம்பிக்கிறது. பின் சிற்சிறு பீட்டுகளும், வயலினும் சங்கமிக்க அருமையான மெலடியாக பரிணமிக்கிறது. ஹரிசரணும் இதை இணைந்து பாடியிருக்கிறார். இருவரும் காதலின் மொழியை அழகுற விளக்கியிருக்கிறார்கள். வரிகள் முடிகின்ற இடத்தினில் ஹரிசரண் பாடியிருக்கும் விதம் கவனத்தினை ஈர்க்கிறது.

"வா வா தோழி காற்றோடு நீந்தலாம்
கண்டங்கள் தாண்டலாம்
மேகமாடும் தேகம் தேகம்
வானம் தேடி சிறகுடன் போகலாம்."

என் லைஃபின் ஏஞ்சல் நீ

இதுவும் காதல் பாடல்தான்; காதலிதான் தேவதை. தேவதைக்காக தான் செய்திருப்பதையும், தேவதை செய்ய வேண்டியதையும் தவிப்புடன் பாடியிருக்கிறார் தரண். என்னதான் பாடல்களை பாடகர்கள் பாடினாலும், சிற்சில பாடல்களை இசையமைப்பாளர்களே பாடும்போது அதில் கூடுதல் உயிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்த விதி இளையராஜா முதல் தரண் வரை அனைவருக்கும் பொருந்துகிறது. தரணிடம் இது போன்ற பாடல்களை இன்னும் எதிர்பார்க்கலாம்.

"நான் சேரவா தீண்டவா ஓடவா தேடவா
சாகவா போராடவா என் காதலி
நீ யாரடி தேனடி கூறடி வந்து சேரடி உன்னைத்தானடி
நான் போராடி அடைவேனே"

விரட்டு

இது பல மாதங்கள் முன்பே படத்தை முன்னிலைப்படுத்துவதற்காக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிடாரும், ட்ரம்ஸும் பயன்படுத்திய விதம் நம்மையும் துள்ளி எழச் செய்கிறது. மென்மையாக ஆரம்பிக்கும் இப்பாடல் பின்னர் வேகமெடுத்து புருவம் உயர்த்தச் செய்கிறது. வாழ்க்கையை விரட்டிச் செல்லக் கற்றுத் தருகிறது. இதை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருப்பது நரேஷ்.

"கண்ணிமைக்கும் நேரத்திலே என்னைக் கொள்ளையிட்டுப் போகின்றாய்
மிச்சம் மீதி இல்லாமல் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகின்றாய்"

இது போக மீட்டா பானு என்று ஒரு குத்துப் பாட்டும் இருக்கிறது. மூன்றோடு நான்காக காற்றில் கரைகிறது. ஒருவேளை இதைப் படத்தின் வியாபாரத்திற்காக சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது.

தரண் குமார் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் கவனம் பெறக் கூடியவராக இருக்கிறார். இன்னும் அதிக படங்களை இவரிடம் இருந்து எதிர்பார்ப்போம்.

விரட்டு – காதல் கட்டளை

About The Author